போட்டோம் மச்சி கோலு!

சார்லஸ், படம்: பா.காளிமுத்து

சென்னைக்கு இப்போது பிடித்த விளையாட்டு கால்பந்து. `சென்னை சூப்பர் கிங்ஸ் போனால் என்ன, சென்னையின் எஃப்.சி-டா’ எனக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் சென்னை ரசிகர்கள். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கோவா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிவந்திருக்கிறது சென்னையின் எஃப்.சி. ஆரம்பத்தில் கிட்டத்தட்ட எல்லா அணிகளிடமும் உதைவாங்கி, கடைசி அணியாக அரை இறுதியை எட்டிப்பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சென்னையின் எஃப்.சி கதை சுவாரஸ்யமானது.
 
போடு மச்சி கோலு!

சென்னையின் எஃப்.சி அணி, இந்த ஆண்டு பயணத்தைத் தொடங்கியதே தோல்வியில்தான். லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டும்போது கடைசி இரண்டு இடங்களில் இருந்தது சென்னையின் எஃப்.சி அணி. தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே, அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்கிற நிலை. கேரளாவை 4-1 என்ற கோல்கணக்கில் சிதைத்தது சென்னை. அடுத்த போட்டியில் 4-0 என்ற கோல்கணக்கில் டெல்லியைப் பந்தாடியது. அடுத்து மும்பையுடன் மிக முக்கியப் போட்டி. டிசம்பர் 1-ம் தேதி சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்த அன்று இரவுதான் போட்டி. மும்பையை 3-0 என்ற கோல்கணக்கில் விரட்டிய சென்னை அணி, அடுத்த போட்டிக்கு புனே செல்ல வேண்டும். ஆனால், சென்னை விமான நிலையம் வெள்ளம் காரணமாக மூடப்பட, சென்னை அணி புனே செல்வதே பிரச்னையானது. டிசம்பர் 2-ம் தேதியே புனேவில் பயிற்சியைத் தொடங்கியிருக்கவேண்டிய சென்னை அணி, போட்டிக்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம் தேதிதான் புனே போய்ச் சேர்ந்தது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு பஸ் மூலம் சென்று, அதன் பிறகு புனே போய்ச் சேர்ந்தது. உடனே, `வீரர்கள் சோர்வாகியிருப்பார்கள், சென்னை தோற்றுவிடும், அரை இறுதிக்குள் நுழையாது' போன்ற யூகங்கள் பறந்தன. ஆனால், புனேவைத் தோற்கடித்து அரை இறுதிப் போட்டியில் கொல்கத்தாவின் மிரட்டலைத் தகர்த்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. சென்னை சாம்பியன் பட்டம் வெல்ல, ஐவர் அணிதான் முக்கியக் காரணம். அதில் முதல்வர் மெண்டோஸா.

ஸ்டீவன் மெண்டோஸா!

மெண்டோஸா, கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். பிரேசிலின் கொரிந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் மெண்டோஸாவை, கடந்த ஆண்டு கடன் அடிப்படையில் சென்னைக்கு அழைத்துவந்தார் சென்னை பயிற்சியாளர் மார்க்கோ மத்ராஸி. இந்த ஆண்டு ஐ.எஸ்.எல் போட்டிகளின் சூப்பர் ஸ்டார் இவர்தான். இந்த சீஸனில் 13 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்றிருக்கும் மெண்டோஸா, இரண்டு முறை ஹாட்ரிக் கோல் அடித்தது சாதனை. ஆட்டத்தின் 90 நிமிடங்களும் மெண்டோஸாவின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கும். பந்தை எதிர் வீரர்களிடம் இருந்து லாகவமாகக் கடத்திவந்து கோல் போஸ்ட் களுக்குள் நுழைப்பதில் மட்டும் அல்ல... பந்தைச் சரியாக பாஸ்செய்து தன் சக வீரரை கோல் அடிக்கவைப்பதிலும் மெண்டோஸா கில்லி.

மார்க்கோ மத்ராஸி

சென்னை அணியின் பயிற்சியாளர். இந்தப் பேரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? 2006-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின்போது, பிரான்ஸின் நட்சத்திர வீரர் ஸினிடேன் ஸிடேனால் முட்டி கீழே தள்ளப்பட்டவர் இவர்தான். இத்தாலியின் முக்கிய வீரரான மத்ராஸி, கடந்த ஆண்டு 6.5 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வீரராகவும் பயிற்சியாளராகவும் சென்னைக்கு வந்தார். கடந்த ஆண்டு வீரராகவும் விளையாடிய மத்ராஸி, இந்த ஆண்டு முழுக்க முழுக்க பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தினார். மெண்டோஸா, எலானோ, புருனோ போன்ற ஸ்டார் வீரர்களின் பலங்களைச் சரியாகப் பயன்படுத்தி அணியை ஒன்றுதிரட்டினார். குறிப்பாக, எந்த வீரரையும் காயம் அடையவிடாமல் சரியான இடைவெளிகளில் வீரர்களை ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார். இதனால் இறுதி வரை சென்னை அணியின் முக்கிய வீரர்கள் யாரும் காயம் காரணமாக பாதியில் வெளியேறவில்லை. கடந்த ஆண்டு விளையாடிய அனைத்து முக்கிய வீரர்களையும் தக்கவைத்து, இந்த ஆண்டு அவர்களுக்கு இன்னும் அதிகப் பயிற்சிகொடுத்து பலப்படுத்தினார். மெண்டோஸா, எலானோ ஆகியோர் கடந்த ஆண்டு பலமுறை ஈஸியாக கோல் போடும் வாய்ப்புகளை நழுவவிட்டனர். இதை இந்த ஆண்டு சரிசெய்தார் மத்ராஸி. சென்னை அணி, இந்த ஆண்டு மட்டும் 29 கோல்கள் அடித்திருக்கிறது.

எலானோ புளூமர்

சென்னை அணியின் கேப்டன்; பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். 2010-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிவரும் எலானோ, இந்த முறை பந்தை பாஸ்செய்வதில் திவீர கவனம் செலுத்தினார். கடந்த ஆண்டு எட்டு கோல்கள் அடித்த எலானோ, இந்த முறை நான்கு கோல்கள்தான் அடித்தார். ஆனால், அவருடைய வேகமான பாஸ்கள்தான் மற்ற வீரர்களை கோல் அடிக்கவைத்தன. சென்னையின் பலம் எலானோ!

அபோலா எடில்

அபோலாவுக்கு ஐ.எஸ்.எல் போட்டிகள் செம கலெக்‌ஷன். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கோல்கீப்பராக இருந்தார். கொல்கத்தாதான் கடந்த ஆண்டின் சாம்பியன். இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த முறை சென்னை சாம்பியன்ஸ். இந்த சீஸனில் இவரைக் கடந்து எதிர் அணி வீரர்களால் 11 முறை மட்டுமே கோல் போட முடிந்தது. 35 முறை கோலாகவேண்டிய பந்துகளைத் தடுத்துப் பிடித்து சென்னையைக் காப்பாற்றிய கறுப்புச் சிங்கம் அபோலா!

ஜேஜே லால்பெக்குவா

சென்னை அணி சாம்பியனாக உதவிய இந்திய வீரர். மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜேஜே, இந்திய ஜூனியர் அணியின் முன்னாள் கேப்டன். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடிவரும் ஜேஜே, இதுவரை சென்னைக்காக 10 கோல்கள் போட்டிருக்கிறார். இந்த ஆண்டு சுனில் செத்ரிக்கு அடுத்தபடியாக அதிக கோல்கள் அடித்திருக்கும் இந்திய வீரர் இவர்தான். மெண்டோஸா, எலானோ இரண்டு வீரர்களுடனும் சரியான சிங்க்கில் இருந்த ஜேஜே, பந்துகளை சரியான திசைகளில் திருப்பி சென்னைக்கு கோல்கள் கிடைக்க வழிசெய்தார். இவருடன் சென்னைக்காக விளையாடிய இந்திய வீரர்கள் தனசந்திர சிங் மற்றும் பல்வந்த் சிங் இருவரும் குறிப்பிடப்படவேண்டியவர்கள்.

சென்னை அணியில் இடம்பிடித்திருந்த ஒரே சென்னை வீரரான தனபால் கணேஷ், கடைசி வரை எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை!


எலானோ கைது!

சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற சில மணி நேரங்களில், ஓர் அதிர்ச்சி சம்பவம். கோவாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த எலானோ, ஆட்டம் முடிந்ததும் கோவா அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தத்தாராஜ் சால்கோன்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரைத் தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், முட்டியால் தாக்கியதாகவும் எலானோ மீது குற்றம் சாட்டப்பட்டது.  எலானோ கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick