பிராது மனு - சிறுகதை

சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம்

கொளஞ்சியப்பர் கோயிலுக்குள் வந்த தங்கமணி, சீட்டு கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஓர் ஆளிடம் கேட்டாள். அவன் சொன்ன மாதிரியே நடந்து சீட்டு கட்டுகிற இடத்துக்கு வந்தாள். ஒரு வன்னிமரத்தைச் சுற்றி, ஆள் உயரத்துக்கு இருபது முப்பது சூலங்கள் ஊன்றப்பட்டி ருந்தன. ஒவ்வொரு சூலத்திலும் ஐந்நூறு, ஆயிரம் சீட்டுகள் கட்டப் பட்டிருந்தன. சூலத்தில் இடம் இல்லாததால், கட்டப்பட்டிருந்த சீட்டுகளின் நூலிலேயே கொத்துக்கொத்தாக சீட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். தான் கொண்டுவந்திருந்த சீட்டை எந்த சூலத்தில் கட்டுவது எனப் பார்த்தாள். குண்டூசி குத்துகிற அளவுக்குக்கூட காலி இடம் இல்லை. சூலத்தில் கட்டப்பட்டிருந்த சீட்டுகளைப்போல, தன்னுடைய மடியில் வைத்திருந்த சீட்டை எடுத்துச் சுருட்டினாள். சுருட்டிய சீட்டை, சூலத்தில் கட்டுவதற்கு நூல் இல்லையே என்ற எண்ணம் அப்போதுதான் வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். துண்டு நூல் எதுவும் தரையில் கிடக்கவில்லை. அப்படியே மற்ற சீட்டுகளுக்கு இடையே செருகிவிடலாமா என யோசித்தாள். காற்று அடித்தால் மறுநொடியே கீழே விழுந்துவிடும். சீட்டில் எழுதிய வேண்டுதல் காரியம் நடக்காது. ரோட்டுக்குப் போய், பஸ் நிற்கிற இடத்தில் உள்ள பெட்டிக்கடையில் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டு திரும்பியபோது, பக்கத்தில் இருந்த அறைக்குள் ஓர் ஆள் போனான். அவனிடம், ``ரவ நூல் இருக்குங்களா?’’ எனக் கேட்டாள்.

``எதுக்கு?’’

``இந்தச் சீட்டைக் கட்டுறதுக்குங்க’’ - கையில் சுருட்டிவைத்திருந்த சீட்டைக் காட்டினாள் தங்கமணி.

``ஊட்டுலேயிருந்து எழுதி எடுத்தாந்தியா?’’

``ஆமாங்க.’’

``உன்னோட சீட்டு செல்லாது'' - கறாராகச் சொன்னான் சீட்டு கொடுப்பவன்.

``என்னாங்க சொல்றீங்க?'' - பரிதாபமாகக் கேட்டாள் தங்கமணி.

``நீ பாட்டுக்கு எழுதிக்கிட்டு வந்து சீட்டு கட்டிட்டுப் போறதுக்கு, நாங்க எதுக்கு இங்க ஆபீஸ் வெச்சிக்கிட்டுக் குந்தியிருக்கோம்?’’ - இளக்காரமாகக் கேட்டான்.

``நீங்க சீட்டு தருவீங்களா?’’

``ஆமாம்மா... `பிராது மனு’னு நாங்க ஒண்ணு  குடுப்போம். அதுலதான் நீ எழுதிக் கொண்டாந்து கட்டணும். அப்படி நீ கட்டினாத்தான், உன் கோரிக்கையை நிறைவேத்த சாமிய நான் அனுப்புவேன். இங்க கட்டியிருக்க சீட்டுகள் எல்லாம் அப்படித்தான் கட்டியிருக்கு’’ எனச் சொல்லிக்கொண்டே போய், அறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். தங்கமணிக்குக் குழப்பமாக இருந்தது.

`சீட்டுக் கட்ட போ’ எனச் சொன்ன சரோஜாவும் ஊர்க்காரர்களும் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையே என யோசித்தாள். சீட்டு கட்டுவதற்கு எனக் கிளம்பியபோது, நேராகச் சென்று பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியரிடம் சொல்லி, ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாள். சீட்டை எழுதிக் கொடுத்த ஆசிரியரும் ஒருவார்த்தை ‘விஷயம் இப்படி’ எனச் சொல்ல வில்லை. கையில் சுருட்டிவைத்திருந்த பேப்பரைத் தூக்கிப்போட்டுவிடலாம்போல கோபம் வந்தது. அதேநேரத்தில் ஒரு பேப்பர்தானே வாங்கி எழுதிக் கொடுத்துவிடலாம் என எண்ணிக்கொண்டு அறைக்குள் போனாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த சீட்டு கொடுப்பவனிடம், ``ஒரு சீட்டு குடுங்க’’ எனக் கேட்டாள்.

``பிராது மனு கட்டணுமா... படிப்பணம் கட்டணுமா?’’

``சீட்டுதாங்க கட்டணும்.’’

``சீட்டு இல்லம்மா, பிராது மனு. பிராது மனு கட்டணும்னா இருநூறு; படிப்பணம் கட்டணும்னா நூறு’’ எனச் சொல்லிவிட்டு, தங்கமணியை ஏற-இறங்கப் பார்த்தான். பிறகு, மேசை மீது இருந்த மூன்று நான்கு நோட்டுகளை எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவைத்தான். மேசை டிராயரைத் திறந்து, பேனாவை எடுத்து மேசை மீது வைத்தான். சாவியை எடுத்துப் பக்கத்தில் இருந்த பீரோவைத் திறந்து லெட்டர்பேடு மாதிரி இருந்த ஒரு நோட்டையும், பில்புக் மாதிரி இருந்த ஒரு நோட்டையும் எடுத்து மேசை மீது வைத்துவிட்டு பீரோவைப் பூட்டினான். பிறகு, தங்கமணியிடம் கேட்டான்...

``என்னா ஊரு?’’

``கழுதூருங்க.’’

``இங்கிருந்து எம்மாம் தூரம்?’’

தொலைவான ஊரில் இருந்து வந்திருக்கிறேன் எனச் சொன்னால் உதவி செய்வான் என்ற நம்பிக்கையில், ஐந்து மைல் தூரத்தைக் கூட்டிச் சொன்னாள்.

``அப்படின்னா பிராது மனு பணத்தோட நூறு ரூவா சேர்த்துக் குடு.’’

``மின்னாடி இருநூறு ரூவானுதான் சொன்னீங்க?!’’ - தூரத்தைக் கூட்டிச்சொன்னது தவறாகப் போய்விட்டதே என நினைத்தாள்.

``இருநூறு ரூவா சாமிக்கு; நூறு ரூவா சாமியோட குதிரைக்கு’’ - லேசாகச் சிரித்தான். அவன் சிரித்ததைப் பார்க்காமல், ``குதிரைக்கா பணம்?!’’ என ஆச்சர்யமாகக் கேட்டாள் தங்கமணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்