கலைடாஸ்கோப் - 53

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

மடி

மிதந்து இறங்கிய விண்கலத்தில் இருந்து வெளியே வந்த கேப்டன் ட்யூக், அரசனுக்கு வணக்கம் வைத்தான்.

“இந்த சோலார் சிஸ்டத்தில் நமக்கு போட்டி, பூமி மட்டும்தான். அதை அழிக்க நீங்கள் போட்ட திட்டங்கள் என்ன ஆனது?” என்றார் அரசர்.

“பல்லுயிர்கள் பல்கிப்பெருகிய அந்தக் கிரகத்தில் உள்ள உயிரிகளின் சிந்தனையைத் திருடி, குழப்பம் விளைவித்து பூமியை அழிப்பதுதான் நாம் போட்ட திட்டம். பல்லாண்டுகளாக முயன்றும் எந்த உயிரிகளிடமும் அது எடுபடவில்லை. ஒரே ஓர் உயிரியைத் தவிர” என்றான் ட்யூக்.

“ம்ம்..!” என்று ஆர்வமானார் அரசர்.

``அந்த உயிரிகளுக்கு பூமியில் `மனிதர்கள்' என்று பெயர். அவர்கள் சிந்தனையைத் திருடி, யாம் குழப்பங்களை விளைவித்தோம். மதம், இனம் எனக் குழுக்களாக அவர்களைத் தங்களுக்குள் சண்டைபோட்டுக்கொள்ள வைத்தோம். அறிவைப் பெருக்கி, ஆயுதங்களை உருவாக்கவைத்து அவர்களுக்கு இடையில் யுத்தங்களை உண்டாக்கினோம். அவர்களுக்குள்ளாகவே உணவுகளையும் உடைமைகளையும் பகிர்ந்துகொள்வதில் சுரண்டலையும் சண்டைகளையும் உருவாக்கினோம். ஆனால், அது போதுமானதாக இல்லை” என்றான் ட்யூக்.

“பிறகு...” என்றார் அரசர்.

``வேறு வழி இல்லை. கடைசியாக மனிதர்களை மட்டும் அல்ல, பூமியையே அழிக்கும் ஒரு வழியை மனிதர்கள் சிலரின் சிந்தனைக் கண்ணியில் உருவாக்கினோம். பிரபஞ்சத்தின் அடி மடியிலேயே கையை வைத்துச் சுட்டுக்கொள்ளப்போகிறார்கள். அதை அவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள்.”

“முட்டாள்கள். அதற்கு அவர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்றார் அரசர்.

சிரித்தபடி சொன்னான் ட்யூக், “அட்டாமிக் எனர்ஜி”.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்