ஓடுறதுக்கு வேற ஊரு கிடையாது!

மு.நியாஸ் அகமது, படம்: சு.குமரேசன்

ங்களுக்கு ஒரு 10x30 அளவில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீடும் ஒரு பெருமழையில் சேதாரமாகிவிட்டது. நீங்களே இன்னொருவர் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளீர்கள். உங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கதியும் என்னவென்று தெரிய வில்லை. இப்போது உங்களால் உற்சாகமாக இருக்க முடியுமா? புளியந்தோப்பு முத்துவால் முடியும்!

முத்துவை நாங்கள் சந்தித்தது ஒரு நள்ளிரவில். வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு தர்மபுரியில் இருந்து உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டிக்கொண்டு டிசம்பர் 3-ம் தேதி இரவு சென்னை புளியந்தோப்பு பகுதிக்குச்  சென்றிருந்தோம். இரவு 11 மணி இருக்கும்... நாங்கள் சென்றபோது ஏரியாவெங்கும் கழுத்தளவு தண்ணீர். அது தண்ணீர்கூட இல்லை; எல்லாம் கழிவு நீர். நிவாரணப் பொருட்களை விநியோகிக்க எங்களுக்கு உதவியாக வந்தவர்தான் முத்து. ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை நபர்கள் இருக்கி றார்கள், எந்த வீட்டில் குழந்தைகள் இருக்கி றார்கள், எந்த வீட்டில் பெரியவர்கள் இருக்கிறார்கள், யாருக்கு மருந்துப் பொருட்கள் தேவைப்படு கின்றன... என ஒவ்வொன்றையும் துல்லியமாகச் சொன்னார். 

நீண்டதூரப் பயணமும், கழுத்தளவு தண்ணீரில் நடந்து செல்வதும் எங்களை அயர்ச்சி அடைய வைத்திருந்தன. தலைக்கு மேல் மழை கொட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் சோர்வடையும் போதெல்லாம் உற்சாகமூட்டி இரவு முழுவதும் எங்களை உயிர்ப்புடன் வைத்திருந்தவர் முத்து. ஒரு புள்ளியில் வாய்விட்டே கேட்டுவிட்டேன்... “ஏங்க உங்களுக்கு நாங்க ஆறுதல் சொல்ல வந்தோமா, இல்லை நீங்க எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தீங்களான்னே தெரியலை. எப்படிங்க எல்லாத்தையும் இழந்த பிறகும் இப்படி சிரிச்சுக் கிட்டு இருக்க முடியுது?” கேட்ட பிறகுதான், அவசரப்பட்டுக் கேட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்வு வந்தது.

``நில்லு சார்... இந்த வீட்டுக்கு மட்டும் பிரெட் பாக்கெட் ரெண்டு எக்ஸ்ட்ரா கொடுத்துரலாம்'' என்றார். ``ஏன் முத்து, யாராவது குழந்தைங்க இருக்காங்களா?'' என்றதும், துணைக்கு வந்த முத்துவின் நண்பர்கள், “குழந்தையா... அதெல்லாம் எதுவும் இல்ல சார். அது அவன் ஆளு சார்... அக்கறையைப் பார்த்தீங்களா?” என்று கலாய்க்கிறார்கள்.

``டேய், சும்மா வாங்கடா.  அதெல்லாம் இல்லை சார், அது சும்மா ஃப்ரெண்ட்'' இப்படியே உற்சாகமாகப் பேசியவாறே வீடு வீடாக நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளித்து முடித்தபோது இரவு 2 மணி. முத்துவும் நானும் நிவாரணப் பொருட்கள் ஏற்றிவந்த வண்டியை நோக்கி தண்ணீருக்குள் நகர்ந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது முத்து, “எங்ககிட்ட எப்ப என்னா இருந்துச்சு சார், இப்ப ஒண்ணும் இல்லாமப் போறதுக்கு?” என்றார். “ஸாரி முத்து, நான் தெரியாமச் சொல்லிட்டேன்” என்றேன்.

“சார், இப்ப என்னாத்துக்கு நீ ஸாரியெல்லாம் கேட்கிற? நீ சொன்னதுக்காக இதைச் சொல்லலை சார்... எந்த கவர்மென்ட்டு சார் இதுவரைக்கும் நார்த் மெட்ராஸ்காரனை மனுஷனாப் பார்த்துச்சு?  ஊர்ல இருக்க எல்லா குப்பையையும் இங்க வந்து கொட்டுறானுங்க. கழுத்தளவு தண்ணி போகுது. எங்களைப் பார்க்க ஒரு நாதியும் வரலை. அதுக்காக என்னா சார் பண்ணுறது, சிரிக்காம இருக்க முடியுமா?” என்கிறார் சிரித்துக்கொண்டே.

``நாங்கதான் காலங்காலமா சென்னையில இருக்கோம். வெள்ளம் வந்தாலும், புயல் வந்தாலும் நாங்க இங்கதான் சார் இருப்போம்.  எங்களுக்கு ஓடுறதுக்கு வேற ஊரு கிடையாது.''

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசிக்கொண்டே வண்டி அருகே வந்துவிட்டோம். “சார், இன்னும் பிரெட், பிஸ்கட் வெச்சுருக்கியா?”

``ஏன் முத்து... இன்னும் உன் ஆளு வீட்டுக்கு வேணுமா?''

``நீயும் கலாய்க்காத சார்... மழையால பாதிக்கப்பட்ட சவுத் மெட்ராஸ்காரங்க கொஞ்ச பேரை வண்ணாரப்பேட்டையில தங்கவெச்சிருக் காங்க. அங்கயும் குழந்தைங்க இருக்கும்ல, அவங்களுக்கும் பசிக்கும்ல, அவங்களுக்குத்தான் சார்.''

ஆம்,இவர்கள்தான் நார்த் மெட்ராஸ்காரர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick