“ஜெயலலிதாவை தோற்கடிப்பேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

``டாஸ்மாக்குகளை மூட வேண்டும்.அதற்காக 590 முறைகூட சிறைக்குச் செல்லத் தயார்'' என அரசுக்கு எதிராக பாய்ச்சல் காட்டுகிற சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு வயது 24. தன் தந்தையுடன் மதுக் கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் நடத்தி 59 முறை கைதாகியிருக்கிறார்.

 மதுரை காந்திபுரத்தில் நந்தினியைச் சந்தித்தோம். ``ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பிரசாரம் பண்ணப்போறேன். நிச்சயமா அவங்களைத் தோற்கடிப்பேன்'' என அடுத்த இலக்கோடு பேசத் தொடங்குகிறார் நந்தினி. 

``தேர்தலில் போட்டியிடப்போகிறீர்களா?''

``எனக்கும் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால், 25 வயது ஆனால்தானே தேர்தலில் போட்டியிட முடியும்.''

``உங்கள் போராட்டம் வலுவாக இருந்தாலும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தமிழ்நாட்டின் ஒரு பெரிய கட்சியின் தலைவர்... அவரை உங்கள் பிரசாரங்களால் வீழ்த்த முடியும் என நினைக்கிறீர்களா?’’

``அவங்க பெரிய தலைவியாக இருந்தாலும் நம்மைப்போல சாதாரணமானவங்ககிட்டதானே வாக்கு கேட்டு வீதிக்கு வர்றாங்க. இந்தச் சாதார ணமானவர்கள் நினைத்தால்தான் அவர்கள் வெற்றிபெற முடியும். `ஒண்ணுமே பண்ண முடியாது'னு முடங்கியே இருந்தால் எப்படி? ஒவ்வொருவரும் `நாம தனியாகப் போராடி என்ன ஆகப்போகுது... நாட்டை திருத்தவா முடியும்?' என நினைக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் போராட வந்தால், தமிழகம் மிகப் பெரிய போராட்டக் களமாக மாறும்.''

``உங்களது முதல் போராட்டம் எப்படித் தொடங்கியது?’’

``என்னுடன் பள்ளியில் படித்த பானு, தொடர்ந்து படிக்க முடியாமல் வேலைக்குச் சென்றதற்குக் காரணம் அவளது அப்பாவின் குடிப்பழக்கம். இன்னொரு தோழி தமிழ்ச்செல்வி படிக்கவும் முடியாமல், வேலைக்கு செல்லவும் முடியாமல் அவளது குடும்பமே சீரழிந்து போனதற்குக் காரணம் மதுதான். என்னைச் சுற்றியே இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால், தமிழகம் முழுவதும் எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்? இந்த ஒரே ஓர் எண்ணம்தான் என்னை போராட்டக் களத்துக்கு இழுத்துவந்தது.

2011-ம் ஆண்டு, என் கல்லூரித் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, மதுரை இந்திரா நகர் ஏரியாவில் மது ஒழிப்புப் பதாகைகளை ஏந்தியபடி போராடினோம். அடுத்து தைப்பொங்கல் அன்று வைகை நதியில் `குடியால் தமிழகத்தை நாசம் செய்தவர்கள் நாசமாகப்போகட்டும்' எனப் பல பெண்களுடன் பொங்கல் வைத்தோம். அப்போதுதான் காவல் துறை எங்களுடன் வந்தவர்களை முதன்முதலில் மிரட்டினார்கள். என்னுடன் சேரக் கூடாது என, என் கல்லூரித் தோழிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. அதன் பிறகு ஒற்றை ஆளாகப் போராடத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை தமிழகம் எங்கும் 200 இடங்களுக்கு மேல் நானும் என் அப்பாவும் சைக்கிளில் சென்றே பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்