ரோஜா பூக்களின் பறக்கும் முத்தங்கள்

கவிதை: பாப்பனப்பட்டு வ.முருகன்

டுக்கையில் இருந்து எழும் வரை காத்திருந்து
விழித்த அடுத்த கணத்திலேயே சற்றும் தாமதியாமல்
விரைந்து வந்து அணைத்துக்கொள்கிறது
ஆசைஆசையாய்ப் பதியனிட்டு நான் வளர்க்கும்
கொல்லைப்புற ரோஜாக்களின் மென்வாசம்.
வீட்டினுள் எங்கே சென்றாலும்
என்னுடனே வளையவரும் அது
நான் பல் துலக்கும்போது எதிரில் நின்று
பிங்க் நிறப் புன்னகையைக் காட்டி நிற்கிறது.
நான் குளிக்கும்போது கூடவே வந்து
ஒரு பூனைக்குட்டியின் மிருதுவோடு
முதுகு தேய்த்துவிடுகிறது.
நான் டிபன் சாப்பிடுகையில் பக்கத்தில் அமர்ந்துகொண்டு
‘இன்னும் கொஞ்சம் சாப்பிடு...’ என ஊட்டிவிடுகிறது.
நான் பேன்ட் - ஷர்ட் உடுத்தும்போது எதிரில் நின்றுகொண்டு
டக்-இன் செய்து டை கட்டிவிடுகிறது.
இருசக்கர ஊர்தியை உசுப்பி அலுவலகம் புறப்படும்போது
வாசல் வரை வந்து உற்சாகமாகக் கையசைக்கிறது.
மாலை வீடு திரும்பி முகப்புக்கேட்டை நெருங்கும்போது
ஒரு மழலைபோல ஓடிவந்து
கழுத்தைக் கைகளால் இறுக்கிச் சுற்றி
மார்போடு அணைத்துக்கொண்டு
கன்னம் நெற்றி என
மாறிமாறி எச்சில் முத்தம் தருகிறது.
இடைப்பட்ட நேரத்தில்தான்
போனால்போகிறது என உங்களுக்கும்
பறக்கும் முத்தங்களைக் கொடுத்தனுப்புகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்