தித்திக்குதே..!

ச.ஜெ.ரவி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ண்டிகை நாட்களில் தட்டு நிறைய ஸ்வீட் கொடுத்தால், அப்படியே காலி பண்ற காலம் மலையேறி, ஒரே ஒரு ஸ்வீட்டை நீட்டினால்கூட, 'ஐயய்யோ... இவ்ளோ வேண்டாமே..!’ எனச் சின்னதாகப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்கிறோம். ஆனால், உடல்நலத்தைப் பாதிக்காத, சத்துக்கள் நிறைந்த சிறுதானிய இனிப்பு வகைகள் இருக்க கவலை எதற்கு? தித்திப்பும் ஆரோக்கியமும் காம்போவாகக் கிடைக்கும் சில சிறுதானிய இனிப்பு வகைகளின் செய்முறைகளைப் பட்டியலிடுகிறார் 'நல்ல சோறு’ அமைப்பின் நிறுவனர் ராஜமுருகன். இதில் செயற்கை இனிப்புகளைத் தவிர்த்து, இயற்கை இனிப்புகளான வெல்லம், பேரீச்சம்பழம், உலர் திராட்சைகளைப் பயன்படுத்தலாம்!

 பொரிவிளங்காய் உருண்டை

தேவையான பொருட்கள்:

தினை அரிசி - 50 கிராம்

சோளம் - 50 கிராம்

பச்சைப் பயறு - 50 கிராம்

உளுந்து - 25 கிராம்

வெல்லம் - 200 கிராம்

ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

சுக்குத் தூள் - 1 சிட்டிகை

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

தினை அரிசி, சோளம், பச்சைப் பயறு, உளுந்து ஆகியவற்றைச் சுத்தப்படுத்தி, பொரியாக வறுத்தெடுக்கவும். அதை மாவாக அரைத்துச் சலித்துக்கொள்ளவும். வெல்லத்தை கம்பிப் பதத்துக்கு பாகாகக் காய்ச்சி, மாவுடன் கலந்து, ஏலக்காய்த் தூள், உப்பு, சுக்குத் தூள் தூவி நன்கு கிளறவும். பின்னர், அதை உருண்டையாகப்  பிடித்தால், தித்திக்கும் பொரிவிளங்காய் உருண்டை தயார்!


கம்புப் பாயசம்

தேவையான பொருட்கள்:

கம்புக் குருணை - 50 கிராம்

பாசிப் பருப்பு - 40 கிராம்

வெல்லம் - 200 கிராம்

ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை

சுக்குத் தூள் - 2 சிட்டிகை

நெய் - 100 மி.லி

முந்திரி - 20 கிராம்

திராட்சை - 20 கிராம்

செய்முறை:

பாசிப் பருப்பை பொன் நிறமாக வறுத்து, அரை லிட்டர் கொதிக்கும் நீரில் வேகவிடவும். சூடான நெய்யில் கம்புக் குருணையைச் சிவக்க வறுத்து, பாசிப் பருப்புடன் சேர்த்து, நன்கு குழைய வேகவிடவும். நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும். 'கன்னமுது’ எனும் கம்புப் பாயசம் சுடச்சுட ரெடி! 


கம்பு அல்வா

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய கம்பு - 1 கப்

வெல்லம் - 1 கப்

முந்திரி - 2 தேக்கரண்டி

திராட்சை - 2 தேக்கரண்டி

தேங்காய் (துருவியது) - 2 தேக்கரண்டி

ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை

நெய் - 100 மில்லி

செய்முறை:

கம்பை அரைத்து பால் எடுக்கவும். கம்புப் பாலை அடுப்பில் சூடேற்றி தொடர்ந்து கிளறவும். பால் சுண்டி, பசைபோல் மாறும்போது வெல்லம் சேர்த்து, விடாமல் கிளறிக்கொண்டே சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியிலும் கையிலும் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். பதம் வந்ததும் நெய்யில் பொன் நிறமாக வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பரிமாறவும்!


கேழ்வரகு பூந்தி

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - அரை கப்

கடலை மாவு - அரை கப்

வெல்லம் - 2 கப்

ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை

சுக்குத் தூள் - 3 சிட்டிகை

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் கடலை மாவைக் கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பூந்தி மாவு பக்குவத்துக்குக் கரைத்துகொள்ளவும். நன்கு சூடான எண்ணெயில் பூந்தியாகப் பொரித்தெடுக்கவும். வெல்லத்துடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து, பிசுக்கு பக்குவத்துக்குக் கொதிக்கவிட்டு இறக்கி, பூந்தியுடன் சேர்த்துக் கலக்கவும். நெய், ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவிட்ட பிறகு, அள்ளி அள்ளிச் சாப்பிடலாம் கேழ்வரகு பூந்தியை!


ராகி ஷாம் ரோல்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

விளாம்பழம் - 2

வெல்லம் - 150 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

விளாம்பழத்தை உடைத்து சதைப்பற்றுடன் நீர் சேர்த்துப் பிசைந்து வடிகட்டி, விதைகளை நீக்கவும். அந்தச் சாற்றுடன் வெல்லம் சேர்த்து, அடுப்பில் வைத்து நீர்ப் பற்று குறையும் வரை விடாமல் கிளறி இறக்கவும். ராகி மாவை, அடி கனமான பாத்திரத்தில் வறுக்கவும். பிறகு, சிறிது நீர் சேர்த்து, கட்டி இல்லாமல் நெய் சேர்த்து, சப்பாத்தி பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். வாழை இலையில் ராகி மாவை வைத்து மற்றொரு வாழை இலையால் தட்டி, பரப்பிக்கொள்ளவும். அதன் மேல் விளாம்பழ ஜாமை தடவி, ராகி மாவை மட்டும் சுருட்டி ஆவியில் வேகவிடவும். ராகி ஜாம் ரோல் தயார்!


அவல் கீர்

தேவையான பொருட்கள்:

சோள அவல் - 1 கைப்பிடி

முந்திரி - 3

பாதாம் - 3

பேரீச்சம்பழம் - 3

திராட்சை - 1 தேக்கரண்டி

ஏலக்காய் - 2

தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி

வெல்லம் - 150 கிராம்

செய்முறை:

மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மைய அரைத்து, 400 மி.லி நீர் சேர்த்து, பொங்கி வரும்வரை வேகவிடவும். (பச்சை வாசனை மாற வேண்டும்). இறக்கினால் அதுதான் அவல் கீர். இதைச் சூடாகவும் குளிர்ச்சியாகவும் பருகலாம்!


சாமை பலகாரம்

தேவையான பொருட்கள்:

சாமை பச்சரிசி - அரை கப்

தோல் உளுந்து - அரை கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

வாழைப்பழம் - 1

வெல்லம் - 100 கிராம்

ஏலக்காய் - 2

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி, உளுந்து இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேங்காய், வெல்லம், ஏலக்காய், வாழைப்பழத்துடன் அளவாக நீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 15 நிமிடம் கழித்து, சூடான எண்ணெயில் அரைத்த கலவையைச் சிறிது சிறிதாகப் பொரித்தெடுக்கவும். சப்புக்கொட்டிச் சாப்பிட, சாமை பலகாரம் தயார்!


குதிரைவாலி அன்னாசி கேசரி

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி பச்சரிசி   - 1 கப்

அன்னாசிப் பழச்சாறு   - 2 கப்

வெல்லம்   - 1 கப்

முந்திரி   - 2 தேக்கரண்டி

திராட்சை   - 2 தேக்கரண்டி

நெய்   - 3 மேஜை கரண்டி

செய்முறை:

சுத்தம் செய்த குதிரைவாலி அரிசியுடன் அன்னாசிச் சாறு, வெல்லம் சேர்த்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து, நெய்யுடன் கேசரியில் சேர்த்துக் கலந்தால்... செம ஸ்பெஷல் கேசரி ரெடி!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick