விகடன் மேடை

”கெட்டப் செட்டப்... எனக்குத் தேவைப்படலை!”

வாசகர் கேள்விகள்... டி.ராஜேந்தர் பதில்கள்

பா.கணேசன், திருவான்மியூர்.

 '' 'முதல்வன்’ படத்துல வர்ற மாதிரி நீங்க தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் முதல்வரானா, என்ன பண்ணுவீங்க சார்?''

''சார்... நீங்க சினிமா மாதிரினு கேக்கிறீங்க. ஆனா, அதுக்கு நிஜமாவே தமிழ்நாட்ல நிறையப் பேர் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. நான் அந்த லிஸ்ட்ல இல்லை. முதல்வரை விடுங்க... இப்போ நடக்கிற பணநாயகத்துல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆக முடியுமா, இல்லை ஒரு எம்.எல்.ஏ-தான் ஆகிட முடியுமா, அப்படி ஆகிட்டாலும் சட்டசபையில் போய்ப் பேசிட முடியுமா, இல்லை மக்களுக்காகக் குரல்கொடுத்திட முடியுமா? மேல மேல மேல யோசிக்காதீங்க சார்!''

டி.ரமேஷ்குமார், சேலம்.

''உங்க ஒரிஜினல் பேர் என்ன..? ஏன் பேரை டி.ஆர்-ல இருந்து விஜய டி.ஆர்னு மாத்திட்டுத் திரும்ப டி.ஆர் ஆனீங்க?''

''எங்க ஊர்ல குழந்தைக்குப் பேர் வைக்கும்போது மூணு பேர் வெச்சுக் கூப்பிடுவாங்க. அதனால எனக்கு ஆரம்பத்தில் 'விஜய ராஜேந்திர சோழன்’னு பேர் வெச்சுட்டாங்க. பேர் நீளமா இருந்ததால, சுருக்கமா கூப்பிடலாம்னு விஜயேந்திரன், ராஜேந்திரன்னு ரெண்டு பேர் வெச்சு, கடைசியில் டி.ராஜானு வீட்ல கூப்பிட்டாங்க. அதான் 'ஒருதலை ராகம்’ படத்தில் கதாநாயகன் பேர்  ராஜானு வெச்சிருப்பேன். பள்ளிக்கூடத்தில் என் பேரை டி.ராஜேந்திரன்னு பதிவுசெஞ்சாங்க. சினிமாவுக்கு வந்தப்ப, நான் டி.ராஜேந்தர்னு பதிவுசெஞ்சேன். ஏன்னா எனக்கு ரொம்பப் பிடிச்ச, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் மாதிரி 'டி.ராஜேந்தர்’னு பேர் இருக்கணும்னு ஆசை. என் நண்பர் ராஜராஜன் எண்ணியல், பெயரியல் நிபுணர். ஒரு 'மனிதனுடைய பெயர் மட்டும்தான் அவனுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்’னு அவர் சொன்னார். அப்போ என் இயற்பெயரான விஜய ராஜேந்திர சோழன் பத்திச் சொன்னேன். 'ராஜராஜன் நான் சொல்றேன். உங்க பேருக்கு முன்னாடி 'விஜய’ங்கிற வார்த்தையைச் சேர்த்தா இன்னும் வெற்றிகள் கிடைக்கும்’னு அவர்தான் என் பெயர் விஜய டி.ராஜேந்தர்னு மாத்தினார்.

குறள் டி.வி நேரடி ஒளிபரப்பில், நண்பர் ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டார். 'டி.ஆர்னா தன்னம்பிக்கைனு சொல்றாங்க. வெறும் பேரை மாத்திதான் உங்களால வெற்றிபெற முடியுமா?’னு  கேட்டார். என்னால பதில் சொல்ல முடியலை. ஒரு மனிதன் பிறக்கும்போது இறைவன் அவன் தலையில் என்ன எழுதியிருக்கானோ, அதுதான் நடக்கும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம். Everything is prewritten... nothing is rewritten. . பேரை மாத்தியெல்லாம் விதியை மாத்த முடியாதுனு தோணுச்சு. எண்ணியல், பெயரியல் எல்லாம் உண்மைதான். ஆனா, அதுக்கு காலமும் நேரமும் கைகொடுக்கணும். அதனால பழையபடி டி.ராஜேந்தர் ஆகிட்டேன்!''  

எஸ்.சண்முகசுந்தரம், நாகப்பட்டினம்.

''ஒரு சட்டமன்ற உறுப்பினராக உங்களது இனிப்பான / கசப்பான அனுபவங்களைச் சொல்லுங்கள்?''

''நான் அப்போ பூங்கா நகர் சட்டமன்ற உறுப்பினர். கடுமையான மழை, வெள்ளம். கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கிருச்சு. வண்டிகள் போக முடியலை. அதனால நிவாரணப் பணிகள் ஸ்தம்பிச்சு நின்னுருச்சு. மக்கள் உணவு இல்லாம தவிச்சுட்டு இருந்தாங்க. அப்போ மாநகராட்சியோட குப்பை லாரியில் உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்களை மூட்டையா கட்டி ஏத்திட்டு நான் கிளம்பிட்டேன். கழுத்து அளவு தண்ணியில நீந்தி மக்கள்கிட்ட போய் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தேன். அதுக்கு மக்கள் காமிச்ச நன்றியும் மரியாதையும் இருக்கே... அதைவிட உலகத்தில் இனிப்பான விஷயம் எதுவும் இல்லை சார். அப்போ கலைஞர், '234 தொகுதிகளில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ-க்களில், டி.ஆர், வித்தியாசமான ஒரு எம்.எல்.ஏ; கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்; தன் தொகுதியில் ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களையும் பேர் சொல்லி அழைக்கக்கூடிய அளவுக்கு ஒன்றிப் பழகக்கூடியவர்’னு பாராட்டினார். ராத்திரி ரெண்டு மணிக்கு போன் வந்தாலும் பேசுவேன். எப்பவும் அந்த மக்களுக்காகக் குரல் கொடுத்தேன். என் பிறந்த நாளைக்கு தொகுதி மக்கள் 10,000 பேருக்கு பொன்னி அரிசியில் சாப்பாடு போட்டேன். 100 பேருக்கு அற்புதமான தங்கத் தாலி பரிசாக் கொடுத்தேன். மக்களும் என் மேல ரொம்பப் பிரியமா இருந்தாங்க. வீடு தீப்பிடிச்சா, அந்த மக்களுக்கு லட்சக்கணக்குல பண உதவி செஞ்சேன். அதோட மதிப்பு இப்போ கணக்குப் போட்டா கோடியில் இருக்கும் சார். ஆனா, அதெல்லாம் நான் எங்கே கொடுத்தேன்? எல்லாம் இறைவன் கொடுத்தது.

ரெண்டாவது முறையும் தி.மு.க சார்பில் பூங்கா நகரில் போட்டியிட்டேன். தேர்தலுக்கு சில நாள் முன்னாடி, 'தொகுதியில் ரெண்டே ரெண்டு வட்டத்தில் மட்டும் மத்தக் கட்சிக்காரங்க பணம் கொடுத்துட்டு இருக்காங்க. நாமளும் பணம் கொடுத்தா ஈஸியா ஜெயிச்சிடலாம்’னு சொன்னாங்க. 'அஞ்சு வருஷம் நான் தொகுதிக்கு சேவை பண்ணியிருக்கேன். அஞ்சு பைசாகூட லஞ்சம் வாங்கினது இல்லை. மக்கள் எனக்குத்தான் ஓட்டு போடணும். காசு கொடுத்துதான் ஜெயிக்க முடியும்னா, நான் ஜெயிக்கணும்னு அவசியம் இல்லை’னு சொல்லிட்டேன். 'அரசியல்ல பிடிவாதம் கூடாது’னு கட்சியில் அட்வைஸ் பண்ணினாங்க. மொத்தம் ஒன்பது வட்டத்தில் ஏழு வட்டத்தில் நான்தான் லீடிங். மீதி ரெண்டு வட்டத்தில் எதிரா விழுந்த வாக்குகளால் சொற்பமா 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். நான் தோத்ததுக்கு தி.மு.க-வோட உட்கட்சி அரசியலும் ஒரு காரணம். ஆனா, அதுக்கு எல்லாம் நான் கவலைப்படலை. நான் தோத்ததுக்கு அப்புறம் பூங்கா நகர்னு ஒரு தொகுதியே இப்போ இல்லை. அந்த மக்கள்லாம், 'நீங்க தொகுதிக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க... நாங்க உங்களை மறந்துட்டோம். இப்போ தொகுதியே இல்லை’னு இப்போ ஃபீல் பண்றாங்க. அட... என்னை விடுங்க. என்னை நினைத்த, எனக்காக கண்களை நனைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தொகுதியே இல்லைங்கிறது எனக்கு வருத்தமான அனுபவம்தான். அந்த மக்கள் எப்பவும் நல்லா இருக்கணும் சார்!''

டி.ரமேஷ்குமார், சேலம்.

''நீங்கள் ஏன் உங்கள் ஹேர் ஸ்டைலை படத்துக்குப் படம் மாற்றவில்லை?''

''சார்... நான் அடிப்படையில் ஓர் இயக்குநர். எனக்குத் தெரிஞ்ச கதைகளை, பாடல்களை எழுதிட்டு படம் இயக்கிட்டு இருந்தேன். நான் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும்கூட. சக நடிகர்களுக்கு எப்படி நடிக்கணும்னு நடிச்சே காட்டுவேன். என் கதைகளுக்குப் பெரிய நட்சத்திரங்களை என்னால் அணுக முடியலை. அதனாலதான் நானே நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிச்ச படங்களே குறைவு. மேக்கப்கூட போட மாட்டேன். லைட்டா முகத்தைத் துடைச்சுட்டு கேமரா முன்னாடி நடிக்க ஆரம்பிச்சிருவேன். அந்த கேரக்டர் என்னவோ அதுதான்... இந்த டி.ஆர். நான் கமல் மாதிரி வரணும்னு ஆசைப்பட்டவன் கிடையாது. அதனால இந்த கெட்டப், செட்டப் எல்லாம் எனக்குத் தேவைப்படலை!''

ச.சுந்தரமகாலிங்கம், சுந்தரபாண்டியம்.

''நீங்கள் இணையத்தில் நடத்தும் 'குறள் டி.வி’யால் என்ன சாதித்தீர்கள்?''

''நான் சாதிக்கிறதுக்காக குறள் டி.வி ஆரம்பிக்கலை. அதைவெச்சு என்ன பண்ண முடியும்னு சோதிக்கிறதுக்காக ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் குறள் டி.வி-க்காக ஒரு விளம்பரம்கூட நான் வாங்கினது இல்லை. ஏன்னா, இந்த டி.வி-யை வெச்சு சம்பாதிக்கும் ஐடியா எனக்கு இல்லை. எதிர்காலத்தில் குறள் டி.வி., சிலம்பு டி.வி-னு ரெண்டு சேனல் ஆரம்பிக்கும் ஐடியா இருக்கு. ஆனா, அதுக்கு லைசென்ஸ் வாங்க நான் பட்ட பாட்டை மட்டுமே பத்து படமா எடுக்கலாம். இதுக்கு மேல ஒண்ணும் சொல்லத் தோணலை!''

பி.கார்த்திகேயன், குன்றத்தூர்.

''என்ன உங்க ரெண்டாவது பையன் குறளரசனைத் திடீர்னு இசையமைப்பாளர் ஆக்கிட்டீங்க. 'சிறந்த குழந்தை நட்சத்திரம்’னு மாநில விருது வாங்கின அவரை ஹீரோவா அறிமுகப்படுத்துவீங்கனு நினைச்சுட்டு இருந்தோமே?''

''குறளரசனை சிலம்பரசன் மாதிரி நிறையப் படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிக்கவைக்க முடியலை. அவருக்குக் குறைஞ்ச வாய்ப்புகள்தான் கிடைச்சது. சிலம்பரசனின் காலம் சினிமாவில் ஒரு பொற்காலம். சிம்புவை பல படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிக்கவெச்சு, 'மோனிஷா என் மோனலிசா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வெச்சுட்டு, அப்புறம் கதாநாயகனா அறிமுகம் செஞ்சேன். 'எங்க வீட்டு வேலன்’ படம் ஷூட்டிங் அப்போ குறளரசன் பிறந்தார். அதில் அவரை ஒரு சீன்ல நடிக்கவெச்சேன். எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் ஜாஸ்தி. அவங்க கொடுத்த காபா படத்தை இப்பவும் வீட்ல மாட்டிவெச்சிருக்கேன். தினமும் அதுக்கு முன்னாடி வேண்டிப்பேன். 'சொன்னால்தான் காதலா’ படத்தில் குழந்தை நட்சத்திரமா குறளரசனை நடிக்கவைக்கலாம்னு முடிவுபண்ணி குறள்கிட்ட, 'ஒரு இஸ்லாமிய நண்பர் அறிமுகப்படுத்திதான் நான் சினிமாவுக்குள் வந்தேன். எல்லா இறைவனும் ஒண்ணுதான். இன்னைக்கு ஷூட்டிங் போகணும். உனக்கு சீன்ல பெரிய வசனம் இருக்கு. அழுதுகிட்டே பேசிட்டு நடிக்கணும். அல்லா மனசு வெச்சா, நீ நல்லா பேசி நடிப்ப. அதை மட்டும் சரியா நடிச்சுட்டா, இந்த வருஷத்தோட சிறந்த குழந்தை நட்சத்திரம் நீதான். அதை அல்லா பார்த்துக்குவார்’னு சொன்னேன். நான் பிரார்த்தனை பண்ற மாதிரி, குறளும் பிரார்த்தனை பண்ணினார். அப்போ அ.தி.மு.க அரசு. ஆனலும், அந்த வருஷம் சிறந்த குழந்தை நட்சத்திரமா குறளும், சிறந்த தயாரிப்பா என் படமும் தமிழக அரசால் தேர்வாச்சு. எல்லாம் இறைவன் முடிவுபண்ணுவான் சார்.

அவரை எப்போ ஹீரோவா களம் இறக்கணும்னு புராஜெக்ட் போட்டு, அதுக்காக சில சப்ஜெக்ட்ஸ் கேட்டு வெச்சிருந்தேன். அதுக்கு நடுவுல எதிர்பாராதவிதமா, 'இது நம்ம ஆளு’ படத்தில் அவர் இசையமைப்பாளர் ஆகிட்டார். ஏன்னா, குறளுக்கு இசை மேல அவ்வளவு காதல். அவருடைய இசை அறிவு இறைவன் கொடுத்த கொடை. எப்போ பார்த்தாலும் பாப், ராப்னு கேட்டுட்டே இருப்பார். சிம்புவுக்கே இசையில் ஏதாவது சந்தேகம்னா, குறள்கிட்டதான் கேட்பார். ஏன்னா, சர்வதேச லெவல்லா எல்லா விதமான இசை பத்தியும் அவர் படிச்சுட்டு, பாடிட்டு, கேட்டுட்டே இருக்கார். அட... அவ்ளோ ஏங்க, அவங்க அப்பாகிட்ட என்னென்ன மாஸ் டேலன்ட் இருக்குனு ஆராய்ச்சி பண்ணி, தெரிஞ்சுவெச்சிருக்கார் குறள். தான் நடிக்கும் படத்துக்காக குறள் ஆறேழு பாட்டு போட்டுவெச்சிருந்தார். அந்தப் பாட்டு பிடிச்சுப்போய், 'என் படத்துக்கு நீ மியூசிக் போடு’னு சிம்பு கேட்டுக்கிட்டதால, அவர் இசையமைப்பாளர் ஆகிட்டார். சீக்கிரமே அவர் ஹீரோவா அறிமுகம் ஆகணும். அதான் என் ஆசை!''

- அதிரடி சரவெடி தொடரும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick