இனி என்ன செய்ய வேண்டும்?

வடிந்த வெள்ளம்... குவிந்த குப்பை! விகடன் டீம், படம்: ப.சரவணகுமார்

போர் முடிந்த நிலம்போல இருக்கிறது சென்னை. அடையாறு மற்றும் கூவத்தின் வெள்ள நீர் பெருக் கெடுத்து ஓடிய இடம் எங்கும் சர்வநாசம். வீடற்றோர் சாலைகளில் அகதிகளைப்போல அலைய, வீடுகளில் வசித்தோர் வெள்ளம் சிதைத்துப்போட்ட வீடுகளை சித்தபிரமை பிடித்ததுபோல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும்  40 ஆயிரம் வீடுகள் மழையில் மூழ்கின.  அனகாபுத்தூர் பகுதியில் 35 ஆயிரம் வீடுகள், பொழிச்சலூரில் 1,500 வீடுகள், திருநீர்மலையில் 4,200 வீடுகள், ஆலந்தூர், கொளப்பாக்கம் பகுதியில் 5,000 வீடுகள், சோழிங்கநல்லூர், கல்லுக்குட்டை பகுதியில் 15 ஆயிரம் வீடுகள், செம்மஞ்சேரியில் 13 ஆயிரம் வீடுகள், பெத்தேல் நகரில் 1,500 வீடுகள், பெருங்குடி, பர்மா நகர் காலனியில் 450 வீடுகள், வேளச்சேரியில் உள்ள பெரியார் நகர், காந்தி நகர், கானகம், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் 18 ஆயிரம் வீடுகள், காசி தியேட்டர் பின்புறம் உள்ள சூளை பள்ளம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரம் வீடுகள், கோட்டூர்புரம், கோட்டூர், சித்ரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 14 ஆயிரம் வீடுகள், ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட நமச்சிவாய நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் வீடுகள், எம்.எம்.டி.ஏ காலனியில் 12 ஆயிரம் வீடுகள் என லட்சக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் போக்கிடம் இல்லாமல் அருகில் இருந்த மண்டபங்களிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர். சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் வசித்த மக்கள் கூடுதலான துயரத்துக்கு ஆளானார்கள்.

மழைநீர் கொஞ்சம் வடிந்ததும் வீடுகளைப் பார்த்தால் சிறுநீர், மல நாற்றமும் கூவம் சகதியின் குமட்டலும் தரைத்தளம் எங்கும் பரவிக் கிடக்கின்றன. தெருவில் சாக்கடை ஓடினாலே மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடியவர்கள், வீடுகளில் புகுந்த சாக்கடையை எந்தக் கேள்வியும் கேட்காமல் வாரி வெளியே கொட்டுகிறார்கள். தெருவில் வீசப்பட்ட கழிவுகள் மற்றுமொரு பயங்கரம். மழைக்காகக் கொடுக்கப்பட்ட சாப்பாடு மீதமாகி குப்பைக்கூளங்களில் வீசப்பட்டு, அது நாற்றத்தின் எல்லையை விரிவுப்படுத்துகிறது. இப்போது வரை இந்த நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ‘இயல்பு நிலை திரும்பியது’ என்று சொல்வது பச்சைப் பொய். மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் என்பதற்காக, உண்மையை மறைப்பது மேற்கொண்டும் அழிவுக்கே வழிவகுக்கும். இப்போது உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியவை என்னென்ன?

மருத்துவ உதவிகள்...

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்த அனைத்து இடங்களிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வீடு சீரழிந்து, வீதிகள் சாக்கடையான போதிலும், தாங்கள் வாழ்ந்த  பகுதிகளை விட்டு வெளியேற மனம் இல்லாமல் அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்கள் மக்கள். எந்தவித சுகாதாரமும் இல்லாத குடிநீர் மற்றும் உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றனர். குழந்தை களுக்கும் இவற்றைத்தான் கொடுக்கின்றனர். இது பெரும் கேட்டைக் கொண்டுவரும்.

‘`பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததால் மஞ்சள்காமாலை ஏ, ஈ, காலரா, டைஃபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். குடிநீரில் எலியின் சிறுநீர் கலப்பதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதால், `லெப்டோஸ்பைரோசிஸ்’ என்ற எலிக் காய்ச்சல் வர எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. எலிக் காய்ச்சல் வராமல் தடுக்க ‘டாக்ஸி சைக்ளின்’ என்ற மருந்தை உடனே தருவது நல்லது. டைஃபாய்டு, மஞ்சள்காமாலை தடுப்பூசிகளின் விலை அதிகமாக இருப்பதால் அரசு இலவசமாக வழங்க வேண்டும். காலரா தடுப்பு மருந்துகளை உடனே தர வேண்டும். தண்ணீரைச் சுத்தப்படுத்த குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். மழைக்காலத்தில் நிமோனியா, பன்றிக்காய்ச்சல், டெங்கு போன்றவை பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். அரசு, மருத்துவக் குழுக்களை நியமித்திருந் தாலும், இன்னும் துரிதப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவர்களையும், ஓய்வு பெற்ற மருத்துவர்களையும் பெருமளவில் ஈடுபடுத்த வேண்டும். சுனாமி காலத்தில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையில்லாத மருந்துகளைக் கொடுத்தார்கள். இந்த முறை அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, ஒரே ஆளுக்கு இருமுறை தடுப்பூசி போடுவது, குழந்தை களுக்கு தேவையற்ற மருந்துகளைக் கொடுப்பதைத் தடுக்க வேண்டும். காலாவதியான மருந்துகளைக் கொடுத்தால் அது மேலும் பிரச்னைகளைக் கொண்டுவரும். எனவே அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அனைத்து அரசுத் துறைகளையும் இதில் ஈடுபடுத்தி மக்களைக் காக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.

குப்பைகளை அகற்றுங்கள்!

மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த எந்த வீதிகளுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். அந்தக் காட்சியை உங்களால் கண்கொண்டு பார்க்க முடியாது. வீதிகளின் இருமருங்கிலும் குவியல், குவியலாகக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை குப்பைகள் அல்ல. கடந்த வாரம் வரை வாழ்ந்துகொண்டிருந்த வீட்டின் பொருட்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ, கட்டில், மெத்தை, சமையல் பாத்திரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள், பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள், துணிமணிகள் எல்லாம் காலி. வெள்ள நீரின் சாக்கடை சகதி சகலத்தையும் துவம்சம் செய்துவிட்டது. மேற்கு சைதாப்பேட்டையில் அரிசி, பருப்பு மொத்த விற்பனை செய்யும் கோடவுனில் வெள்ளம் புகுந்துவிட்டது. நீர் வடிந்த நிலையில் கோடவுனில் இருந்து மலை, மலையாக தானியங்களை அள்ளி வெளியில் போட்டுள்ளனர். ஒரு மளிகைக்் கடை வாசலில் மொத்த கடையின் குப்பையும் குவிக்கப்பட்டுள்ளது. ஃபர்னிச்சர் கடைகளில் சோபாக்களும், மெத்தைகளும், கட்டில்களும் வாசல்களில் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இந்தக் காட்சிகள் கி.மீ கணக்கில் நீள்கிறது. இவற்றுடன் சாக்கடை சகதி கலந்திருக்கிறது. ஆடு, மாடு, கோழி, நாய்கள், எலிகள், பெருச்சாளிகள் எல்லாம் செத்துக் கிடக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து என்னவிதமான நோய்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம். எனவே முதல் வேலையாக இந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும். மாநகராட்சியில் இருக்கும் சில ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே செய்து முடிக்கும் வேலை அல்ல இது. அவர்களுக்கு ஏற்கெனவே இடுப்பு ஒடியும் வேலை இருக்கிறது. எனவே, இந்தப் பணியில் அந்தந்தத் தெருவாசிகளும், தன்னார்வ அமைப்புகளும், நிறுவனங்களும் உடனடியாக ஈடுபட வேண்டும். வேறு எதையும்விட இது மிக, மிக அவசரம்.

அதைவிட முக்கியம், அப்படி அகற்றப்படும் குப்பைகளை மறுபடியும் கூவத்திலும், அடையாறிலும், பெருங்குடியிலும், கொடுங்கை யூரிலும் கொண்டு கொட்டினால்,  அதைவிடக் கேடு வேறு எதுவும் இல்லை. பெருங்குடியில் இப்போது குப்பை கொட்டும் இடம் ஒரு சதுப்பு நிலம். அதைக் கெடுத்து வைத்ததன் விளைவைத்தான் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறோம். எனவே, அகற்றப்படும் குப்பைகளை எப்படிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பதற்கான தொழில்நுட்பங்களும் உடனடியாகத் தேவைப்படுகிறது. உச்சகட்ட முன்னுரிமையுடன் மேற்கொள்ள வேண்டிய வேலை இது. வேறு எந்த  உதவிகளைச் செய்வதற்கு முன்பும், குப்பைகளை அகற்ற வேண்டியதுதான் முதல் நிபந்தனை. இல்லை எனில், மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதாரத்தைவிட, இந்தக் குப்பைகள் அதிக சேதத்தை ஏற்படுத்திவிடும்.

நிவாரணப் பொருட்கள்...

நிவாரண உதவிகள் பல திசைகளில் இருந்தும் வருகின்றன. ஆனால், இதில் ஓர் மையப்படுத்திய ஒருங்கிணைப்பு இல்லை. கடலூரின் உள்ளடங்கிய கிராமங்கள் பலவற்றுக்கு இதுவரை ஒரு நிவாரணப் பொருள் வாகனமும் செல்லவில்லை. முன்பகுதியில் உள்ளவர்களே மீண்டும், மீண்டும் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்கின்றனர். போதாக்குறைக்கு சென்னையிலும் கடலூரிலும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை வழிமறித்துக் கொள்ளையிடும் சம்பவங்களும் நடக்கத் தொடங்கியுள்ளன. இதை ஒழுங்குபடுத்த அரசு தன்வசம் இருக்கும் காவல் துறையைக் களம் இறக்க வேண்டும். நிவாரணப் பணிகளையும் செய்யவில்லை, யாரோ செய்யும் நிவாரணங் களையும் முறைப்படுத்த இயலவில்லை என்றால், பிறகு எதற்குத்தான் இருக்கிறது இந்த அரசு?

பொதுமக்கள் தன்னார்வத்துடன் செய்துவரும் உதவிகள், இன்னும் சில மாதங்களுக்கேனும் நீடிக்க வேண்டும். உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், போர்வைகள், நைட்டிகள், சேலைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், கைலிகள், துண்டுகள், பாய், தலையணை, சானிட்டரி நாப்கின்கள், கொசு வலைகள், அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் என அனைத்து வகையான பொருட்களுக்கும் தேவை இருக்கிறது. வெள்ளம் வீட்டுக்குள் புகுந்ததால் உயிர் பயத்தில் கட்டிய  துணியுடன் ஓடி வந்தவர்கள், இப்போது மாற்று உடைகூட இல்லாமல் திண்டாடுகின்றனர். பிரச்னை என்னவெனில் இவற்றை களத்தில் இருந்து விநியோகிக்க சரியான தொண்டர் படை இருக்க வேண்டும். அதை எங்கிருந்தோ அழைத்து வர முடியாது; அப்படிச் செய்யவும் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களில் இருந்தே தன்னார்வலர் படையைத் தேர்வுசெய்து, விநியோகப் பணியில் அவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் என்ற நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மனநல சிகிச்சை!

வெள்ள நீர் வீடுகளில் இருந்து வடிந்த நிலையில் கடந்த வாரம் திடீரென ‘செம்பரம்பாக்கம் ஏரி உடைந்துவிட்டது’ என வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். இதனால் ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டையில் மறுபடியும் மரண பீதி. இப்படி லட்சக்கணக்கான மக்கள் உளவியல்ரீதியாக உருக்குலைந்துள்ளனர். கண் முன்னே சிதைந்த வீடும், சுற்றமும் அவர்களின் மனங்களை நொறுக்கிவிட்டன. `ஒரு குவளைக் குடிநீருக்காக தெருத்தெருவாக அலைய நேரிடும்’ என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. பசியால் துடிக்கும் பிள்ளைகளின் வேதனை அவர்களை நொறுக்கிவிட்டது. ஒரு பால் பாக்கெட்டுக்காக பரிதவிக்கும் துயரத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது. வங்கிக் கணக்கில் பல ஆயிரம் பணம் இருக்கிறது. சட்டைப் பையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாம் இருக்கிறது. ஆனாலும் என்ன... இரண்டு இட்லிகூட வாங்க முடியாது. இந்தச் சூழல் உருவாக்கியிருக்கும் வாழ்க்கை குறித்த நிலையின்மை சென்னையின் நடுத்தர வர்க்கத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. 1990-களுக்குப் பிறகு உருவான புதிய நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தங்கள் ஒட்டுமொத்த சேமிப்பையும் கொட்டிய இடம் தாம்பரம் மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகள். வீடுகளாகவும், கார்களாகவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும் வாங்கிக் குவித்தார்கள். அனைத்தும் இன்று ஒட்டு மொத்தமாகக் காலி. இவர்களின் மனங்கள் நிலைகுலைந்திருக்கின்றன.

எனவே இவர்கள் அத்தனை பேருக்கும் உளவியல் சிகிச்சை அவசியமாகிறது. ‘இந்த இழப்பில் இருந்து மீண்டுவிட முடியும்’ என்ற மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. புதிய வாழ்வை எதிர்கொள்ளும் மன வலிமையைத் தர வேண்டியிருக்கிறது. ‘எல்லாம் போயிருச்சு, அப்புறம் என்ன?’ என எதிர்மறை சிந்தனை தோன்றி, அது செயலாக மாறினால், அது வேறுவிதமான சமூக விளைவை உருவாக்கும். எனவே அரசும், தனியாரும், தனிநபர்களும் இந்த உளவியல், மனநல சிகிச்சையில் கவனம் செலுத்துவது அவசியமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick