"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

ம.கா.செந்தில்குமார், படம்: மீ.நிவேதன்

‘‘`இன்னொரு முகமும் நீங்கதான்’னு ட்ரெய்லர்லயே சொல்லீட்டீங்கன்னா, படத்துல எப்படி சஸ்பென்ஸ் இருக்கும்?’னு பலர் கேட்டாங்க. ஆனா, படத்துல இது சஸ்பென்ஸ் கிடையாது. அதைத் தாண்டிய பல ஆச்சர்யங்கள் ‘இருமுகன்’ல இருக்கு’’ - அறிமுகநாயகன்போல மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் சீயான் விக்ரம். முதல்முறையாக இரு வேடங்கள், நயன்தாராவுடன் ரொமான்ஸ்... என ‘இருமுகன்’ படத்துக்கு இப்போதே ஏக எதிர்பார்ப்பு.

‘‘எனக்கு டபுள் ஆக்‌ஷன் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. நான் ‘வி.ஐ.பி’-யில் அப்பாஸுக்கு டப்பிங் பேசின காலத்திலேயே `பண்ணினா, இப்படி அப்பாஸ், பிரபுதேவா கேரக்டர் மாதிரி டபுள் ஆக்‌ஷன் பண்ணணும்'னு ஆசைப்பட்டேன். நிறையப் பேர் டபுள் ஆக்‌ஷன் சப்ஜெக்ட்டோடு வந்தாங்க. ஆனா, நான் நினைச்சது மாதிரி இல்லை. ‘இருமுகன்’ படத்துலதான் அப்படி அமைஞ்சிருக்கு. இதுல அந்த இரண்டு கேரக்டர்கள், ட்வின்ஸ் கிடையாது; அப்பா-மகன் கிடையாது; அண்ணன்-தம்பி கிடையாது. ரெண்டு பேரும் வேற யார் யாரோ. அதுதான் இதுல எனக்கான சவால். நான் ஏற்கெனவே ‘அந்நியன்’, ‘ஐ’ படங்கள்ல நிறைய கேரக்டர்கள் பண்ணியிருந்தாலும், அவை எல்லாமே ஒரே ஆள்தான். அதனால, அவர்கள் ஒரே ஃப்ரேமில் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்துல ஒரே ஃப்ரேமில் இரு வேறு ஆளாக இருப்பது பெரிய சவால். படத்துல வர்ற ‘லவ்’ங்கிற அந்த நெகட்டிவ் கேரக்டர் ஃப்ரேம்ல வந்து நின்னாலே அப்படி ஈர்க்கும்.’’

‘‘பெண் தன்மையுடன் வர்ற அந்த நெகட்டிவ் கேரக்டர் `லவ்’ ஆணா அல்லது திருங்கையா?’’

‘‘ அது ஒரு ஸ்டைல். அவன் டிரெஸ்ஸிங் சென்ஸ் வேற மாதிரி இருக்கும். அவனுக்கு எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கணும். அழகுன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த கேரக்டருக்கு என ஒரு மேனரிசம் இருக்கும். அவன் தன்னை வெளிப்படுத்திக்கிறது அப்படி இருக்கும். மற்றதை நீங்க படத்துல பாருங்க.’’

``நயன்தாராவுடன் முதல் படம். ஏன் இவ்ளோ லேட்?''

‘‘நயன்தாரா, சீனியர் ஹீரோயின். காசுக்காக கமிட் ஆனோம், வந்தோம், போனோம்னு ஏனோதானோனு இருக்கிறது அவங்களுக்குப் பிடிக்காது. கதையில், கேரக்டரில், படத்தில் அவ்வளவு ஆர்வமா பங்கு எடுத்துப்பாங்க. அதுல என்ன எல்லாம் பண்ண முடியும், எது ஸ்கேல்னு ரொம்பக் கவனமா இருக்கிற ஆக்ட்ரஸ். இருக்கிற ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் உயிர் கொடுக்கிறவங்க. ஏன் இவ்ளோ லேட்னு எனக்கும் தெரியலை. ஆனா, இதுல எங்க காம்பினேஷன். எல்லாருக்கும் பிடிக்கும்.''

``ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்கள்... எப்படித் தேர்வு செய்றீங்க?''

‘‘நான் ஸ்கூல்ல இருந்தே அப்படித்தான். ஸ்கூல் நாடகம்னாலே நான்தான் ஹீரோ. அப்ப ஜூலியஸ் சீஸர் பண்ணச் சொல்வாங்க. ‘அது போரிங். நான் புரூட்டஸ் பண்றேன்’ என்பேன். இப்படித்தான் ஒவ்வொரு கேரக்டரையும் அப்ப தேடுவேன். வித்தியாசமான கேரக்டரா இருக்கணும். ஆனா, அதுல நான் இருக்கக் கூடாதுனு தேடுவேன். எனக்கு எட்டாங்கிளாஸ் படிக்கும்போதே அந்த எண்ணம் இருந்திருக்கு.

‘சேது’ படம் மூலம் ஓர் அங்கீகாரம் கிடைச்சப் பிறகு பணம் இரண்டாம்பட்சமாகிடுச்சு. பி.சி.சார், ‘தன்னைக் கொடுமைப்படுத்திக்கொள்வது விக்ரமுக்கு ரொம்பப் பிடிக்கும்’ (அவர் வாய்ஸிலேயே பேசுகிறார்) என்பார். இப்ப நினைச்சுப்பார்த்தா, `நானே நினைச்சாலும் இப்ப திரும்பவும் ‘ஐ’ பண்ண முடியாது’னு தோணுது. அதனால அப்படியான கேரக்டர் வரும்போது பிடிச்சுக்கணும்.’’

‘‘ `பி.சி’னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது.  ‘ஐ’ படத்துக்காக உங்களுக்குத் தேசிய விருது கிடைக்கலைனு வருத்தப்பட்டாரே?’’

‘‘பி.சி சார்தான் என் குரு. இதை அவர் கேட்டார்னா, ‘அவன் யாருடா குரு?’ம்பார். ‘மீரா’ படம் பண்றதுக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல சிக்கி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். இனிமேல் நடிக்க முடியாதுனு நினைச்சு, அசிஸ்டன்ட் கேமராமேனா ஜாயின் பண்ணலாம்னு பி.சி சார்கிட்ட போய் நின்னேன். ‘நிறையப் பேர் இருக்காங்க’னு திருப்பி அனுப்பிட்டார். அப்படி குருவா பார்த்த மனிதரே ‘மீரா’வுல என்னை இயக்கினார். அவர்கிட்ட திரும்ப வொர்க் பண்ணணும்கிறதுதான் அப்ப என் கனவு. ‘ஐ’யில அது நடந்தது. என்ன ஒரு அழகுன்னா இப்பவும் என்னை அதே மாதிரியேதான் ட்ரீட் பண்றார். ‘ஏய் ஷட் அப்’னு திட்டுவார். இப்ப சமீபத்தில் ‘உங்களைப் பாக்கணும்னு தோணுது சார்’னேன். ‘சிவகார்த்தியேன் ஷூட்டிங்ல இருக்கேன். வா’னு சொன்னார். போனேன். ‘உட்கார்’னு சொல்லிட்டு லைட்டிங் பண்ணிட்டிருந்தார். அடுத்த ஐந்து நிமிஷத்தில் ‘ஏய்... நீ கிளம்பு. என்னால என் வேலையில கவனம் செலுத்த முடியலை. உனக்கு உட்கார சேர் இருக்கா, குடிக்க எதுவும் தேவையா?’ங்கிற யோசனையே ஓடிட்டிருக்கு’னு சொன்னார். யெஸ் மனிதர் அப்படியேதான் இருக்கார். என்னளவில் இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர் என் குரு பி.சி சார்தான்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்