தாமரையின் ஊழல் முகம் ! | BJP's Corruptions and Narendra Modi's Silence - Anandavikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/07/2015)

தாமரையின் ஊழல் முகம் !

பாரதி தம்பி

க்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரஸுக்கு  10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரஸை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ஜ.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. லலித் மோடி முதல் 'வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது சர்ச்சைகள். பிரதமர் மோடி, எதற்குமே வாய் திறப்பது இல்லை. 'யோகா செய்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்’ என, பிரதமரின் பெயரால் எஸ்.எம்.எஸ் வருகிறது. ஆனால் எதைச் செய்தால் நாட்டின் நலம் நன்றாக இருக்குமோ, அந்த விஷயங்களில் எதிர்வினையாற்றாமல் மௌன சாமியாராக இருக்கிறார் மோடி. இவரும் இவரது கட்சியினரும்தான் மன்மோகன் சிங்கை பேசாத பொம்மை என்றார்கள். இன்று அந்தக் கேள்விகள் இவர்களை நோக்கியே திரும்பி நிற்கின்றன.

கேள்வி 1: படிக்க அமெரிக்கா சென்று, அங்கு போதைப்பொருள் வழக்கில் சிக்கியவர் லலித் மோடி. இந்தப் பின்னணி கொண்ட நபரைதான் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆக்கினார், அப்போதைய ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே. விறுவிறுவென முன்னேறிய லலித் மோடி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐ.பி.எல். போட்டிகள் என செல்வாக்குமிக்க புள்ளியாக மாறினார். ஐ.பி.எல் ஊழல்கள் பெரிதாக வெடித்தபோது லலித்மோடியின் மீது சுமார் 1,700 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பின. அவருக்கு எதிராக மொத்தம் 16 பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து லண்டனுக்குத் தப்பி ஓடி தலைமறைவானார் லலித் மோடி. இப்போது வரை அவர் தேடப்படும் குற்றவாளிதான். இந்தக் குற்றவாளிக்குத்தான் போட்டிபோட்டு உதவியிருக்கின்றனர் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும்.

2011-ம் ஆண்டு லலித் மோடியின் லண்டன் குடியேற்ற ஆவணங்களில், 'இந்திய அரசுக்குத் தெரியக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில், இந்தக் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரிக்கிறேன்’ எனக் கையெழுத்திட்டிருக்கிறார் வசுந்தரா. லலித் மோடியின் லண்டன் குடியேற்றத்துக்காக, இங்கிலாந்து அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.

தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒருசில நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு. அதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புத் தொகை வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால், குற்றத்தின் தன்மை என்ற வகையில், ஆ.ராசா செய்ததைவிட, சுஷ்மாவும் வசுந்தராவும் செய்திருப்பது மிகப் பெரிய குற்றம். இந்திய சட்டப்படியே அதைவிட இதற்கு அதிக தண்டனை வழங்க முடியும்.

கேள்வி 2: மத்தியப்பிரதேச மாநில அரசு ஊழியர்கள் தேர்வு வாரியமான 'வியாபம்’ ஊழல் குறித்து இன்று இந்தியாவே பேசுகிறது. பணம் வாங்கிக்கொண்டு அரசுப் பணியிடங்களை நிரப்பிய வகையில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்படி முறைகேடான வழிகளில் அரசுப் பணிகளில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஊழல் வெடித்து வெளியில் வர... 'வியாபம்’ ஊழல் வழக்கு அம்பலமாகக் காரணமாக இருந்தவர்கள் பலரும் மர்மமாக இறக்கிறார்கள்.

கடந்த 13 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சிதான். எனில், 'வியாபம்’ ஊழலுக்கான முழுப் பொறுப்பும் பா.ஜ.க-வையே சேரும். ஆனால், முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌகான் வாய் திறக்க மறுக்கிறார். சுதந்திர இந்தியாவில் இதுவரை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை அனைத்தில் இருந்தும் வேறுபட்டு, 50-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவுவாங்கும் கொடூர ஊழலாக உருவெடுத் துள்ளது 'வியாபம்’.

கேள்வி 3: குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமம், சில மாதங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில், கார் மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் எடுத்திருக்கிறது. (அந்தச் சுரங்கம், தங்களது பூர்வீக வாழ்விடங்களையும் இயற்கையையும் அழிப்பதாக ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள் அபராஜின்கள், அங்கு கடும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.) இந்தச் சுரங்கத்தை ஏலத்தில் வாங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி அதானி குழுமத்துக்கு 6,200 கோடி ரூபாய் கடன் வழங்கியிருக்கிறது. கடன் வழங்கப்பட்டபோது, அதானி நிறுவனத்தின் மொத்தக் கடன் 81,122 கோடி ரூபாய். ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருக்கும் ஓர் ஊதாரிக்கு நீங்கள் கடன் தருவீர்களா? ஆனால், மோடி அரசு தருகிறது. காரணம் அதானி, மோடியின் நண்பர். 2002-ம் ஆண்டு மோடி குஜராத் முதலமைச்சர் ஆனபோது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 3,741 கோடி ரூபாய். 2014-ம் ஆண்டில் சொத்து மதிப்பு 75,659 கோடி ரூபாய்.

''பா.ஜ.க., தனது தேர்தல் பிரசாரத்தில் மோடியை 'வளர்ச்சியின் நாயகன்’ (விகாஷ் புரூஷ்) என்றது. அதை நம்பித்தான் 32 சதவிகிதம் இந்தியர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தனர். ஆனால் 'வளர்ச்சியின் நாயகனாக’ இருப்பது அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மட்டும்தான். சி.ஏ.ஜி எனப்படும் மத்தியத் தணிக்கைக் குழு அறிக்கையிலேயே, 'ரிலையன்ஸ், எஸ்ஸார், அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு, குஜராத்தின் மோடி அரசு தேவைக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியிருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு குஜராத்தில் முந்த்ரா துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்துக்கு ஒரு சதுரமீட்டர் 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை, என்ற மிகக் குறைந்த விலையில் மொத்தம் 14,305 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தச் சலுகைகள், மோடி பிரதமரான பிறகும் தொடர்கிறது'' என்கிறார் ஃப்ரண்ட்லைன் பத்திரிகை ஆசிரியர் விஜய் சங்கர்.

கேள்வி 4: பா.ஜ.க-வைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் இதுவரை மோடி வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் நச்சரிப்புத் தாங்க முடியாத நிலையை அடைந்தபோது, 'சுஷ்மாவும் வசுந்தரா ராஜேவும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்ற குரல் வந்தது. குரலுக்குச் சொந்தக்காரர், மோடி அல்ல; சங் பரிவார் அமைப்பின் தலைமையில் இருக்கும் கோவிந்தாச்சார்யா. இதற்கு மேலும் வினையாற்றாமல் இருந்தால், அது பா.ஜ.க-வுக்கு எதிரான பொது எண்ணமாக உருவெடுக்கும் என்பதால், மோடியை ஓர் அதட்டு அதட்டிவைக்கிறார் அவர். ஆனால் மோடியோ, இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் 'செல்ஃபி வித் செல்வமகள்’ என ட்விட்டரில் பிஸியாக இருக்கிறார். வசதி உள்ளவர்கள் மானிய விலை காஸ் சிலிண்டரை விட்டுத் தர வேண்டும் என பிரசாரம் செய்கிறது மோடி அரசு. ஆனால்,  மோடி பதவியேற்ற முதல் ஒரு வருடத்தில், வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவிட்ட தொகை 317 கோடி ரூபாய். (மன்மோகன் சிங்,

10 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்று வர செலவிட்ட தொகை 650 கோடி ரூபாய்!)

கேள்வி 5: பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் இந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மதிப்பிடும் கோணம் முக்கியமானது. காங்கிரஸுக்கு மாற்று என தன்னைச் சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க., அதே குட்டையில் விழுவது ஏன் என்பதையும், அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றாக இருக்கும்போது இவர்களால் மாற்றாக இருக்க முடியாது என்பதையும் தெளிவாக விளக்குகிறார்...

''காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் நாட்டில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பு பெருகும் என நினைக்கிறார்கள். ஆனால் தனியாருக்கு எவ்வளவு பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்குமே தவிர, அது தொழில் முதலீடாக மாறி வேலைவாய்ப்பைப் பெருக்காது. ஒரு ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. 'எம்ப்ளாய்மென்ட் எலாஸ்ட்டிசிட்டி’ என இதற்குப் பெயர். இந்தியத் தொழில் துறையில் இது, வரலாறு காணாத அளவில் மிகவும் குறைவாக இருக்கிறது. 1,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு 500 வேலைவாய்ப்புகளைக்கூட உருவாக்க முடியவில்லை. நிலத்தின் மதிப்பு, இயந்திரச் செலவு இவையே பெரும் பகுதி முதலீட்டைத் தின்றுவிடுகின்றன. தமிழ்த் திரைப்படம் ஒன்றின் தயாரிப்பு மதிப்பு 50 கோடி ரூபாய் என்றால், 30 கோடி ரூபாய் கதாநாயகனின் சம்பளத்துக்கே போய்விடுவதைப் போன்றது இது. மேலும், உற்பத்தியைப் பெருக்க ஏராளமான இயந்திரங்கள் வந்துவிட்டன. சுமார் 500 தொழிலாளர்களை மட்டுமே வைத்து, ஒரு கார் தொழிற்சாலையை இயக்க முடியும். அப்படியே உருவாகும் வேலைவாய்ப்புகளிலும் சம்பளம் மிகமிகக் குறைவு.

7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான் சம்பளம். இன்று, சென்னை, டெல்லி, மும்பை... என எல்லா பெருநகரங்களிலும் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் இவ்வளவுதான். பிரமாண்டமான நிறுவனங்களாக இருந்தாலும் இதே நிலைதான். அவர்கள் ஊழியர்களை ஒப்பந்தக் கூலிகளாக எடுத்துக்கொள்கிறார்கள். 10 ஆயிரம் பேர் வேலைசெய்யும் தொழிற்சாலையில் வெறும் 1,000 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள்; மீதம் இருக்கும் 9,000 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்களுக்கும் சம்பளம் அதே 10 ஆயிரத்தை ஒட்டிதான் இருக்கும். இதை மாற்றி அமைத்து தொழிலாளர் நலன்களை உறுதிப்படுத்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும். மாறாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை மேலும் பலவீனப்படுத்தும் வேலையைத்தான் இந்த அரசு செய்கிறது. அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைப்பது ஒன்றுதான் இதற்கான தீர்வு. சிறுதொழில்களை ஊக்குவித்து வளர்த்து எடுக்காமல் 'மேக் இன் இந்தியா’ எனப் பேசுவதால் என்ன பயன்? அது, தொழிலாளர்களின் உழைப்பை இன்னும் குறைந்த கூலிக்குச் சுரண்டுவதற்குதான் வழி வகுக்கும்!''

இதுதான் இந்தியாவை வளமான பாதையில் அழைத்துச் செல்லும் வியூகமா திரு.மோடி அவர்களே?!    

நீங்க எப்படி பீல் பண்றீங்க