சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார்

ருணாநிதியின் உடன்பிறப்புகளை, ‘வயக்காட்டுப் பொம்மைகள்' என்கிறார்கள் அவர்கள். ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்களை, ‘கொத்தடிமைகள்' என்கிறார்கள் இவர்கள்.

`கற்பில் சிறந்தவர் அவரா... இவரா?' என பட்டிமன்றம் வைத்து எதிர் அணி புனிதத்தை அசிங்கப்படுத்துவதுபோலத்தான், நித்தமும் நடக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம். பட்டிமன்றம் நடப்பது தெருவில், அங்கே என்ன கூத்து வேண்டுமானாலும் அடிக்கலாம்; தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தும் போகலாம். ஆனால், `பொம்மை - அடிமை' சண்டை நடக்கும் இடம் மாண்புமிகு அவை. மக்களைக் காப்பாற்றுவதைவிட மாண்பு காப்பாற்றுவதே இந்த அவைக்கு முதல் வேலை. ஆனால், ஆளுக்கு ஆள் ஒவ்வொரு நாளையும் அசிங்கப்படுத்து கிறார்கள்.

ஜெயலலிதாவைப் போற்றுவது, கருணாநிதியைத் தூற்றுவது - இந்த இரண்டு நோக்கங்களுக்காகத்தான் தமிழ்நாடு சட்டமன்றமே கூடுகிறது. அ.தி.மு.க சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் சேவகர்களா அல்லது அரசவைக் கவிஞர்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அனைவரும் எண்சீர் விருத்தப் பாவலர்களாகவே பறந்துவந்துள்ளார்கள்.

இந்திய மண்ணில்
செந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் தாயின்
அரசாங்கம் - அதைத்
தேடித் தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம்!
எத்தர்களை வென்ற இடம்...


இப்படி கும்மிடிப்பூண்டி கே.எஸ்.விஜயகுமார் பாடும்போது, ‘இது ஏதோ ஒரு பாடல் ஆயிற்றே!' என நெற்றி சுருக்கினால், ‘திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. முருகனிடம் பழம்தான் பறிபோனது என்றால், இப்போது பாட்டும் பறிபோய்விட்டது. திண்டுக்கல் சீனிவாசனும் காமராஜும் பாடும்போது தங்களது சிந்தனையில் உதித்ததுபோலவே உச்சரிக்கிறார்கள். இதுதான் தி.மு.க-வினருக்கு எரிச்சல் தருகிறது.

கே.என்.நேரு, கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார். உடனே அ.தி.மு.க-வினர் ஆக்ரோஷமாகக் கூச்சல்போடுகிறார்கள். `நான் பேசுறதைக் கேட்க உங்களுக்கு வயிறு எரியுதுல்ல... அப்படித்தான் எங்களுக்கும் எரியும்’ என்கிறார் மீசையை முறுக்கி.

தங்கள் தலைவியைப் புகழ்கிறார்கள். புகழட்டும், அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், எதிரே இருப்பவர்களை வேண்டும் என்றே சீண்டும்போதுதான் சட்டமன்றம் சந்தைக்கடை ஆகிறது.

உங்களுக்கு பரமக்குடியில் முத்தையாவைத் தெரியுமா? பரமக்குடியிலேயே பலரும் மறந்திருப்பார்கள். அவர்தான் அந்தத் தொகுதியின் ஆளும் கட்சி உறுப்பினர். அவர்தான் தி.மு.க உறுப்பினர்களைப் பார்த்து, ‘வயக்காட்டுப் பொம்மைகள்' என வர்ணித்தவர். ‘89 வயக்காட்டுப் பொம்மைகளுக்கு, குருவிகள் பயப்படலாம்; சீறும் சிங்கம் பயப்படாது’ எனச் சொன்ன பிறகு, பரமக்குடி முத்தையா பிரபலம் ஆகிவிட்டார். ‘அண்ணன் மந்திரியாகப்போகிறார்' என அவரது அடிப்பொடிகள் பரமக்குடியில் இருந்து பற்றவைக்கிறார்கள். இந்த வார்த்தையை நீக்கச் சொன்னது தி.மு.க. ஆனால் சபாநாயகர் தனபால் இதற்குச் சம்மதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு சொல்லைச் சொன்னார். அது அவைக் குறிப்பில் ஏறவே இல்லை.

வெளிநடப்பு செய்த ஸ்டாலின், ‘131 கொத்தடிமைகள்’, `131 சோற்றால் அடித்த பிண்டங்கள்’... என நான் சொன்னேன்’ என்றார். ஒரு பக்கம் பொம்மைகள்... இன்னொரு பக்கம் அடிமைகள்; பிண்டங்கள். தமிழ் மகா ஜனங்களே... நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறீர்கள் பாருங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்