மீண்டு வாருங்கள் கமல்!

கவிப்பேரரசு வைரமுத்து

`கால் முறிந்துவிட்டார் கமல்’ என்றதும் துடித்துப்போனேன். முதலில் சிறுவிபத்து என்றே எண்ணினேன். காயம் பெரியது என்றதும் கலங்கியேபோனேன். நானறிந்த மருத்துவ அறிக்கை, அதை ‘compound fracture’ என்றது. அது வலிமையானது; வலி மிகுந்தது.

ஓர் உயிரின் இன்பத்தை நம் சொந்த உடல் வழியேதான் துய்க்க வேண்டும். ஆனால், இன்னோர் உயிரின் துன்பத்தை அதை அனுபவிக்கும் உடலுக்குள் புகுந்துதான் உணர வேண்டும். கால் முறிந்த வேளையில் கமல் எவ்வளவு துடித்திருப்பார் என்பதை, அவர் நிலையில் என்னுடலை நிறுத்தி ஓரளவு உணர்ந்துகொள்ள முடிந்தது.

தவறி விழுந்துவிட்டோம்; கால் முறிந்திருக்கிறது என்ற செய்தி, மூளைக்குச் சென்று சேரும் வரைக்குமான அந்த நொடித்துளி மட்டும்தான், அவர் வலியை உணர்ந்திருக்க மாட்டார். மூளைக்குச் செய்தி சேர்ந்த மறுநொடி முதல் அவர் உடலும் உயிரும் எப்படித் துடித்திருக்கும் என்பதை, கற்பனைசெய்வதும் கடினம்தான்.

இன்பம் என்பது இந்த உடலுக்குள் தவணை முறையில் தரப்படுகிறது; மொத்தமாகத் தரப்படுவது வலிதான். வேதத்தில் ஒரு வரி உண்டு... `மனிதன் அஞ்சுவது மரணத்துக்கு அல்ல; மரண அவஸ்தைகளுக்குத்தான்.’ என்னைப் பொறுத்தவரையில் பாசம் ஒரு பலவீனம்தான். பழகிய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஏதேனும் ஒன்று என்றால், இதயம் பொறுப்பது இல்லை. ‘என் கண்ணால் பார்த்த யாரும் எனக்கு முன்னால் போக வேண்டாம்’ என்ற வரியை எழுதியது, அந்தப் பலவீனம்தான்.

அவருக்கும் எனக்கும் 36 ஆண்டுகால நட்பு. `களத்தூர் கண்ணம்மா’ பார்த்தபோது, ‘யார் அந்தச் சிறுவன் என்னிலும் திறமையானவன்?’ என்று கால்சட்டை இடுப்பில் நிற்காத காலத்திலேயே பொறாமைப்பட்டிருக்கிறேன். `சலங்கை ஒலி’யில் அவர் நடனம் கண்டு அவரைக் கட்டித்தழுவிப் பாராட்டியிருக்கிறேன். நடனமாடிய கால்கள் இன்று நடமாட முடியாமலா? உடனே பார்க்க வேண்டும் என்று மருத்துவ நண்பர்கள் மூலம் செய்தி அனுப்பினேன். கொஞ்ச நேரத்தில் எனக்குக் குறுஞ்செய்தி வந்தது.

தாங்கள் நலம் விசாரித்த செய்தி கிடைக்கப்பெற்றேன். கூடியவிரைவில் சந்திக்கலாம். நேற்றுதான் சர்ஜரி முடிந்தது. வலியின் அளவளாவ சில தினங்கள் ஆகும்.

அன்புடன் கமல்ஹாசன்

சின்னதாய் ஆறுதல் அடைந்தேன்.

`காயம் பெரியதுதான்; ஆனால் கலங்க வேண்டாம்’ என்றார்கள் மருத்துவ நண்பர்கள். சில நாட்களுக்குப் பிறகு தொலைபேசியில் கமல் அழைத்தார். அவர் குரல் கேட்டதும் என் குரல் வற்றிவிட்டது. தன் தொண்டைச் செய்யவில்லை என் தொண்டை; கவலையின் வலைகள் குரல்வளையைப் பின்னிக்கொண்டன.  சிகிச்சை குறித்தும் தன் நிலை குறித்தும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். அவர் குரலில் வறண்ட வானிலையே காணப்பட்டது.

எலும்பு முறிந்தபோதும் அவர் நகைச்சுவை மட்டும் உடைந்துபோகவில்லை. ‘ஏசுநாதர் போல கால் மட்டும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்’ என்றார் குறும்பு குறையாமல். ‘நல்லவேளை... நான் `ஆலயமணி' சிவாஜியாகாமல் தப்பித்தேன்’ என்று சிரித்துக்கொண்டார். தலையும் முதுகெலும்பும் நொறுங்காத வரையில் எந்த உறுப்பையும் சீர்செய்ய மருத்துவ உலகம் மேம்பட்டிருக்கிறது நம்பிக்கையோடிருங்கள்; நலமடைவீர்கள்’ என்று வாழ்த்தினேன். விரைவில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தேன். இதன் பிறகுதான் நாளொரு குறுஞ்செய்தியாக எங்கள் நாட்கள் நகர்ந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்