இவள் ஆயுதம் அல்ல... ஆன்மா!

அதிஷா, ஓவியம்: ரவி

னி வேறு பாதை... வேறு சாலை. ஆனால், இலக்கு அதுவேதான். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இரோம் ஷர்மிளா என்கிற இரும்பு மனுஷியின் 16 ஆண்டுகால உண்ணாவிரதம் முடிவுக்கு வந்திருக்கிறது. கின்னஸ் சாதனைக்காகச் செய்யப்பட்ட சாகசம் அல்ல இது. அறத்தின் திசையில் நின்று நீதியை வென்றெடுக்க முனைந்த ஒரு பெண்ணின் தீரச்செயல்.

கானல்நீரை விரட்டுகிற சிறுமியைப்போல, கடல் பச்சை வண்ணம் பூசப்பட்ட சிறிய அறையில்தான் உண்ணாவிரதம் இருந்தார் இரோம் ஷர்மிளா. அவருக்கு இந்திய அரசால் திரவ உணவுகள் குழாய்களின் வழி மூக்கின் மூலம் வலுக்கட்டாயமாகப் புகட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு, ஆண்டுதோறும் ஒருநாள் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்படுவார். இந்திய அரசு அவருடைய போராட்டத்தை ஒடுக்கவே முனைந்தது, அவருடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை.

இத்தனை ஆண்டுகளில் அவரை நிறைத்தது எல்லாமே ஆழ்ந்த தனிமை மட்டுமே. அவர் போராடியதும் இந்திய அரசுக்கு எதிராக மட்டும் அல்ல... அந்தத் தனிமைக்கு எதிராகவும்தான். செல்போனோ, தொலைக்காட்சியோ, இணையமோ, இதமாகப் பேசக்கூடிய இனிய மனிதர்களோ கூட இல்லாத ஒரு வாழ்வுக் காலம். அவருடைய அறையில் எப்போதும் கடிகாரம் இருந்ததே இல்லை.

இம்பாலின் போரோம்பட் காலனியில் 19 பேர் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. ஒன்பது பிள்ளைகளில் கடைக்குட்டி; அப்பாவின் செல்லக்குட்டி. பள்ளிகளில் அப்படி ஒன்றும் பிரமாதமாகப் படிக்கிற முதல் பெஞ்ச் பிள்ளை அல்ல. படிப்பில் பிடிப்பு இல்லை என்றாலும், பள்ளி செல்வது மிகவும் பிடிக்கும். காரணம், அவருடைய தந்தை. அப்பா இரோம் நந்தா கால்நடை மருத்துவமனையில் கம்பவுண்டர். இரோம் ஷர்மிளா விலங்குகளை நேசிக்கக் கற்றுக்கொண்டது அப்பாவிடம் இருந்துதான். பள்ளிக்குச் செல்ல வீட்டில் இருந்து நீண்டதூரம் செல்லவேண்டும். வழி எல்லாம் கதைகளைச் சொல்வார். அவற்றில் மணிப்பூர் போராட்டங்களில் மறைந்துபோன நாயகர்கள் இடம்பெறுவார்கள். அந்தக் கதைகள் இரோம் ஷர்மிளாவை ஆழமாகப் பாதித்தவை.

`ஒருநாள் தோழியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பாலத்துக்கு அருகே ரிக்‌ஷா ஓட்டும் மூவர் பேசிக்கொண்டிருந் தார்கள். அதில் ஒருவனுக்கு, பதினைந்து வயது இருக்கும். அவன் குளிருக்காக தன் முகத்தை ஒரு பழைய துணியால் மூடியிருந்தான். அந்தப் பக்கமாக ஒரு ராணுவ வண்டி வந்தது. அவர்களுக்கு அருகில் நின்றது. திடீரென முகத்தை மூடியிருந்த சிறுவனை ராணுவ வண்டியில் ஏற்றினார்கள்; பிறகு அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். அவனுடைய கதறல் அந்தப் பகுதி முழுக்க எதிரொலித்தது. சில நிமிடங்களில் அவனை அடித்துத் தூக்கி எறிந்துவிட்டு ராணுவத்தினர் கிளம்பிச் சென்றுவிட்டனர். அது என்னை பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது. `ஏன் இப்படி?’ என்ற கேள்வியும் உருவானது' என தன் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியை எப்போதும் நினைவுகூர்கிறார் இரோம் ஷர்மிளா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்