"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

``பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல. என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் தயார். நான் சொல்லும் விஷயங்கள் சென்சேஷன் ஆகலாம்'' - டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸைத் தெளிவாகச் சொல்லிவிட்டுப் பேச அமர்கிறார் பிரேமலதா விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தல் தோல்வி, மாவட்டச் செயலாளர்களின் கட்சி மாற்றம், விஜயகாந்தின் உடல்நிலை, பணபேரம், ஜெயலலிதா ஆட்சி, எதிர்க்கட்சி தி.மு.க-வின் செயல்பாடுகள்... என எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார்.

``கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகளும் தே.மு.தி.க-வைத் தங்கள் கூட்டணிக்கு அழைத்தன. ஒரே நேரத்தில் பல கட்சிகள் அழைத்ததால்தான் உங்களால் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிவிட்டீர்களா?''

கையை அசைத்து மறுக்கிறார்... ``ஒரு தடுமாற்றமும் இல்லை; கால தாமதமும் ஆகலை. தேர்தல் நடந்தது மே மாதத்தில். ஆனால், மீடியா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே
தே.மு.தி.க-வைப் பற்றி எழுதி எழுதிப் பெருசாக்கிட் டாங்க. அப்பவும் கேப்டன் அமைதியாத்தான் இருந்தார். `தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அப்போ எங்க நிலைப்பாட்டைச் சொல்றோம்'னு சொன்னார். ஆனால், எங்க கூட்டணி பற்றி அதிகம் பேசி, பெரிதுபடுத்தியது தி.மு.க தலைவர் கலைஞரும்தான். தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகே, எங்க ஸ்டாண்ட் என்னன்னு சொல்வது என நாங்க ரொம்பத் தெளிவா இருந்தோம்.''

``கருணாநிதி உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே `தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வரும்’னு எதை வைத்துச் சொன்னார்?''

``கலைஞர்தான், `பழம் நழுவி பாலில் விழுகப்போகுது’, `இதோ கனியப்போகுது’னு சொல்லிட்டே இருந்தார். அதிகாரபூர்வமா `மக்கள் நலக் கூட்டணி'யையும் பா.ஜ.க-வையும்தான் நாங்கள் நேரில் சந்தித்தோம். தி.மு.க-கூட ஒரு மீட்டிங்கூட நடக்கலை. கலைஞர் சொல்ற எல்லா விஷயங்களுக்கும் பதில் சொல்லிட்டேவா இருக்க முடியும்?’’

``எந்த நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவது என முடிவெடுத்தீர்கள்?''

``இதுக்கு கொஞ்சம் விரிவா பதில் சொல்லணும். எதுக்காக தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டது? தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக வரணும்னுதானே! இதில் நாங்க ஆரம்பம் முதலே உறுதியாத்தான் இருந்தோம். 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல், எம்.பி தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்னு எல்லாவற்றிலும் இதே நிலைப்பாட்டில்தான் தேர்தலைச் சந்திச்சோம். எப்போ இது மாறுச்சு? 2011-ம் நடந்த சட்டமன்றத் தேர்தலில். ஏன் மாறுச்சுன்னா... எல்லாருமே ஒட்டுமொத்தமா அ.தி.மு.க கூட்டணிக்குப் போங்கனு சொன்னதால் போனோம். ஆனால், அப்பவே கேப்டனுக்கு அந்தக் கூட்டணியில் பெரிய விருப்பம் கிடையாது. அவங்க ஆட்சிக்கு வந்ததும் சொன்னதைப் பண்ணலை. உடனே சட்டமன்றத்துல கேப்டன் மக்களுக்காகக் குரல்கொடுத்தார்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க தனியா நின்னாங்க. வேற சாய்ஸ் இல்லையே. இதில் கேப்டன் முன்னாடி தெளிவா ரெண்டு பாதைகள் இருந்தன. ஒண்ணு பூ பாதை; இன்னொண்ணு முள் பாதை. கேப்டன் இறுதி முடிவு எடுக்கவேண்டிய சூழல். நாங்க ரொம்ப ஈஸியா போன தடவை அ.தி.மு.க-கூட இருந்தோம். இப்ப தி.மு.க-கூடப் போகலாம்னு ஒரு செகண்டுல முடிவு எடுத்துட்டுப் போயிருக்கலாம். ஆனா, இங்கே ஒரு மாற்றம் எப்போதான் வரும், இப்படியே இவங்க ரெண்டு பேர் கூடவும் மாறி மாறிப் போயிட்டே இருந்தா, தமிழ்நாடு என்ன ஆவது? இதுவே இப்படி யோசிச்சுப்பாருங்க... எங்க கூட்டணியில், 20-ல இருந்து 25 எம்.எல்.ஏ-க்கள் கிடைத்து, எங்க ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் வந்திருந்தால், `கேப்டன் போல ஒரு பிரில்லியன்ட் யாருமே இல்லை’னு சொல்லியிருப்பாங்க. அதனாலதான் மக்கள் நலக் கூட்டணிகூடச் சேர்ந்து ஒரு ரெவல்யூஷனரி முடிவை கேப்டன் எடுத்தார். எதை ஒன்றும் முயற்சி செய்தால்தான், அது நடக்குமா... நடக்காதானு தெரியவரும். இங்கே ஒரு ரெவல்யூஷனரி சேஞ்ச் நடக்கணும். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதானே தே.மு.தி.க. அதனாலதான் மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டு சேர்ந்தோம். மாற்று அணிகூடச் சேர்ந்தோமே தவிர, வேற எந்த நோக்கமும் கிடையாது.’’

``கடந்த தேர்தலில் நீங்கள் கூட்டுவைத்த மக்கள் நலக் கூட்டணியை `அ.தி.மு.க-வின் `பி' டீம்’ என்றும்... `தி.மு.க-வுடன் கடைசி வரை பேரம் பேசிட்டிருந்தாங்க’ என தே.மு.தி.க மீதும் குற்றச்சாட்டுகள் பெருமளவில் வைத்தார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?''

``இவங்க நினைக்கிறது நடக்கலைன்னா... அடுத்தவங்க மேல சேற்றை வாரி இறைக்கிறதுதான் இங்கே காலங்காலமா நடந்திட்டிருக்கு. முதல்ல `வைகோ 500 கோடி ரூபாய் வாங்கிட்டார்’னு பரப்பிவிட்டாங்க. `70 எம்.எல்.ஏ-க்கள், 300 கோடி ரூபாய்’னு எங்களைப் பற்றி வதந்தி பரப்பினாங்க. காசுதான் முக்கியம்னு கேப்டன் நினைச்சிருந்தா... 300 கோடி ரூபாய், 70 எம்.எல்.ஏ-னு போயிருக்கலாமே. 300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்? (அமைதியாகிறார்) என்னைக்கு நாங்க கட்சி ஆரம்பிச்சோமோ, அப்போது இருந்தே இதை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இப்படிச் சொன்னால் சோர்வு அடைஞ்சு ஒதுங்கிடுவோம்னு நினைக்கிறாங்க. ஆனா, கேப்டன் எப்போதுமே, மனசுல ஒண்ணு வெளியில இன்னொண்ணு பேச மாட்டார்.''

``ஆனால் தே.மு.தி.க + மக்கள் நலக் கூட்டணி மீது மக்களுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதைத்தானே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன?’’

``அப்படி அல்ல... மக்கள் இன்னும் மாறலை என்பதைத்தான் இந்த முடிவுகள் காட்டுது. யாருக்காக நாங்க இவ்வளவு தூரம் உழைக்கிறோம், கஷ்டப்படுறோம்? தமிழக மக்களுக்காகத்தானே. கேப்டன் சொன்ன மாதிரியே அரசியலுக்கு வந்தார். இதுவரைக்கும் அதே உறுதியோடு பயணிக்கிறார். அப்போ கேப்டனுக்கு மக்கள்தானே உறுதுணையா இருக்கணும்? ஆனால், மக்கள் இன்னமும் மாறலைங்கிறது பெரிய வேதனையா இருக்கு. நாங்க போகாத கிராமம் கிடையாது; ஊர் கிடையாது. அத்தனை மக்களையும் சந்திச்சிருக்கோம். கடைசியில் படித்தவர்களில் இருந்து பாமர மக்கள் வரை பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியதே அந்த ரெண்டு கட்சிகளும்தான். இங்கே மாற்றம் வராததுக்கு முக்கியக் காரணமே இதுதான்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்