குக்கூவென்றது கோழி - சிறுகதை

சிறுகதை: க.சீ.சிவகுமார் , ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

வினோதினி... அவள் அருகில் இருப்பது ஐந்து தேவதைகளும் மூன்று பிசாசுகளும் உடன் இருப்பது போன்றது. அவற்றின் எண்ணிக்கை அல்ல விஷயம். அவை வெவ்வேறு விகிதங்களில் வெளிப்படும்போது அதனதன் தன்மையில் இருக்கும் காரியங்களில் இருக்கிறது விசேஷம்.

பெங்களூரில் முற்றமாகவும் வாசலாகவும் விரிந்திருக்கிற மொசைக் கட்டங்களின் மேல், தூரப் பார்வையில் கண்ணாடிச் செவ்வகங்கள் பார்வைக்குக் கிட்டுகிற பெருங்கட்டடம் ஒன்றில், என்னுடன் பணிபுரிகிறாள் வினோதினி; கணினியாளர். ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீகாகுளம்  ஊரைச்சேர்ந்தவள்.

வினோதினி வெங்கடபதிராஜு. இந்த வி.பி.ஆர் அவளது அப்பாவேதான். அப்பாவின் பெயரோடு சேர்த்துத்தான் ஜி.மெயில் ஐ.டி-யும் வைத்திருக்கிறாள். வினோதினியும் சக சகாக்களும் சகிகளும் அப்பாவின் பெயரோடு மெயில் ஐ.டி வைத்திருந்த கார்ப்பரேட் கலாசாரத்தில் கட்டுண்டுதான், நானும் ரஞ்சித்பொன்னுசாமி என மெயில் ஐ.டி வைத்துக்கொண்டேன்.

வானளாவிய வலைத்தள வியனுலகு (www)பின்னலும் இந்தப் பெயரில் கேட்கிற ஒரே ஆள் நீதான்டா என, மெயில் ஐ.டி-யைக் கேட்டதுமே அங்கீகரித்துவிட்டது. பெரும்பாலும் சந்தோஷமாகத்தான் இருந்தது. சனிக்கிழமை இரவுகளிலும் சாதாரண நேரங்களிலும் ரஞ்சித் என்று அழைக்கிற டீம் லீடர் பிரேம் ஆனந்த், வேலையின் கழுத்துக்கட்டு நெருக்கடி நேரங்களில்,  மெயில் ஐ.டி-யில் இருக்கிற பெயரைச் சொல்லி அழைப்பான். அப்படி அழைக்கும்போது,  அந்த விருத்தாசலத்துக்காரன் கோபமாக இருக்கிறான் என அர்த்தம் கொள்ளவேண்டும்.

‘ரஞ்சித்பொன்னுசாமி’ என்று அழைத்தால் சகிக்கலாம்; பரவாயில்லை. அவனோ `ரஞ்சித் பொன்னிசாமி’ என்று அழைத்து என் அப்பாவை ஓர் அரிசியாக்குவான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவனது நாவில் வசம்பு தேய்க்க முடியாது. வேண்டுமென்றே அப்படிக் கூப்பிடுகிறானோ என எனக்குத் தோன்றும்.

தவறுகள், தாத்தாக்களில் இருந்து ஆரம்பிக் கின்றன. வேலுச்சாமியின் மகனானப்பட்ட என் தாத்தா ரங்கசாமி, தன் மகனுக்கு வேறு பெயர் வைத்திருக்கலாம். அதுபோகட்டும்... எனது பெயர் சாமிகளிடம் இருந்து விடுபடவே பல தலைக்கட்டுகள் தாண்டவேண்டி இருந்திருக்கிறது.

 ஒரு சனிக்கிழமையில் இன்டர்நெட்டில் பதிவிறக்கி ‘ஆடுகளம்’ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த வாரம் வருகிற சங்கராந்தி பொங்கல் விடுமுறையில் ஊருக்குப் போகிறபோது, கோயிலூர் சேவற்சண்டை பார்க்கப் போக வேண்டும் என்ற எண்ணம், என்னில் முஸ்தீபு பெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில், எங்கள் அறைக்கு வினோதினி வந்தாள். ஜீன்ஸும்
டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ‘நண்பர்களைவிட விசிறிகள் அதிகம்’ என்பது மாதிரியான வாசகங்கள் கச்சித பனியனில்  எழுதப்படாமல் இருந்தது ஆறுதல் அளித்தது.

பெங்களூரில், மடிவாலா மாருதி நகர் விரிவாக் கத்துக்கு உட்பட்டுத்தான் அவளது விடுதியும் எங்கள் அறையும் இருந்தது. அறையில் நான், குணா, ரகு மூவரும் இருந்தோம்.

‘‘த்ரீ இடியட்ஸ் மட்டும்தான் ரூமிலா?’’ என்று கேட்டாள் என் காதுக்கு அருகில். அவள் அவ்வப்போது பார்க்க வருவதில் நண்பர்கள் ஏற்கெனவே 99 பாகை செல்சியஸ் சூட்டில் இருந் தார்கள். ஒரு கடுகு கூடுதலாகப் போய்விட்டாலும் கொதித்துவிடலாம்.

கண்ணாலும் உதட்டாலும் கெஞ்சி அவளது குறும்பை மட்டுப்படுத்தினேன்.

 ‘‘என்ன படம் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’’

‘‘ஆடுகளம்.’’

‘‘தட் மீன்ஸ்?”

‘‘ப்ளே கிரௌண்ட்.’’

படத்தில் சேவல்கள் சண்டையிடுவதைப் பார்த்துவிட்டு ‘‘வெரி நைஸ்!’’ என வியந்தாள்.

நான் வாய் பொறுக்க மாட்டாமல் அடுத்த வாரம் ஊருக்குப் போவதையும், இந்த ஆண்டு பக்கத்து ஊருக்குப் போய் சேவற்சண்டை பார்க்க எண்ணியிருப்பதையும் சொன்னேன்.

‘‘நான் ஏன் உன் ஊருக்கு வரக் கூடாது?’’

‘‘வாயேன்... கண்டிப்பாக’’ என்றேன். எதிர்ப் பாலின நண்பர்கள் வீட்டுக்குச் சொல்லி, பெற்றோரிடம் அனுமதி வாங்கும் உலகம் மலர்ந்து விட்டதை நான் எதிர்பார்க்கவில்லை யாதலால், ‘‘வீட்டில்… குறிப்பாக மிஸ்டர் வெங்கடபதி ராஜுவிடம் என்ன பொய் சொல்வாய்?’’ எனக் கேட்டதும் என்னை முறைத்தாள். அடுத்து தனது அலைபேசியில் எண்களை அழுத்தினாள்.

எதிர்முனையில் பதில் வந்ததும் ‘டாடீ!’ என விளித்து ஒரு கிராமத்துக்குப் போகலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னாள். ‘யாருடன்?’ என வினவப்பட்டிருக்கவேண்டும். ‘எவரதீ?’ என `சந்திரமுகி’ ஜோதிகா போன்ற கோபத்தை எதிர்முனையில் எதிர்பார்த்தேன். எனது வளர்ப்பும் வார்ப்பும் அப்படித்தான் கற்பனை செய்யும். ‘ரஞ்சித்’ எனச் சொல்லி சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘‘அப்பா உன்னிடம் பேச விரும்புகிறார்’’ என அலைபேசியை என்வசம் கொடுத்தாள்.

வி.பி.ஆர் ஆங்கிலத்தில் பேசினார். எஜுகேட்டட் ஃபேமிலி என நினைத்துக் கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்துகளை எதிர்கொண்டு மட்டையாடுவது மாதிரி தட்டுத்தடுமாறிப் பேசி முடித்தேன். அதுவரை தோன்றாத சந்தேகம் உற்பத்தியாகி, ‘‘உங்க அப்பா பழைய கிரிக்கெட் பிளேயரா?’’ என வினோதினியைக் கேட்டேன்.

‘‘என் தந்தை நட்பார்ந்தவர். நல்ல விவசாயி. யூ நோ... தென்னைமரத்தில் ஏறி அவரே தேங்காய் பறித்துவிடுவார். எனக்கு ஸ்விம்மிங் கோச் அவர்தான்’’ என்றாள் ஆங்கிலத்தில்.

நான்  கணினியைத் தட்டி ஆகாய நிரலில் –ஆன்லைனில் – எனக்கும் அவளுக்குமாக இரண்டு இருக்கைகளை பேருந்தில் உறுதிப்படுத்தினேன்.

வினோதினியுடன் ஊருக்குப் போய் இறங்கியபோது, அவளுக்குத் தோன்றாத வெட்கம் எனக்குத் தோன்றியது. அவளை அதிக நேரம் ஊர்கோலம் விடாதபடிக்கு பேருந்து நிறுத்தத் துக்கு அருகிலேயே எங்கள் வீடு இருந்தது. ஆவாரம் பூ, வேப்பிலை, பீளைப்பூக்கள் கொண்டு செண்டுசெய்து, வீட்டு மூலைகளில் செருகப்பட்ட ‘காப்பு’கள் பற்றி அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. இப்படி ஒரு செக்யூரிட்டி சிஸ்டம் ஐதீகமாக இருப்பது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“எங்க ஊர்ல இப்படிக் கிடையாது” என்றவள், என் அப்பாவைக் காட்டி அறிமுகப்படுத்தியதும் அவருக்குக் கை குலுக்கினாள். என் அம்மாவை முத்தமிட்டாள். அப்பா வெடவெடப்புற்றார்; அம்மா வெட்கப்பட்டாள்.

அப்போது கள்ளிமேடு சித்தப்பா கையில் சேவலுடன் என்னைப் பார்க்க வந்துவிட்டார். கோயிலூருக்கு சேவற்கட்டுக்குப் போவதற்குத் தயாராகிவிட்ட தோற்றம்.

‘‘நூலான்… எப்படியும் இன்னிக்கு எறிஞ்சிரும்’’ என சேவலின் வெற்றி பற்றி சங்ககால வார்த்தையைப் பயன்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்