இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

ப.திருமாவேலன்

`அரங்கமும் அந்தரங் கமும்’ என்று ஒரு நாவல் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். அரசியல்வாதி, தொழிலதிபர், போலீஸ் அதிகாரி, நீதிபதி ஆகிய நால்வரும் நண்பர்கள். பகலில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், இரவில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் நாவலின் தொடக்கமும் முடிவும். திருச்சி சிவா-சசிகலா புஷ்பா விவகாரம், நாவல் அல்ல; அரசியலில் புரையோடிப்போன கழிசடைத் தனத்தின் முற்றிப்போன துர்நாற்றம்!

சிவாவுக்கும் சசிகலாவுக்கும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. அதை மறுக்கவில்லை; மறைக்கவும் விரும்பவில்லை. தி.மு.க., இளைஞர் அணியை உருவாக்கிய காலத்தில் இருந்து நாடு அறிந்த பேச்சாளர், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைபெற்றவர், எழுத்தாளர், எவரையும் பாராட்டிப் பழக்கம் இல்லாத முரசொலி மாறனே, ‘சிவா போன்றவர்களை நாடாளு மன்றத்துக்கு அனுப்பிவையுங்கள்’ என கருணாநிதியிடம் தி.மு.க பொதுக்குழுவிலேயே கோரிக்கைவைத்தார். ஈழத் தமிழர் பிரச்னை முதல் திருநங்கைகள் கண்ணீர் வரை சிவா நாடாளுமன்றத்தில் நெக்குருகப் பேசிய காட்சிகள் நிழலாடுகின்றன. இது அவர் பக்கம்...

அ.தி.மு.க-வில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி என்பதும் அபரிமிதமானது. ஐ.ஏ.எஸ் ஆவதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. தன்னால் முடியாவிட்டாலும் அதற்கான ஆர்வம் உள்ளவர்களை உருவாக்க ‘டீம்’ என்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனத்தை நடத்திவந்தார். பின்னர் அதை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டார். தூத்துக்குடியில் ஜெ.ஜெ கட்டணம் இல்லா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தொடங்கினார்.  பின்னர் அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் ஆக்கப்பட்டார். சசிகலா என்ற பெயருக்காகவே ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி 2011-ம் ஆண்டு  தரப்பட்டது. ஆனால், கூட்டணிக்குத் தொகுதி போனதால் இவருக்கு வாய்ப்பு பறிபோனது.

தூத்துக்குடி மாநகராட்சித் தலைவர் ஆனார். அப்படி இருக்கும்போதே அ.தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் பதவி கிடைத்தது. மாநிலம் முழுவதும் சென்று அவர் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் பேசவும் தலைமைக்கழகம் வாசல் வைத்துக் கொடுத்தது. அ.தி.மு.க-வில் ஒரு பதவியைத் தக்கவைப்பதே சிரமம். ஆனால், இவர்  மாநகராட்சித் தலைவராக இருக்கும்போதே அந்தப் பதவியைவிட்டு விலக்கிவைக்கப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். இவை எல்லாவற்றையும்விட அவருக்குக் கிடைத்த கெளரவம்... அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்கும் மகத்தான வாய்ப்பு இவருக்குத் தரப்பட்டது. இவ்வளவு உச்சத்தை அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் பெற்றவர் எவரும் இல்லை. அதுவும் எந்தப் பெண்ணும் இல்லை. உச்சிக்குப் போனால் இறங்கித்தானே ஆகவேண்டும். ஆனால், உருட்டித் தள்ளப்பட்டுவிட்டார் சசிகலா புஷ்பா. காரணம், அவரேதான்!

‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என எம்.ஜி.ஆர். பாட்டை ரெக்கார்டு தேயும் வரை போடுகிறார்கள். ஆனால், யாரும் அப்படி நடப்பது இல்லை. தன்னையே சசிகலாவாக நினைத்துக்கொண்டார்போலும். போயஸ் கார்டனின் நிழல்கள் தொடங்கி, போலீஸ் அதிகாரிகளில் சிலர் வரை சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்கள். அதாவது, தன்னைப் பற்றி எந்தப் புகார் வந்தாலும் அது கார்டன் வாசலை எட்டாதவாறு, அந்த போலீஸ் அதிகாரி மூலமாக தடுப்புச் சுவர் எழுப்பியும், அப்படியே கார்டனுக்குள் போய்விட்டால் அம்மா கவனத்துக்கு போய்விடாதவாறு தடுக்க அந்த நிழல் மனிதரைப் பழக்கியும் வைத்திருந்தார். ஆனால், இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பலவீனமான நெட்வொர்க் கொண்டவரா ஜெயலலிதா?

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆடியோ வெளியானது. அடுத்து சில படங்கள் வெளியாகின. தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் இணைந்து இருக்கும் காட்சிகள் கொண்டவையாக அந்தப் படங்கள் இருந்தன. அவை ஒட்டுப் படங்கள் எனவும் செய்திகள் வந்தன. இருவருக்கும் பரஸ்பர நட்பு இருந்ததைத் தெரிந்துகொண்டு எதிரிகள் உருவாக்கிய ஆதாரங்களாக அவை இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்