தூண்டிலுக்கு அப்பாற்பட்டவை தீர்வுகள்!

‘அலைகளும் ஓய்வதில்லை... தமிழக மீனவர்களின் துயரங்களும் ஓய்வதில்லை’ என்ற நிலைதான் இன்றைய யதார்த்தம்.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது ‘தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் குற்றம் சுமத்தி இலங்கை ராணுவத்தினர் அவர்களின் மீன்பிடி வலைகளைக் கிழித்து எறிவதும், படகுகளைக் கைப்பற்றிச் சேதப்படுத்துவதும் சிறைப்படுத்துவதும், ஏன் பல சமயங்களில் மீனவர்களையே சுட்டுக் கொல்வதும் முடிவே இல்லாத துயரமும் அவலமும் நிறைந்த நெடுங்கதையாக நீள்கிறது.

இப்போதும் இலங்கைச் சிறையில், 77 மீனவர்கள் சிறைப்பட்டுக்கிடக்கிறார்கள்; 102 விசைப்படகுகளை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். நம் மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக மீட்பதோடு, இதுபோன்ற துயரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க மத்திய அரசால் ஏன் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை? காக்கா - குருவிகளைப்போல சுடப்படுவதும் கைதுசெய்யப்பட்டு சிறையில் சித்ரவதை அனுபவிப்பதும் பாரம்பர்ய மீனவர்கள், மீனவக்கூலிகள் என்பதால்தானா?

இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையே பல வருடங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்த மாத இறுதியிலும் இப்படி ஒரு பேச்சுவார்த்தை மீண்டும் நடக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், நம் நாட்டின் தரப்பில் இருந்து நாட்டுப்படகு மீனவர்களின் பிரதிநிதிகளையும், மீனவக் கூலிகளாக விசைப்படகில் வேலை செய்பவர்களின் பிரதிநிதிகளையும் நிச்சயம் இடம்பெற செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் `துனா ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தினால், சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவது குறையும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது சுமார் 975 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் திட்டம் என்றும், இதைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தினாலே மூன்று ஆண்டுகள் வரைகூட ஆகலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல ராமநாதபுரத்தின் தென்பகுதியில் இருக்கும் மூக்கையூர் என்ற இடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக அமையும். ஆளும் அ.தி.மு.க அரசு, தனது எம்.பி-க்களின் பலத்தைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதலையும் நிதியையும் பெற வேகமாக முயற்சிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையே இப்படி பல பேச்சுவார்த்தைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் பல கூட்டங்கள் பிரச்னைக்கு முடிவு காணாமல் பாதியிலேயே முறிந்துபோயிருக்கின்றன. இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் கூட்டமும் அப்படி ஒரு சம்பிரதாயமான கூட்டமாக இல்லாமல்... இலங்கைச் சிறையில் வாடும் நம் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்டெடுக்க உதவிசெய்யும் கூட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் தமிழ் பேசும் இருநாட்டு பாரம்பர்ய மீனவர்களுக்கும் இடையே சுமுகமான ஒரு சூழ்நிலையை உருவாக்க... இலங்கை அரசும் இந்திய அரசும் தமிழக அரசும் தொலைநோக்குப் பார்வையோடும், சர்வதேசச் சட்டவிதிகளுக்கு இணங்க ஒரு தீர்வைக் காண்பது அவசியம்.

அரசியல் தூண்டிலுக்கு அப்பாற்பட்டிருக்கின்றன மீனவர்களுக்கான தீர்வுகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்