“ஃபங்க் ஆகிட்டேன் பஞ்சு சார்!”

ம.கா.செந்தில்குமார்

 

சில ஆண்டுகளுக்கு முன்னர், என் அப்பா இறந்தநேரம்... வயதானவர்கள் யாரைப் பார்த்தாலும் அப்பாவைப் பார்ப்பது போன்ற உணர்வு. அதிலும் அலட்சியமான வேட்டி கட்டலும், கலைந்த தலையும் தாடியுமாக இயல்பான தோற்றத்தில் பஞ்சு சாரைப் பார்க்கும்போது இன்னும் நெருக்கமாக உணரவைத்தார். ‘கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர். பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர். யாருடைய ஸ்கிரிப்ட் பாதியில் நின்றாலும் அதைத் திருத்தி செப்பனிட்டுத் தந்தவர்...’ - இப்படி `திரைத்தொண்டர்' தொடர் எழுதுவதற்கு முன்னர் வரை எல்லோரையும்போல பஞ்சு சாரைப் பற்றி பொதுவான விஷயங்கள்தான் தெரிந்துவைத்திருந்தேன்.

அந்தச் சமயத்தில் ‘பிரபல கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகாலம் ஆகிறது’ என்ற துணுக்குச் செய்தியை இணையதளம் ஒன்றில் படித்தேன். ஏற்கெனவே அவர் மீது அபிமானம் கொண்டிருந்த நான், ‘அவரிடம் அந்தக் கால சினிமா அனுபவங்களைப் பேசிக் கட்டுரையாக்கலாமே’ எனத் தோன்றியது. பஞ்சு சாரின் மகன் சுப்புவிடம் பேசியபோது, ‘சார், நாங்க அப்பாவைப் பற்றி ஒரு டாக்குமென்ட்ரி பண்றோம். தனஞ்செயன் சார்தான் அதைப் பண்றார். அது ரெடியாகி நீங்க பார்த்துட்டீங் கன்னா, உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்றார்.

பிறகு, தனஞ்செயன் அலுவலகத்தில் அந்த டாக்குமென்ட்ரியைப் பார்த்தேன். ரஜினி, இளையராஜா தொடங்கி பஞ்சு சாருடன் நெருக்கமாக இருந்த பலரும் அதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தனர். ‘எவ்வளவு அனுபவம். ஒவ்வொண்ணும் சுவாரஸ்யமா இருக்கே. இதை ஒரு வாரப் பேட்டியில் அடக்க முடியாதே’ என நினைத்தேன்.

நானும் தனஞ்செயனும் பஞ்சு சாரைப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்றோம். ‘வாங்க சார்’ என்றபடி வரவேற்றார் பஞ்சு சார். கசங்கிய கைவைத்த பனியன், ஏற்றிக்கட்டிய நாலு முழம் வேட்டி. `எவ்வளவோ சாதனைகளைப் பண்ணின மனிதர் இவ்வளவு சாதாரணமா இருக்கிறாரே!' என எனக்குள் ஆச்சர்யம். பேசிக்கொண்டு இருக்கும்போது, ‘ஒரு வாரத்துல எப்படி சார் இவ்வளவையும் அடக்க முடியும்?’ என்றார். தன் அனுபவங்களைச் சொல்ல அவரும் ஆர்வமாக இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. பிறகு அவரே, ‘மூணு நாலு வாரத்துக்குள்ள தெளிவா சொல்லலாம் சார்’ என்றார். ‘மூணு வாரம் என்ன... எங்க எடிட்டர்ட்ட பேசி 30 வாரத்துக்கு ஓ.கே பண்ணிட்டு வர்றேன் பாருங்க’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அதேபோல தொடரும் தொடங்கியது.

‘திரைத்தொண்டர்’ என தொடருக்கான அவ்வளவு பொருத்தமான தலைப்பைத் தந்தவர் கண்ணன் சார். கமல்ஹாசனுடன் பஞ்சு சார் இருக்கும் ஒரு போட்டோவை மட்டும் அறிவிப்பில் வைத்தோம். `தலைப்பு, அறிவிப்பு பற்றி பஞ்சு சாரிடம் சொல்லவே இல்லை. அவர் கமலுடன் மட்டும் இருக்கும் படத்தை வைத்தால், ரஜினி, இளையராஜா எல்லாம் வருத்தப்படுவாங்களே. இது பஞ்சு சாருக்கு தர்மசங்கடமா இருக்குமே’ என நினைத்தேன். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

சாருக்கு, செல்போன் கிடையாது; வீட்டு லேண்ட்லைன் மட்டுமே. ஒருநாள் அழைத்தேன். பஞ்சு சாரின் மனைவிதான் எடுத்தார். ‘ரஜினி வந்திருக்காங்க. சார்கிட்ட பேசிட்டு இருக்காங்க’ என்றார். ‘ஓ.கே’ எனச் சொல்லிவைத்துவிட்டேன். ‘ஆஹா... ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ எடுத்தோம்னா தொடருக்குப் பயன்படுமே’ என யோசித்துவிட்டு, திரும்பவும் அழைத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்