கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

விகடன் டீம்

'அறம் செய விரும்பு’ திட்டத்தின் பத்தாவது குழு தன்னார்வலர்கள் இவர்கள்...

சங்கீதா ஸ்ரீராம் - சமூக ஆர்வலர்

மாற்றுக் கல்வி, மாசுக் கட்டுப்பாடு, இயற்கை விவசாயம்... எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர்; இயற்கையின் வழி நடப்பதில் ஈடுபாடுகொண்டவர். ''மதிப்பெண்களைத் துரத்தும் இந்தக் கல்வி முறை, நம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையே சிதைக்கிறது. இந்தக் குறைந்தபட்சக் கல்வியைக்கூடப் பெற முடியாமல் பல குழந்தைகள் பள்ளிக்கு வெளியே துரத்தப்படுகின்றனர். அப்படிப்பட்ட சிலரின் கல்விக்கு உதவி செய்வேன்!''


 நீ.செல்வம்

இயற்கை விவசாய நிபுணர்

வேளாண்மையில் பூச்சிகளின் முக்கியத்துவத்தையும், பூச்சிக்கொல்லிகளின் அபாயத்தையும் தொடர்ந்து வலியுறுத்திவருபவர்; ஐ.நா சபையின் உலக உணவு மற்றும் வேளாண்கழகத்தின் பயிற்சியாளர். ''பூச்சிக்கொல்லி இல்லாமலேயே மொத்த வேளாண்மையையும் செய்ய முடியும். மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச்சொல்வதற்கும் விளக்குவதற்கும் ஒரு பயிற்சியாளர் அணியை உருவாக்குவேன்!''  


 சுரேஷ் பாபு

புகைப்படக் கலைஞர்

ஈரோட்டின் அழகை உலகத்துக்குச் சொல்லும்  ரசனையான புகைப்படக்காரர். ''எங்கள் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில் கழிவறை வசதி இல்லாமல், மாணவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்படி ஒரு பள்ளியைத் தேர்வுசெய்து, நல்ல கழிவறை வசதி செய்துதர ஆசை!''


ஜீவ சகாப்தன் - ஊடகவியலாளர்

இமயம் டி.வி-யில், 'விவாத அரங்கம்’, 'நேர்முகம்’ என இரு அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தும் ஊடக இளைஞர். பரபரப்பை முதன்மை நோக்கமாகக்கொண்டிராமல் புதிய செய்திகளை வெளிக்கொண்டுவரத் துடிக்கும் நெறியாளுநர். ''வசிப்பதற்கு ஒரு வீடு இல்லாமல்போவது எதைவிடவும் துயரமானது. ஒரு செய்தியாளனாக வீடு அற்றவர்களின் வலியை நன்றாக அறிவேன். இந்தத் திட்டத்தின் மூலம், சாலையோரம் வசிப்பவர்கள் சிலருக்கு உதவுவேன். அவர்களின் வாழ்வில் சிறு ஒளி ஏற்றுவேன்!''


சுரேஷ் - அரசுப் பள்ளி ஆசிரியர்

மதுரை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர். பாடப் புத்தகங்களைக் கடந்த சமூகக் கல்வியை மாணவர்களுக்குப் போதிக்கும் அக்கறையாளர். ''அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள், மாதவிடாய்க் காலங்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் வசதி இல்லாமல், பயன்படுத்தியதை அப்புறப்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அத்தகைய அரசுப் பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் டிஸ்பென்ஸர் இயந்திரம் வாங்கித் தருவேன்!''


அழகேச பாண்டியன்

நவீன விவசாயி

சூழலியல் படிப்பில் பிஹெச்.டி பட்டதாரி. நகரப் போக்குவரத்து ஒழுங்கமைப்பு, நிலத்தடி நீர் ஆதார நிர்வாகம், கல்வி சார்ந்த மென்பொருள் தயாரிப்பு எனப் பல துறைகளிலும் பணியாற்றிவிட்டு, இப்போது 'மண் இல்லா விவசாயம்’ என்ற துறையில் கவனம் செலுத்திவருகிறார். ''நவீனகால விவசாயம் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் குறித்து கரிசனத்துடன் அணுகும் குரல்கள் குறைவாக இருக்கின்றன. என் கவனம் விவசாயத்தை நோக்கியே இருக்கும்!''


இரா. சண்முகம்

மரச் சிற்பக் கலைஞர்

மரத்திலே கலைவண்ணம் காண்பவர். திருவான்மியூரில் 'ஃபேஷன் வேர்ல்டு வுட் வொர்க்ஸ்’ என்ற மரச் சிற்பக்கூடம் நடத்திவரும் இவரது கலைப்பொருட்கள், உலகம் முழுக்கச் செல்கின்றன. முகம் தெரியாத எத்தனையோ பேருக்கு, தன் முகம் காட்டாமல் உதவிபுரிந்து வருபவர். ''உதவிசெய்வதில் உள்ள மகிழ்ச்சியை வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ ஏழை மக்களைப் பார்க்கிறோம். வாழ்வின் அன்றாடத் தேவைக்கே சிரமப்படும் அவர்களில் சிலரது வாழ்க்கை மேம்பாட்டுக்காக இந்த நிதியைப் பயன்படுத்துவேன்!''


இளங்கோ கல்லாணை - கல்வியியலாளர்

தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் பலருக்கும் அறிமுகம் ஆனவர்; கல்வியாளர் மற்றும் மானுடவியல் ஆய்வாளர். 'விவசாய பூமியை மட்டும் அல்ல... பாலைவனங்களைக்கூட நாசமாக்கிவிட்டோம்’ என வேதனைப்படும் இவர், ''சுற்றுச்சூழல் என்பதும் சுகாதாரம் என்பதும் வேறு அல்ல. சூழல் ஆரோக்கியம்தான் சமூக சுகாதாரத்தை உறுதிப்படுத்தும். இந்த நிதியை, குழந்தைகளைக்கொண்டு சமூகக் காடுகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்துவேன்!'' என்கிறார்.


விமல்ராஜ்  

3டி விஷூவலைசேஷர்

திரைப்படங்களுக்கு 3டி மாடலிங் செய்துகொடுக்கும் இவர், தன் சொந்த ஊரான புதுச்சேரியில் ஆலமரம், அரசமரம், அத்திமரம், நாவல்மரம் என மரங்கள் நடுவதில் ஆர்வம் உள்ளவர். பாம்புகளிடம் நேசம் காட்டுபவர். ''ஏரிகளுக்கு நடுவில் தண்ணீருக்குள் அடம்பை போன்ற மரங்களை நட்டால்தான், வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள் இங்கு வந்து கூடுகட்டும். இங்கே உள்ள ஏரியில் அப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறேன்!''


பழ.ரகுபதி - சமூக ஆர்வலர்

தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து செயல்பட்டுவருபவர். அரசு அலுவலகங்களில் லஞ்சத்துக்கு எதிராக இயங்கிவருபவர். 'நேர்மை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர். ''தாய்மொழிக் கல்வி மூலம் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் உரிய உதவி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அத்தகைய சில மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உதவி செய்வேன்!''


'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu  என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!


படங்கள்: ரா.ராம்குமார், ப.சரவணகுமார், ரமேஷ் கந்தசாமி, கா.முரளி, தி.ஹரிஹரன், அ.குரூஸ் தனம், ஆ.நந்தக்குமார், சதிஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick