“இன்னொரு பிறவி எடுத்திருக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன்

திருமணத்துக்கு முன்னர் வரை அகம்-புறம் என அக்கறையோடு தன்னைக் கவனித்துக்கொள்கிற பெண், திருமணமான பிறகு அதையெல்லாம் மறந்துவிடுகிறாள். அதனாலேயே ஆண்களைவிடவும் பெண்கள் உடல் எடை அதிகரிப்பில் தொடங்கி, உளவியல் சிக்கல்கள் வரை வெவ்வேறு விதமான பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அலட்சியம் மட்டுமே காரணம் அல்ல... தன் குடும்பத்தின் மீதான அர்பணிப்பும்தான்.

தன் குடும்பத்தின் மீதான அக்கறையில் தன்னைக் கவனிக்க மறந்து, ஆபத்தான ஒரு நோயின் பிடியில் சிக்கி, பெரிய போராட்டத்துக்குப் பிறகு மீண்டுவந்திருக்கிறார் இ.மாலா. தொலைக்காட்சிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குநராகவும் பணியாற்றியவர்.

``என் கணவர் பாலசுப்ரமணியெம். `பிதாமகன்' தொடங்கி `இது நம்ம ஆளு' வரை பல படங்களின் ஒளிப்பதிவாளர். எங்களுடையது காதல் திருமணம். கவின், கருண் எனத் துறுதுறுப்பான இரண்டு மகன்கள். வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான், அந்த விபரீத நோய் என்னைத் தாக்கியது.

எனக்கு கடந்த மூன்று வருடங்களாக உயர் ரத்தம் அழுத்தம் இருந்தது. சிலமுறை மட்டும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தேன். `அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். முறையாக மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்' என, நம்பிக்கை தரும் வார்த்தைகளை மருத்துவர் சொன்னார். அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளைக் கொடுத்து தினமும் சாப்பிடச் சொன்னார்.

எதையுமே ஆரம்பத்தில் தொடர்ந்து செய்தாலும், நாட்கள் போகப் போக... சிறு அலட்சியம் உண்டாகும். சின்னச் சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும். எனக்கும் அந்த அலட்சிமும் சோம்பேறித்தனமும் எட்டிப்பார்த்தன.

மாத்திரைகளை அடுத்த வேளை சாப்பிட்டுக்கொள்ளலாம், அடுத்த நாளில் இருந்து சாப்பிடலாம் என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். ஆனாலும், தினமும் இயற்கை உணவு, நடைப்பயிற்சி என நாள் தவறாமல் செய்தேன். அப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் லேசான தலைவலி வந்தது. வலி ஏற்படும்போது சில மணித்துளிகள் தூங்கி விழிப்பேன். `தலைவலி' என என் கணவரிடம் சொன்னால் பயப்படுவார்; அவரது வேலையும் பாதிக்கும் என நினைத்து, அவரிடமும் அதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. சரியாக மார்ச் 6-ம் தேதி மாலை 3 மணிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த தலைவலி. என்னை அறியாமல் வாந்தி எடுத்து அப்படியே மயக்கம் போட்டு விழுந்துகிடந்தேன். இதுவரை நடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நடுவே மார்ச் 18-ம் தேதி மட்டும் ஞாபகம் கொஞ்சம் எட்டிப்பார்த்துச் சென்றது. அதன் பிறகு நான் கண்விழித்துப் பார்த்த நாள் ஏப்ரல் 9. சுமார் 20 நாட்களுக்கும் மேல்... இந்த உலகத்தில் என்ன நடந்தது என எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை. மறந்துபோய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால், என் வாழ்க்கையில் நடுவுல கொஞ்ச நாட்களைக் காணோம்'' என்கிறார் மாலா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்