மத்திய சிறைவாசி எண்: 3718 - சிறுகதை

சிறுகதை: லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

ன்புள்ள விஜி…

நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்கச் சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொரு முறை உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும், சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய். எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவை அடிக்கடி பார்க்கப்போறம்மா?’ என ஆதிரா கேட்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தையே பதிலாகச் சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அநேகரும் என் முதுகுக்குப் பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்துவைத்திருப்பது போல் சிரித்துக்கொள்கிறார்கள். இப்போது எல்லாம் என் பாதைகள் எங்கும் அவமானத்தின் நகைப்புகள் முதுகில் ஏறி தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன. எதிர்காலம் குறித்து எந்தவிதமான நம்பிக்கையையும் உனக்கு இப்போது தர முடியாதுதான். ஆனாலும் உனக்கே உனக்கான அமுதாவாக, இந்த வாழ்வை வாழும் உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த மாதத்தில் வந்து பார்க்கிறேன். (உனக்கு தேவையானதை வாங்கிக்கொள். நான் வரும்போது பணம் தருகிறேன்.)

 - அமுதா.

இந்தக் கடிதம் விஜியின் கைகளில் கிடைத்தபோது, அவன் வேலூருக்கு மாற்றப்பட்டு பத்து நாட்கள் ஆகியிருந்தன. பதில் கடிதம் எழுதும் சூழல் அவனுக்கு வாய்க்கவில்லை. தண்டனை நிமித்தமாக, மதுரை சிறையில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து அச்சம் உடலின் ஒவ்வொரு நரம்பினுள்ளும் நுழைந்து அவனைத் தூங்கவிடவில்லை. கடும் தண்டனைகளுக்கான தனிமைச் சிறையில் எட்டு நாட்களுக்கும் மேலாக அடைத்துவைக்கப்பட்டிருந்த விஜிக்கு, பகல் இரவு எல்லாமும் இருளின் பிம்பங்களாகவே தெரிந்தன. வெளிச்சம் கசிந்துவருவதற்காக வைக்கப்பட்ட சின்னஞ்சிறு ஜன்னலை மறைத்தபடி உயர்ந்து வளர்ந்து இருந்தது மரம். அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான அவனது அழுகைக்கும் கண்ணீருக்கும் ஆறுதலாக ஒருவரும் இல்லாத தனிமை. பிரிவின் அதீதத் துயரமே நமக்கு விருப்பமானவர்களின் குரலையோ ஸ்பரிசத்தையோ உணர முடியாமல் ஏற்படும் தவிப்புதான்.

முதா அவனின் காதலி என்றாலும் அவளுக்குத் திருமணமாகிவிட்டது. சொல்லப்போனால் அவளின் திருமணத்துக்குப் பிறகுதான் அவளை இவனுக்குத் தெரியும். காட்டுமரம் போன்றதொரு தேகம். அபூர்வமாகவே பெண்களுக்குள் இருக்கும் வலு அவளுக்கு. தன்னைவிடவும் மூன்று வயது அதிகம் என்பதால், அவளோடு பேச அதீதக் கூச்சமும் அச்சமும் இருந்தன. தன்னை எதிர்கொண்ட சில நாட்களிலேயே தன் மீது அவனுக்கு இருக்கும் எண்ணத்தை அமுதா புரிந்துகொண்டாலும், அவன் வயது காரணமாக அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. பிறழ்வின் எந்தத் தடயங்களையும் அமுதா அவனுக்குக் காட்டியது இல்லை. விடிகாலையில் மொத்தத் தெரு ஆட்களும் தத்தம் வீட்டுவாசலில் குழாயில் தண்ணீர் அடித்துக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தை விலக்கி இவன் கண்கள் தெளிவாக அவளை அடையாளம் கண்டுகொள்ளும். தூரத்தில் இருந்து சில நொடிகள் அவளும் கவனித்துத் திரும்புவாள். தன்னை மீறி அவனுக்குள் எழும் உணர்வு எழுச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள ஒரே காரணம் மனோ அண்ணன்தான்.

மனோ அண்ணாவை, தெருவில் எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கும். அவர் ராணுவத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊரிலேயே கிடப்பார். அமுதாவைவிடவும் அரை அடி உயரம் குறைவு. எப்போதும் கண்களில் ஒளிரும் விளையாட்டுக் குணம். மனோ அண்ணா விடுமுறைக்கு வருவதும், இந்தப் பயல்களோடு கிரிக்கெட் விளையாடுவதும், மாலை நேரங்களில் மது அருந்துவதும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தன. விஜிக்கு மட்டும் அவரை எதிர்கொள்ளும்போது தாங்கொண்ணாத குற்றவுணர்ச்சி எழும். தன்னை எதிர்கொள்ளத் தயங்கி விலகுகிறவர்களிடம்தான் மனிதர்களுக்கு இயல்பாகவே கவனமும் அக்கறையும் வரும். அவருக்கும் விஜியின் மீது அப்படியாகவே நிகழ்ந்தது.

“ஏன்டா என்னக் கண்டாலே ஓடுற?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே. வேலை…”

“பெரிய பொடலங்கா வேலை… நம்ம ஏரியாவுல இருக்கிறதே நூறு வீடு. அதுக்கு ஒரு கேபிள் டி.வி ஆபரேட்டர். இதுல என்ன கேபிள் பிரச்னை வரப்போகுது? இன்னிக்கு மதியம் வீட்டுக்கு வா. உன் அத்தாச்சி நாட்டுக்கோழி அடிச்சிருக்கா!'' என்றதும், அவனுக்குத் தயக்கமாகிவிடும். எப்படி எந்த உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளாமல் இருவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது? அதன் பிறகு, அவர் விடுமுறை முடிந்து ஊருக்குப் போகும் வரை கண்ணில் படவில்லை. ஊருக்குக் கிளம்பின தினத்தில் பார்க்கவந்த விஜி, அவர் பையை எடுத்துக்கொண்டு அவரோடு ரயில் நிலையம் போனான்.
“டேய், அன்னிக்கு சாப்பிட உன்னை வரச் சொன்னேன்ல… ஏன் வரலை?” - மனோ அண்ணா மறக்காமல் கேட்டார்.
 
விஜிக்கு தொண்டையில் முள் அடைத்துக் கொண்டதைப்போல் ஆகிப்போனாலும் சமாளித்து, “முரளி அண்ணன் இப்ப புதுசா அப்பக்கரையிலயும் கேபிள் நெட்வொர்க் ஆரம்பிச்சிருக்காருண்ணே. கலெக்‌ஷனுக்குப் போயிட்டேன்” - சிரித்தான்.

“இதெல்லாம் ஒரு காரணமாடா? சரி, இதுவே பொழப்புனு இருந்துடாத. ஒழுங்கா ஜிம்முக்குப் போ. அடுத்தவாட்டி வரும்போது எங்கே, யாரைப் பார்க்கணும்னு சொல்றேன். செலெக்‌ஷன் இருக்கும். மிலிட்டரிக்கு வந்துடு.”

விஜி வெறுமனே `சரி' எனத் தலையாட்டிக் கொண்டான்.

இரவு நேர ரயில் நிலையத்தில் அதிகக் கூட்டம் இல்லை. அவர் செல்லவேண்டிய ரயில் வருவதற்கு நிறைய நேரம் இருந்தது. முன்னரே தண்ணீர் பாட்டிலில் ரம்மை நிரப்பி இருவரும் எடுத்துவந்திருந்தனர். கடைசியாக வெளிச்சம் இல்லாமல் தனித்துக் கிடந்த கல் இருக்கையில் அமர்ந்து பேசியபடியே இருவரும் மெதுவாக மது அருந்தினர்.

அவர் தெருவில் இருக்கும் பெண்கள் குறித்து இயல்பாகப் பேசியபடியே “நீ இன்னும் சும்மாத்தான் இருக்கியாடா, ஏரியாவுக்குள்ள ஒண்ணுமா செட் ஆகல?” கேட்டார்.

“ச்சே… ச்சே… அதெல்லாம் இல்லண்ணே. எனக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம்?” - முகத்தை வேறு பக்கமாக வைத்துக்கொண்டே சமாளித்தான்.

“சரி... சரி, மொச புடிக்கிற நாய் மூஞ்சியைப் பாத்தா தெரியாது. நான் தப்பா எதுவும் கேக்கலைடா. யாரையாச்சும் லவ் பண்றியா... எப்ப கல்யாணம் பண்ணப்போற?”

விஜிக்கு மனம் ஆறுதல்கொண்டாலும், அது தற்காலிகமானதே என்பதையும் தெரிந்து கொண்டான். தனது மனதை அரிக்கும் ஒன்றை எங்கு உளறிவிடுவோமோ என்ற தயக்கத்தில் மதுவின் வீரியம் போதையாகத் தலைக்கு ஏறும் முன்னர் கிளம்பிவிட நினைத்து, “சரிண்ணே...

நீ பார்த்துப்போயிட்டு வா. நான் வீட்டுக்குப் போறேன்” பெஞ்ச்சில் இருந்து எழுந்துகொண்டான்.

மனோ, அவன் கைகளைப் பிடித்து நிறுத்தினார்.

“ஏன்டா, ஊர்ல இருக்கிறப்போதான் முகம்கொடுத்துப் பேச மாட்டேங்கிற, கிளம்பும்போதாச்சும் பேசவேண்டியதுதானே?”

“இல்லண்ணே, தம்பிக்கு ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் பிரச்னை. அது சம்பந்தமா முரளி அண்ணங்கிட்ட பேசியிருந்தேன். இப்போ போனாத்தான் சரியா இருக்கும்.”

மனோ, அவன் கைகளை விட்டுவிட்டு என்ன ஏதென்று கேட்காமல், பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணம் எடுத்து அவனிடம் கொடுத்தார். “இதை வெச்சுக்கடா… ஏதாச்சும் வேணும்னா அமுதாகிட்ட கேளு. நான் அவகிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறேன். அப்புறம் வீட்ல வாட்டர் டேங்க் க்ளீன் பண்ணணும்னு சொல்லிட்டிருந்தா. யாராச்சும் ஆள் இருந்தா வரச்சொல்லு.”

“சரிண்ணே…”

விஜிக்கு அவரைத் திரும்பிப் பார்க்கவே கூச்சமாக இருக்க, அவசரமாக அங்கு இருந்து கிளம்பிவிட்டான்.

அடுத்த நாள் பிற்பகலில், வீட்டுக்கு வரச்சொல்லி அமுதாவே அவனுக்குத் தொலைபேசினாள். தனக்கு விருப்பமான பெண் மட்டுமே இருக்கும் இடத்தில், ஓர் ஆணுக்கு வரும் கூச்சத்தோடு உட்காரக்கூட முடியாமல் ஹாலின் ஒரு மூலையில் ஆதிரா சுவரில் வரைந்திருந்த உயிர் எழுத்துக்களைப் பார்த்தபடி நின்றான்.

“இந்தாடா… உங்க அண்ணன் குடுக்க சொன்னாரு!”

அவள் கையில் கொஞ்சம் பணம் இருக்க “இல்லை... பணம் வேணாம். பிரச்னை சரியாகிடுச்சு. இனி தேவைப்படாது.”

அவள் சிரித்தாள். “சரிடாப்பா. மானஸ்தா, வாங்கிக்கோ வேற எதுக்காச்சும் தேவைப்படும்” - வம்படியாக அவன் சட்டைப்பைக்குள் திணித்தபோது, அவள் கைகளில் இருந்து மலர்களின் நறுமணம் கசிந்து அவனுக்குள் சேர்ந்துகொண்டது.

“உக்காரு... இருந்து சாப்பிட்டு போ''. இந்தச் சில நிமிடத் தனிமைக்கே மனம் பல்லாயிர முகம்கொண்டு சிலிர்த்துக் கிளர்ந்தது.

“இல்லை, நான் சாப்பிட்டேன். கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வர்றேன்” - அவசரமாகப் புறப்பட இருந்தவன், கதவுக்கு அருகில் வரை சென்று திரும்பினான்.

“வாட்டர் டேங்க் க்ளீன் பண்ண கேட்டிருந்தீங்களாமே. யாரையும் கூப்பிட வேணாம். நாளைக்குக் காலையில நானே வந்து பண்ணிவிடுறேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்