வழிகாட்டும் பீஹார்

‘பூரண மதுவிலக்கு’ என்ற தேர்தல் வாக்குறுதியை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது பீஹார் மாநில அரசு. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்திருக்கும் மதுவிலக்கு அறிவிப்புக்கு மக்களின் ஆதரவு பெருகிவருகிறது.

நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமான பீஹாரின் மக்கள்தொகை 10 கோடி. இங்கு மொத்தம் 6,000 மதுக்கடைகள் செயல்பட்டுவந்தன. இவற்றில், நகர்ப்புறங்களில் உள்ள 656 கடைகளைத் தவிர்த்து, 38 மாவட்டங்களில் உள்ள மற்ற அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுகின்றன. மாநிலத்தில் சாராய உற்பத்தி முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள நகர்ப்புறக் கடைகளில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்தக் கடைகளும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் படிப்படியாக மூடப்படும்.

சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அதிகபட்சமாக மரணதண்டனை வரை விதிக்கப்படும். குடித்துவிட்டு ரகளை செய்தால், சிறைத் தண்டனையும் கடும் அபராதமும் உண்டு. ‘அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து கடத்திவந்து விற்கிறார்கள்’ என்றாலும் இதே தண்டனைதான். இவற்றைக் கண்காணிக்கவேண்டிய பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்தது. தவறினால், காவல் துறை மீதும் நடவடிக்கை பாயும். இப்படி முழு வேகத்தில் நடவடிக்கைகள் பீஹாரில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ‘நாங்கள் சொன்னதைச் செய்வோம்; சொல்வதைச் செய்வோம்’ என்கிறார் பீஹார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார். அந்தப் பெருமைக்கு அவர் தகுதியுடையவர்.

‘மது விற்பனை மூலம் ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. மதுவிலக்கைக் கொண்டுவந்தால் அந்த வருமானம் பாதிக்குமே!’ என அவர் தயங்கவில்லை. ‘வருவாயைவிட மக்களின் உயிர் முக்கியம்’ என்று சொல்லும் அவர், ‘எங்கேனும் சாராயம் காய்ச்சுவது தெரிந்தால் மக்கள் தாங்களே சென்று அவற்றை அழிக்க வேண்டும்’ என, இதை ஒரு மக்கள் நடவடிக்கையாக மாற்றுகிறார்.

ஆனால் தமிழ்நாட்டில், ஒரு குவார்ட்டர் பாட்டிலை உடைத்தால்கூட தேசத்துரோக வழக்கு போடுகிறார்கள். ‘பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்துவிட்டதாக’ பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடுக்கின்றனர். தமிழ்நாடு அரசின் மிகப் பெரிய பொதுச்சொத்து சாராய பாட்டில்கள்தான் என்பது டாஸ்மாக் போராட்டங்களில் நாம் தெரிந்துகொண்ட உண்மை.

`பூரண மதுவிலக்கு' என அறிவித்தாலும் பீஹார் அரசு, அதைத் தடாலடியாகச் செய்யவில்லை; படிப்படியாகவே செயல்படுத்த முனைகிறது. தமிழ்நாட்டிலும் இதைத்தான் கேட்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக, கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் எனப் பலவித சாத்தியங்களை முன்வைத்தாலும், அரசு கண் திறந்தும் பார்ப்பது இல்லை. இதோ தேர்தல் வந்துவிட்டது. ஆளும் கட்சி நீங்கலாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூடுவதை தங்களின் வாக்குறுதிகளில் ஒன்றாக முன்வைத்துள்ளன. `வெற்றிபெற்று ஆட்சி அமைப்பவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?' என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

 ‘ஓட்டு போடுகிறோம்... கடையை மூடுவீர்களா?’ என்பது நாம் அவர்களிடம் முன்வைக்கவேண்டிய முதல் கேள்வி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்