சொல்வனம்

படம்: சி.சுரேஷ்பாபு

ஒளி

முறைத்தபடியே செல்லும்
வாகனங்களைப் பார்த்து
சிரித்துக்கொண்டே கடக்கிறது.
பகலில்
விளக்கெரிந்து செல்லும்
பைக் ஒன்று.

தரிசனம்

யானைச் சாமிக்கு
கழுத்தில்
தங்கச் சங்கிலி
சாமி யானைக்கு
காலில்
இரும்புச் சங்கிலி.

    - ந.சிவநேசன்.

தொலைந்துபோனவன்

அரவமற்ற ரயில்நிலையத்தின்
சிமென்ட் இருக்கையில்
அழுக்கேறிய கறுப்பு உடையில்
பரட்டைத்தலையுடன் வீச்சமடிக்க
அவன் படுத்துக்கிடக்கிறான்.

அவன் உடை வண்ணமாகயிருந்திருக்கலாம்.
யாரோ எறிந்துவிட்டுச் சென்ற
பழைய துணி கறைகளின்
படிமங்களாகிக் கறுத்துவிட்டது.

அவன் இதுவரை பேசியதில்லை.
ஆதி மனிதனாகவே இருந்தான்
மொழிகள் அறியாததால்.

மழையும் வெய்யிலும்
குளிரும் உஷ்ணமும் பசியும்கூட
அவனின் நண்பர்களாகவே இருந்தன.

அவன் உண்கிறானா உறங்குகிறானா
உயிருடனிருக்கிறானா...
யாருக்குமே அக்கறை இல்லை.

ரயில் வரும் சமயங்களில் மட்டும்
ஆட்கள் வருவதும் போவதுமாகயிருந்தார்கள்
மனசில் நிறைந்த அழுக்குகளுடன்.

அந்த நேரங்களில் மட்டும்
படபடப்புடன் தேடத் தொடங்கும்
அவன் கண்கள்.
ரயில் போகும் வரையில் தேடுதல் நீடிக்கும்.

இப்படித்தான் நாட்களெல்லாம்
பல வருடங்களாகிவிட்டன.
அவன் உயிருடன் இருக்கும் வரையில்
தேடத்தான் போகிறான்.

கறுப்பு வெள்ளைக் காலத்தின்
பால்ய வயது ரயில் பயணமொன்றில்
தொலைந்துபோன/தொலைக்கப்பட்ட தன்னை.

- வலங்கைமான் நூர்தீன்

லட்டு மாதிரி இருப்பது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்