கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

குஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குறித்து உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் உதிர்த்த வார்த்தைகள், அரசியல் இலக்கணம் மீறியவை மட்டும் அல்ல... அசிங்கத்தின் உச்சம். பிரச்னை பூதாகாரமாக வெடித்ததும், பா.ஜ.க துணைத் தலைவர் பதவியை தயாசங்கர் சிங்கிடம் இருந்து பறித்து, ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து இடைநீக்கமும் செய்திருக்கிறார்கள்.

பொதுவாக, பெண் அரசியல்வாதிகள் மீது ஏவப்படும் இத்தகைய விஷம்தோய்ந்த விமர்சனங்கள், இந்திய அரசியலில் புதிது அல்ல. தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் இத்தகைய இழிவு நிறைந்த வார்த்தைகளைக் கேட்க முடியும். ஓர் ஆண் அரசியல்வாதி விமர்சிக்கப்படுவதற்கும் பெண் தலைவர்கள் விமர்சிக்கப்படுவதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஆண் தலைவர்களின் அரசியல் தவறுகள், ஊழல் முறைகேடுகள் ஆகியவையே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், பெண் அரசியல்வாதிகள் என்றால், அவர் மீது மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏவக்கூடிய அஸ்திரங்களோ பாலியல்ரீதியிலான அவதூறுகளாகவே உள்ளன. ஒரு பெண் அரசியலுக்கு வந்து மக்கள் சேவையை ஆற்றினாலும், அதிகாரத்துக்கு வந்து தன் திறமையை நிரூபித்தாலும் அவரைத் தனக்குக் கீழான ஒரு பாலினமாகவே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவம் இது.

இந்திய விடுதலைப் போராட்டம் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றிபெறாது என்பதை உணர்ந்த மகாத்மா காந்தியடிகள், பெருமளவிலான பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்தார். தமிழகத்தில் திராவிட இயக்க எழுச்சியிலும் பெண்களின் பங்கு பெரியது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கர்ப்பிணிகளாகச் சிறைக்குச் சென்ற பெருமை பெண்களுக்கு உண்டு. தேசிய இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியவர்கள் பெண்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல அரசியலுக்குப் பெண்கள் வருவது குறையத் தொடங்கியது. அதற்கு முக்கியக் காரணம், பெண்கள் மீது வீசப்படும் இத்தகைய இழிவான விமர்சனங்களே.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவிகிதம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் குடும்பத்து ஆண்களின் நிழல்களாகத்தான் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பெண்களுக்கான 33 இடஒதுக்கீடு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அதைக் கொண்டுவருவதற்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து பெண் எம்.பி-க்கள் பலமுறை முயற்சிசெய்தாலும், இன்னமும் பலன் கிட்டவில்லை. இப்படி இருக்கும் சூழலே பலவீனமாக இருக்கும்போது, அரசியலுக்கு வரும் பெண்கள் மீதும் இத்தகைய மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அது இன்னமும் அரசியலில் பெண்களின் பங்களிப்பைப் பலவீனப்படுத்தும்.

தயாசங்கர் சிங்கை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தயாசங்கர் சிங் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மீது அதே அவதூறு வார்த்தைகள் பொழியப்பட்டுள்ளன. ஓர் அநீதிக்கான எதிர்வினை என்பது, இன்னோர் அநீதியாக இருக்க முடியாது. ஆண் அரசியல்வாதிகளைத் திட்டும்போதுகூட, அவர்கள் குடும்பத்துப் பெண்களை மோசமாக விமர்சிப்பது என்பது வழக்கமாக இருக்கிறது. ஆக, இந்தக் கட்சி... அந்தக் கட்சி என இல்லாமல் எல்லாக் கட்சிகளிலும் இத்தகைய மோசமான மனோபாவம் களையப்படவேண்டியது அவசியம்.

இந்த மாதம் 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். சுதந்திர தினம் என்பது இந்தியர்களின் சுயமரியாதையை உறுதிசெய்த நாள். தேசத்தின் சரிபாதியான பெண்களின் சுயமரியாதையை உறுதிசெய்வதும், அவர்கள் அரசியலில் சுயமாக இயங்குவதற்கான வெளியை உறுதியாக்குவதுமே, நமது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் சேர்க்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்