குடி குடியைக் கெடுக்கும் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
#BanTasmac தொடர்பாரதி தம்பி, படம்: எம்.முத்துக்குமார்

ரு சிக்கலைத் தீர்ப்பதற்கு, ஆகச்சிறந்த ஜனநாயகபூர்வமான வழி என்ன? அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்டு, பெரும்பான்மையானோர் என்ன சொல்கிறார்களோ, அதைச் செயல் படுத்துவது. டாஸ்மாக் கடைகளை மூடுவதா... வேண்டாமா என்பதில் ஒரு முடிவை எடுக்கவும் இதுதான் தீர்வு. ஆனால், இந்த விஷயத்தில் வாக்கெடுப்பு எதுவும் நடத்தாமலேயே முடிவு நமக்குத் தெரியும்.

‘கடைகளை மூடு’ என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கருத்து. அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்றால், அந்தக் கடை, அவர்களை வாழவிடாமல் துன்புறுத்துகிறது; உயிர்களைப் பலியாக்குக் கிறது; குடும்பத்தை நரகமாக்குகிறது. ஆனால் அரசோ, ‘மூட முடியாது. முடிந்ததைப் பார்த்துக்கொள்’ என்கிறது. `மக்களால் முடியுமா... முடியாதா?' என்பதுதான் இப்போது எஞ்சி நிற்கும் கேள்வி.

நமது செல்போன்களில், திடீரென காலர் ட்யூனை ஆக்டிவேட் செய்துவிடுவார்கள். நாம் தேர்ந்தெடுத்த திட்டத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றிவிட்டுவிடுவார்கள். போன் செய்து கேட்டால், ‘நீங்க வேணும்னா டிஆக்டிவேட் பண்ணிக்குங்க’ என்பார்கள். `நான் டிஆக்டிவேட் செய்வது இருக்கட்டும்... முதலில் யாரைக் கேட்டு என்னை அந்தத் திட்டத்தில் சேர்த்தீர்கள்?'என்போம். இந்தக் கதைதான் இப்போது டாஸ்மாக்கில் நடக்கிறது.

என் வீட்டு வாசலில் என்னைக் கேட்டா டாஸ்மாக் கடையைக் கொண்டுவந்தாய்? இப்போது கடையை மூடுவதற்கு மட்டும் எதற்கு நான் உன்னைக் கேட்க வேண்டும்? இப்படிக் கேட்பது, விதண்டாவாதம் அல்ல; சட்டத்தை மீறுவதும் அல்ல. சமூகத்துக்குத் தீங்கு விளை விக்கும் எந்த ஒன்றையும் தானாக முன்வந்து தடுப்பது, ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள மக்களின் கடமை. தேசபக்தி என்பதன் உண்மை யான அர்த்தம் இதுதான். இந்தக் கடமை அரசுக்குத்தான் முதன்மையானது. ஆனால், அந்தத் தீங்கை விளைவிப்பதே அரசுதான் எனும்போது, தவிர்க்க இயலாத வகையில் மக்கள் அந்தப் பொறுப்பை கையில் எடுக்க வேண்டி யுள்ளது.

சரி, இப்படி எல்லாம் அதிரடி செய்யாமல் சாத்வீகமான வழியில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான வாய்ப்புகளே இல்லையா? இருக்கிறது. அரசு அதிகாரிகளிடம் அல்லது நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுக்கலாம். பெரும்பாலும் எம்.எல்.ஏ., எம்.பி போன்ற மக்கள் பிரதிநிதிகளை இந்த விஷயத்தில் மக்கள் நம்புவதே இல்லை. டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அவர்களிடம் எவரும் மனு கொடுப்பதும் இல்லை. ஏனெனில், இவர்களால் ஒன்றும் முடியாது அல்லது இவர்களும் அந்தக் கள்ளக்கூட்டில் ஓர் அங்கம் என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளனர். எனவே, அவர்கள் மனு கொடுப்பது என முடிவு எடுத்துவிட்டால் அரசு அதிகாரிகளிடம்தான் போகின்றனர். முக்கியமாக, மக்களின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரியாக இருப்பவர் மாவட்ட ஆட்சியர். சாராயக் கடைகளை மூடுவதற்கு மட்டும் அல்ல... தங்களுக்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒன்றையும் தடுக்கவோ, நிறுத்தவோ மக்கள், ஆட்சியரிடம்தான் மனு கொடுக்கிறார்கள். ஆனால், அவரால் இதுபோன்ற திட்டங்களைத் தடுக்க முடியுமா... அதற்கான நிர்வாக அதிகாரம் அவருக்கு உண்டா?

நிச்சயம் இல்லை. அவர் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டுமானால் உதவுவார்; மூடுவதற்கு உதவ மாட்டார். இதை ஒரு வாக்கிய அழகுக்காகச் சொல்லவில்லை. ஒரு மாவட்ட ஆட்சியரின் அதிகார வரம்புகள் என்னென்ன... அவர் எதற்காக ஆட்சியராக இருக்கிறார்? அரசு கொண்டுவரும் பல்வேறு வகையான திட்டங்களை, முழுவீச்சில் செயல்படுத்தவும், அதன் பயன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தவுமே அவர் ஆட்சியராக இருக்கிறார். மாறாக, அரசின் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அல்ல. அப்படியானால், `டாஸ்மாக்' என்ற திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைவதை உத்தரவாதப் படுத்துவதுதான் அவருடைய வரையறுக்கப் பட்ட பணி. ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால், கடையை மூடுவதற்கு அவரிடமே மனு கொடுக்கிறோம். டாஸ்மாக் மட்டும் அல்ல... எந்த ஓர் அரசுத் திட்டத்தையும் ஓர் ஆட்சியரால் தடுத்து நிறுத்திவிட முடியாது. திட்டங்களை நிறுத்துவது அல்ல, செயல்படுத்துவதே அவரின் வேலை. அதற்குத் தடை ஏற்பட்டால் போலீஸைக் கொண்டு சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவர்களின் கடமை. எனவே, மாவட்ட ஆட்சியர் என்பவரை சர்வவல்லமை படைத்த நபராக நாம் நினைத்துக்கொள்வதும், அரசுத் திட்டங்களுக்கு எதிராக அவரிடமே மீண்டும் மீண்டும் மனு கொடுப்பதும், இந்த அரசு என்ற பிரமாண்ட நிறுவனம் குறித்த நமது மூடநம்பிக்கைகளில் ஒன்று.

சகாயம் போன்ற சில அதிகாரிகள் நேர்மை யாகவும் அதிரடியாகவும் செயல்படுகிறார்கள் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட துடிப்பு; ஆர்வம். அதை அந்த வேலைக்கான வரை யறையாகக் கூற முடியாது. ஒருவேளை அதுவே வரையறையாக இருந்திருந்தால், எல்லா மாவட்ட ஆட்சியர்களும் அதைச் செய்யவோ, செய்ய முயற்சித்திருக்கவோ வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்