வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/gkarlmax: நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது ‘அதிருப்தி அலை’ இல்லை. ஜெயாவின் இந்தச் செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, தி.மு.க-வுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடங்களில் தி.மு.க ஆடிய ஆட்டத்தை மக்கள் மறக்கவில்லை. அதுதான்.

அதுமட்டும் அல்லாமல் தி.மு.க-வின் பலவீனத்தை, ஸ்டாலினைவிட விஜயகாந்த் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அது எப்படி? விஜயகாந்தின் அரசியலே இரண்டு திராவிடக் கட்சிகளின் பலவீனத்தின் மீது கட்டப்பட்டிருப்பதுதான். அதனால்தான் அவரது கோரிக்கைகள் தி.மு.க-வால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு மிகுதியாக இருக்கின்றன. கருணாநிதியைவிட, தி.மு.க அனுதாபிகள் இந்த விஷயத்தில் ரொம்பவும் தம் கட்டுகிறார்கள். விஜயகாந்த் தி.மு.க கூட்டணிக்கு வராமல்போனது ஸ்டாலினின் தோல்வி. இப்போதும் கருணாநிதிதான் அரசியல்வாதி. அவர் இறங்கிவந்து கெஞ்சியதுதான் கள யதார்த்தம். தேர்தல் முடிந்ததும் விஜயகாந்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற அவரது திட்டம் தோற்றுப்போய்விட்டது.

விஜயகாந்த் ம.ந.கூ-வுக்குப் போய்விட்டதால், ஏதோ அதன் மாண்பு கெட்டுவிட்டதுபோல புலம்புகிறார்கள். இது ஒரு சுயபுலம்பல். வைகோ அங்கு ஏற்கெனவே இருப்பதால், `மாண்பு' என்ற வார்த்தை எல்லாம் ம.ந.கூ விஷயத்தில் ரொம்பப் பெரிய வார்த்தைகள். அப்புறம் `நல்லகண்ணுவை ஏன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை?' எனக் கேட்கிறார்கள். காரணம் நம்மைவிட நல்லகண்ணுக்கு நன்றாகத் தெரியும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து அவர் அரசியலில் இருக்கிறார். நம் தமிழ்ச் சூழலில் கம்யூனிசம் என்பது ஒப்புநோக்க, மற்ற கட்சிகளின் அற விழுமியங்களைக் கேள்விகேட்க நாம் கையில் வைத்திருக்கும் ஒரு கருவி. அவ்வளவுதான். அதன் ஓட்டு பலம் என்பது மிகக் குறைவானது. ஃபேஸ்புக் லைக்கை எல்லாம் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்வது இல்லை என்பது தா.பாண்டியனுக்கும் தெரியும்.

ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்காகப் பாவம் சுமந்ததன் பயன் திருமாவுக்குக் கிட்டவில்லை; எந்தக் காலத்திலும் அது கிட்டாது என்பதுதான் கருணாநிதியின் அரசியல். தி.மு.க கூட்டணியில் இருந்து திருமா விலகியது, தி.மு.க-வுக்குப் பலவீனம் என்ற பேச்சு வருகிறது இல்லையா. அதுதான் திருமா சாதித்தது. அவர் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எல்லாம், நல்லகண்ணுவைச் சொல்வதுபோலத்தான். எப்படியும் ஜெயிக்கப்போவது இல்லை என்பதால் சொல்கிறார்போல.
இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்பதைவிட, எத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் தோற்றிருக்கின்றன என்ற வகையில் மக்கள் தெரிந்துகொள்ள நிறையக் காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மிக நேர்மையாக, எந்தக் கூச்சமும் அற்று மக்கள், அரசியல்கட்சிகளிடம் காசு வாங்குவார்கள். அந்த வகையில் எல்லா கட்சிகளையும்விட சீரழிவின் உச்சத்தை மக்களும் அடையப்போகும் தேர்தல் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்