வேண்டும் ஓய்வு!

'சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, திருச்சி அருகே, நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒன்பது பேர் பலி, 15 பேர் படுகாயம். பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுநர்கள் கைது’ என ஒரு செய்தி. ஓட்டுநர்களின் கவனக்குறைவுதான் விபத்துக்கான முக்கியக் காரணம் எனச் சொல்லப்பட்டாலும், இதை அவ்வளவு எளிமையாகச் சுருக்கிப்பார்க்க முடியாது.

'அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு உரிய ஓய்வு கொடுக்கப்படாததே விபத்துக்கான காரணம்’ என, தொழிற்சங்க நிர்வாகிகள் சொல்லும் கருத்து மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். காரணம், தாங்க முடியாத பணிச்சுமை. ஓய்வே இல்லாமல் பல மணி நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுகின்றனர். முன்னர், இரண்டு ஓட்டுநர்கள் மாறி மாறி ஓட்டிய நெடுந்தூரப் பேருந்துகளை, இப்போது ஒரே ஓட்டுநர் ஓட்டுகிறார். சில பேருந்துகளில் நடத்துனரின் பணியையும், ஓட்டுநரே கவனிக்க வேண்டியிருக்கிறது. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழாக் காலங்களில் இந்த நெருக்கடி இன்னும் அதிகரிக்கிறது.

வேறு எந்த அரசுத் துறையாக இருந்தாலும், பணிச்சுமையால் ஏற்படும் பாதிப்பு நிர்வாக முடக்கமாக முடிந்துவிடும். ஆனால், போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, பயணிகளின் உயிருடன் நேரடியாகத் தொடர்புடையது. அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு, சலுகை அல்ல; உரிமை. அந்த வேலைக்கான அத்தியாவசியத் தேவையும்கூட. ஆனால், நடைமுறை யதார்த்தம் என்ன? ஓய்வு மறுக்கப்படுவது மட்டும் அல்ல... தரமற்ற பேருந்துகளை இயக்கவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். திருச்சி விபத்துக்கான அடிப்படைக் காரணம்கூட, அந்தப் பேருந்தில் முகப்பு விளக்கு சரியாக எரியாததுதான். விளக்கு மட்டுமா? அரசுப் பேருந்துகள் பலவற்றில் ஹார்ன், முன்பக்கக் கண்ணாடியில் மழைநீரைச் சரிசெய்யும் வைப்பர் போன்றவை இயங்குவதே இல்லை.

பல பேருந்துகளில் படிக்கட்டுகள் உடைந்து தொங்குகின்றன.

சாலையில் ஓடுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாத பேருந்துகளை இயக்கச் சொல்வதுடன், 'ஒரு லிட்டர் டீசலுக்கு இத்தனை கி.மீ ஓட்டியே ஆக வேண்டும்’ எனவும் இலக்கு நிர்ணயிக்கின்றனர். 'மிகவும் பழைய, இயங்குதிறன் குறைந்த, பல வகைகளில் பழுதடைந்த பேருந்தை எப்படி இத்தனை திறனுடன் இயக்க முடியும்?’ என்ற ஓட்டுநர்களின் எதிர்ப்புக்குரலைக் கண்டுகொள்வதே இல்லை. ஏதேனும் பிரச்னை வந்துவிட்டால் மட்டும் ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் பலிகொடுக்கிறார்கள். ஆனால், அரசுப் பேருந்துகளின் தரமின்மைக்கு இவர்கள்தான் பொறுப்பா? சமீபத்தில், ஓடும் அரசுப் பேருந்தின் ஓட்டை வழியே ஒரு பெண் கீழே விழுந்தாரே... அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? நடுவழியில் நின்றுபோகும் பேருந்துகள், ஒழுகும் மேற்கூரைகள், உடைந்த இருக்கைகள்... போன்ற காரணங்களால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் ஒவ்வொரு நாளும் சண்டைகள் நடக்கின்றனவே... அதற்கு யார் பொறுப்பு?

இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் அரசுப் பேருந்துகளில்தான் பயணிக்கின்றனர். பெரும்பான்மை மக்களின் வாகனமாக பேருந்துதான் இருக்கிறது. அவற்றை நவீனப்படுத்தும் முயற்சிகளை அரசு முடுக்கிவிட வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, அவற்றின் தரத்தை மேம்படுத்துவது... எல்லாவற்றுக்கும் மேலாக போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு உரிய ஓய்வுதருவது ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இந்தத் தீபாவளித் திருநாளில் இருந்து அந்த நற்செயல் தொடங்கட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick