கனவுகளின் எரிபொருள்!

ம.கீர்த்தனா, மு.முருகன் , படம்: கோ.ப.இலக்கியா

ல்கி சுப்பிரமணியம் எழுத்தாளர், நடிகை... இப்போது ஓவியர். திருவனந்தபுரத்தில் நடந்த இவரது முதல் ஓவியக் கண்காட்சிக்கு செம வரவேற்பு. அது தந்த உற்சாகத்தில், இரண்டாவது ஓவியக் கண்காட்சியை கோவையில் நடத்தினார்.  கல்கியின் அத்தனை ஓவியங்களும் வலியையும் துயரத்தையும் சுமக்கின்றன. எல்லா முகங்களிலும் அடர்வண்ணங்கள்.

“நான் பெண்ணிலும் பெரிய பெண்.  என் பாலியல் அடையாளத்தால் நான் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அனைத்தையும் கடந்து உங்கள் முன்னால் நிற்கிறேன். என் அடையாளக் குழப்பங்களை வெளிப்படுத்தும் ஊடகமே ஓவியம்தான்” எனப் புன்னகைக்கிறார் திருநங்கையான கல்கி.

``நான் பிறவியிலேயே ஓர் ஓவியராகத்தான் இருந்திருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே ஓவியங்களில் தேடல் இருந்தது. பள்ளிக் காலத்தில் எனது பாலியல் அடையாளக் குழப்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் மொழியாக ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஓவியங்களின் அடிப்படை விதிகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு தாய் தன் கருவில் உதிக்கும் குழந்தையை எப்படித் திட்டமிட முடியாதோ, அப்படித்தான் என் ஓவியங்களும். எந்தத் திட்டமிடலும் இல்லாமல்தானே வெளிப்படுகின்றன?''

``எல்லா ஓவியங்களிலும் ஏன் இவ்வளவு அடர்வண்ணங்கள்?''

``உலகை, என் கண்கொண்டு பார்க்கின்றன என் ஓவியங்கள். ஏமாற்றம், அழுகை, சோகம், மறுத்தல், புறக்கணிப்பு, தவிப்பு, காதல்... என நான் கடந்துவந்த எல்லா உணர்வுகளையும் வண்ணங்களின் வழியாக, கொண்டாட்டமாக மாற்றுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடர்வண்ணம் என்பது கொண்டாட்டத்தின் குறியீடு.''

``ஓவியம் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு `fuel a dream’ என்ற திட்டத்தைத் தொடங்கி யிருக்கிறீர்கள்... இதன் மூலம் என்ன செய்ய திட்டம்?''

``கல்வியும் மருத்துவமும்தான்  திருநங்கைகளுக்கு இன்னும் எட்டாக்கனிகள்.  கண்காட்சி வைப்பதற்கு முன்பே இதில் கிடைக்கும் 60 சதவிகிதப் பணத்தை திருநங்கைகளின் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்த முடிவு செய்துவிட்டேன். 40 சதவிகிதப் பணத்தை ஓவியம் தொடர்பான தொடர்பணிகளுக்குப் பயன்படுத்துவேன்.  பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுப்பதில் இருந்து திருநங்கைகளை விடுவிக்க வேண்டும். அவர்கள் ஈடுபடவேண்டிய உண்மையான களங்கள் இந்த உலகத்தில் ஏராளம் இருக்கின்றன. அதற்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக நான்கு திருநங்கைகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறோம். சிலருக்கு மருத்துவ உதவிகள் செய்ய இருக்கிறோம்.  இந்தப் பணிகளை படிப்படியாக விரிவுபடுத்த வேண்டும்.'' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்