பேசுங்கள் முதல்வரே!

‘மத்திய அமைச்சர் என்ற முறையில் நாட்டில் இருக்கும் 28 மாநிலங்களும் என்னோடு தொடர்பில் இருக்கின்றன. ஆனால், 29-வது மாநிலமான தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அந்த மாநில முதல்வருடன் என்னால் பேசக்கூட முடியவில்லை. ஒரு முறை அல்ல, பல முறை முயற்சித்தும் அவரைச் சந்திக்கவோ, பேசவோ முடியவில்லை’ - டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இப்படிப் பேசியிருப்பவர், மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல். அவரது கருத்து உண்மை என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நிரூபிக்கிறது. மத்திய அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்குக்கூட இதுவரை ஒரு பதில் இல்லை.

ஒரு மத்திய அமைச்சர், மாநில முதல்வரைச் சந்திப்பது என்பது, நிர்வாகரீதியாக அடிக்கடி நடக்கிற, நடக்கவேண்டிய ஒரு நிகழ்வு. மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் மாநிலங்கள் இயங்கும் நிலையில், ஒரு கூட்டு அதிகார அமைப்பு என்ற முறையில் இரு தரப்பும் இணைந்துதான் செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் நிதிப் பங்கீடும் நிர்வாகப் பங்கீடும் சீராக நடைபெறும்.

இந்த இயல்பான ஒரு நிர்வாக நடவடிக்கைக்குக்கூட தமிழக முதல்வர் ஒத்துழைக்க மறுக்கிறார். அப்படி மத்திய அமைச்சர்களைச் சந்திக்க மறுப்பதற்கு குறிப்பான காரணங்களையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு இப்போதும் உச்சத்தில்தான் இருக்கிறது.

இந்த நிலையை மாற்ற புதிய மின் திட்டங்களைத் தொடங்க வேண்டும்; ஏற்கெனவே உள்ள திட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க அரசு பதவியேற்று ஐந்து ஆண்டுகாலம் முடியப்போகும் இந்தச் சமயம் வரை, ஒரே ஒரு யூனிட் மின்சாரம்கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லை.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சில முதல்வர்கள், தங்கள் மாநிலத்துக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால், டெல்லிக்கே நேரடியாகச் சென்று முகாமிட்டு காரியத்தைச் சாதித்துக்கொண்டு திரும்புகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, வலிய வருவோரையும் சந்திக்க மறுக்கிறார். எனில், அவரது எண்ணம்தான் என்ன? இது அலட்சியமா, ஆணவமா, அதிகாரத் திமிரா அல்லது போயஸ் தோட்ட வாசலில் நிற்கும் கட்சிக்காரர்களின் வரிசையில், மத்திய அமைச்சரும் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

இது தேர்தல் காலம். தங்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல்வாதிகள் முண்டியடித்துக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். ஏனெனில், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கும்போது, ‘நாங்கள் மக்களுக்காகத்தான் உழைக்கிறோம்' எனக் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பாவனைகூட ஜெயலலிதாவிடம் இல்லை. ஓர் இறுக்கமான மௌனத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறார்.

கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர், மறுபடியும் அதே பதவிக்கு வர விரும்பும் ஒருவர், மக்களுடன் உரையாடுபவராக இருக்க வேண்டும்; நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில், தன் கருத்து என்ன எனச் சொல்பவராக இருக்க வேண்டும். முதலில் முதல்வர் ஜெயலலிதா மௌனம் கலைக்கட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்