நிலம்... நீர்... நீதி! - விதைத்தது மழை... துளிர்த்தது நம்பிக்கை!

த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்

நிலம் என்னும் நல்லாள், மனித இனத்துக்கு அருளும் தாய்ப்பால்... நீர்! அந்தத் தாய்மையின் கருணையை மதிக்கத் தவறினோம். நீரின் பாதைகள் தகர்த்தோம். குளங்களை, மைதானங்களாக்கினோம்... ஆறுகளை, கழிவு நீரோடைகளாக்கினோம்... ஏரிகளை, புதுப்புது நகர்களாக்கினோம். பொறுமை விடுத்த நல்லாள், கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தன் பூத நீர்க்கரங்களால் ஒரு சுழற்று சுழற்றியபோது, திக்கற்று நின்றோம்.

அன்று விழுந்த விதை, இப்போது துளிர்க்க ஆரம்பித்து நம்பிக்கை ஊற்றைப் பொங்கச் செய்கிறது. ஆம், ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின் சார்பில் ஏரிகளைச் சீரமைக்கும் வேலைகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பேரழிவு மறக்க முடியாதது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி பகுதிகள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. ‘இத்தகைய கொடுமைக்குக் காரணமே, நீர்நிலைகள் சரிவரப் பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிக்கப்பட்டதும் தான்’ என்பதை அன்றைக்கு உலகமே பேசியது.

இத்தகைய சூழலில் பெருவெள்ளப் பாதிப்புக்கு உடனடி மருந்தாக நிவாரணப் பணிகளில் தானும் பங்கெடுத்த விகடன் குழுமம், நிரந்தர நிவாரணத்தை நோக்கி தன் சிந்தனையைத் திருப்பியது. வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டம் உருவானது. இதற்காக விகடன் குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட, வாசகர்களும் இந்த நல்ல திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் ஆர்வத்தோடு நிதியை அள்ளித் தர... மொத்த நிதி 2.25 கோடியைத் தாண்டியது.

நீரியல் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அடையாறு ஆற்றின் வெள்ளப் பெருக்குக்குக் காரணமாக அமைந்த வண்டலூர் தொடங்கி, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை இந்த ஆலோசனைக் குழுவினர் ஆய்வுசெய்தனர். பெரும்பாலான நீர்நிலைகள் துளியும் பராமரிப்பின்றிக்கிடக்க, ‘பெருமழை பெய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் பல ஏரிகளில் தண்ணீர் இல்லை. தமிழகம் முழுக்கவே பெரும்பாலான நீர்நிலைகள் இப்படித்தான் பராமரிப்பின்றிக்கிடக்கின்றன’ என்று வேதனையை வெளிப்படுத்தினர்.

சென்னை அருகே உள்ள இந்த நீர்நிலைகளில் சிலவற்றை, `நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின் மூலமாகச் சீரமைத்துக் காட்டலாம். இதை ஒரு முன்மாதிரித் திட்டமாகச் செயல்படுத்தலாம். இதேபோல தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை அரசாங்கமும் பிற அமைப்புகளும் முன்வந்து சீரமைக்கும்போது, அடுத்தடுத்த பருவமழைக் காலங்களில் வெள்ள ஆபத்தும் இருக்காது; பாசனநீர் மற்றும் குடிநீர் பிரச்னையும் பெரிய அளவில் தீரும் என முடிவெடுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்