இடம் மாறிய ரயில்... - கவிதை

ந.கன்னியக்குமார், ஓவியம்: ஸ்யாம்

ரு மாலைப் பொழுதில்
ரயில் பார்க்க ஆசைப்பட்ட மகளோடு
ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.
நேர்கோடென தரைகிழித்து
சயனித்துக்கிடக்கும் தண்டவாளத்தில்
மெள்ள ஊர்ந்து வந்து சேர்ந்தது ரயில்.
அலையும் காற்றில்
எல்லா திசையிலும் கிழித்துக்கொண்டே செல்லும்
டீ, காபி விற்பனைக் குரல்கள்
முண்டியடிக்கும் கூட்ட நெரிசலில் நசநசத்துப்போயின.
சிவப்பு சிக்னலை, பச்சைக் கொடியசைத்தலை,
முதலாம், இரண்டாம் வகுப்புப் பெட்டியை
படுக்கை வசதி, குளிர்சாதன வசதிப் பெட்டியை,
முன்பதிவு செய்தலை,
அபாயச்சங்கிலியை,
மயக்க பிஸ்கட் என
ரயில் பற்றி விவரிக்கக் கேட்டறிந்ததும்
அறிவிப்புக்குப் பிறகு நகரத் தொடங்கிய ரயிலை,
கையசைத்து வழியனுப்பிவிட்டு வீடு வந்தவள்,
`குக்கூ.... சிக்குபுக்கு...’என்று வாயில் குரலெழுப்பியவாறே
கைகளைக் காற்றில் அளைந்தபடி
முன்நகர்ந்து செல்லும் ரயிலின்
சக்கரம்போல சுழற்றி விளையாடியதில்
நிலையத்திலிருந்து தடம்புரண்டு
நெரிசலற்று யாசகக் குரலற்று
தரையின்றியும்
தண்டவாளமின்றியும்
வீட்டுக்குள் ஓடத்தொடங்கியிருந்தது
ரயில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்