தகர்க்கவேண்டிய தடைக்கற்கள்!

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வந்திருக்கும் பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக் இருவரின் வெற்றியும் அசாதாரணமானவை. ஜிம்னாஸ்டிக்கில் அசத்திய திபா கர்மகரும் பாராட்டப்படவேண்டியவர். இவர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் அதேநேரத்தில், ஒரு நாடாக இந்தியா ஒலிம்பிக்கில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை!

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு, 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் நாம் வென்ற அதிகபட்சப் பதக்கங்கள் இவைதான். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குக்கு 117 வீரர்களை அனுப்பிவைத்தது இந்தியா. இந்த முறை இரட்டை இலக்கங்களில் பதக்கங்கள் நிச்சயம் என்ற உற்சாகத்தில் இருந்தனர் ரசிகர்கள். 63 ஆண்கள், 54 பெண்கள் என இந்திய வீரர்கள் மொத்தம் 67 பிரிவுகளில் கலந்துகொண்டனர். ஆனால், பதக்கம் வென்றிருப்பது இரண்டே பெண்கள்.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் தோல்விக்கு, வீரர் - வீராங்கனைகளா காரணம்? அரசியலும் ஊழலும் கைகோத்து ஆடும் அபாய ஆட்டம்தான் காரணம். திறமையைவிட பல நேரங்களில் பணமும் அதிகாரபலமும் சாதிப்பாசமும் மாநிலப்பற்றும்தானே தகுதியும் திறமையும்கொண்ட வீரர்-வீராங்கனைகளுக்குத் தடைக்கற்களாக அமைந்துவிடுகின்றன.

பதக்கம் வென்று வந்த பிறகு ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டிக்கொண்டு பரிசுப்பொருட்களை அள்ளிக்கொடுப்பது வரவேற்கப்படவேண்டியதுதான். எனினும், திறமையும் ஆர்வமும்கொண்ட வீரர்-வீராங்கனைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வளர்த்தெடுப்பதுதானே அரசாங்கங்களுக்கு அழகு.

இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கஜகஸ்தான் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்கள், தாய்லாந்து 6 பதக்கங்கள் வெல்லும்போது, இந்தியாவோ பதக்க எண்ணிக்கையில் ஒற்றை இலக்கத்தைப் பெற்றுத் தலைகுனிய நேர்வது  இன்னும் தொடர்வது ஏன்? பயிற்சி, உபகரணங்கள், தரமான ஆடுகளம், தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்... என வெளிநாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு சிறுவயது முதலே கிடைக்கும் எந்த ஆதரவும், நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதே இல்லை. அவர்களுக்காக அரசு ஒதுக்கும் உணவு, உடை ஆகியவற்றுக்கான சிறு நிதியும் ஊழல் புதைச்சேற்றில் மாட்டி மறைந்துவிடுவது இன்னும் பயங்கரம்.

ஒரே ஒரு சிந்து, சாக்‌ஷி மாலிக், திபா கர்மகரோடு நாம் திருப்தி அடைந்துவிட முடியாது. கிரிக்கெட்டையும் தாண்டி விரிந்துகிடக்கும் விளையாட்டுகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து, விளையாட்டு வீரர்களுக்குப் போதுமான வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

அந்த நாளில்தான் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கிலும் தெரியும் ஒளிமயமான எதிர்காலம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்