ஜென் Z - நான் மாஷா நஸீம் ஆனது எப்படி?

சிபி, படம்: ரா.ராம்குமார்

புதுப்புது கண்டுபிடிப்பு களே மாஷா நஸீமின் அடையாளம்.  சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி.

``பள்ளியில் டான்ஸ், டிராமா, பெயின்ட்டிங், ஸ்போர்ட்ஸ்னு ஒண்ணுவிடாம எல்லா போட்டிகளிலும் கலந்துப்பேன். நான் எது செய்யணும்னு நினைச்சாலும் உடனே அதுக்கான சூழலை என் பெற்றோர்கள் உருவாக்கிக்கொடுத்துடுவாங்க. நான்காம் வகுப்புப் படிக்கும்போது அறிவியல் கண்காட்சியில் நடந்த ஒரு போட்டியில் `Burglar Alarm' என்கிற கருவியை உருவாக்கினேன். நம் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்தால், சைரன் அலாரம் எழுப்பும் கருவி. முதல் பரிசு கிடைச்சது. இனிமேல் அறிவியல்தான் எனக்கான பாதைனு தீர்மானிச்ச தருணம் அது.

`ரயில்களில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள், இந்தியா முழுக்க பல நூறு டன் திறந்தவெளியில் தண்டவாளங்களில் கிடக்கின்றன. இது மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்'னு நியூஸ் பேப்பர்ல படிச்சேன். இந்தப் பிரச்னைக்குத்  தீர்வாக ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. பல ஆய்வுகள், பல சோதனைகளை மேற்கொண்டேன். இறுதியில் `Hi-Tech Train Toilet'னு ஒரு புராஜெக்ட் செஞ்சேன். ரயிலிலேயே கழிவுநீர்த் தொட்டியை அமைத்து, கழிவுகளை அப்புறப்படுத்தும் திட்டம். மாவட்ட அளவில் தேர்வாகி, மாநில அளவில் செல்லும்போது `இது எல்லாம் சுமாரான புராஜெக்ட்' எனச் சொல்லி நிராகரிச்சுட்டாங்க. 

தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் முறையிட்டு தென்இந்திய அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகிட்டேன். அங்க இதை பெஸ்ட் புராஜெக்ட் எனத் தேர்வு செஞ்சாங்க. இந்திய அளவில் தேர்ந் தெடுக்கப் பட்ட சிறந்த 20 ஐடியாக்களில் என் புராஜெக்ட்டும் இடம்பிடிச்சது. அந்தச் சமயத்தில் சர்வதேச அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக போட்டிகள் நடந்தன. அதுல, நான் மட்டும்தான் ஸ்கூல் பொண்ணு. எனக்கு மைக் ஸ்டாண்ட்கூட எட்டலை. சேர் போட்டு மைக் உயரத்துக்கு நிறுத்திப் பேசவெச்சாங்க. அங்கேயும் எனக்கு பெஸ்ட் புராஜெக்ட்டுக்கான அவார்டு கிடைச்சது. எத்தனை தடைகள் வந்தாலும் கடைசி வரை முயற்சித்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அங்குதான் உணர்ந்தேன்.

நான் பத்தாவது படிச்சு முடிச்சப்போ ஒரு சம்பவம் நடந்தது. வேலூரில் பத்தாவது மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் எல்லாம் தீயில் எரிஞ்சுபோய்டுச்சு. `அரக்கு சீல் வைக்கும்போது அதில் இருந்த தீ பரவி' தேர்வுத்தாள்கள் வைத்திருந்த அறை முழுசும் எரிஞ்சுட்டதாகச் சொன்னாங்க. நெருப்பு இல்லாமல் அரக்கு சீல் வைக்கும் கருவி ஒண்ணைக் கண்டுபிடிச்சேன். Flameless Seal Maker என்ற இந்த கருவியால் நெருப்பைப் பயன்படுத்தாமல் சீல் வைக்கமுடியும். நாகர்கோவில் தேர்தல் நடந்தப்போ, ரெண்டு இடங்களில் நான் கண்டிபிடித்த கருவி மூலம்தான், வாக்கு இயந்திரங்கள் வைத்த அறைகளை சீல் வைத்தார்கள். 

VIP Security System, Conveyer Belt system, Mechanical Porter-னு 14 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி பேட்டர்ன் ரைட்ஸ் வாங்கியிருக்கேன். இந்தக் கண்டுபிடிப்புகளை அறிந்து முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலானு பலரும் என்னைப் பாராட்டினாங்க.

இப்ப எம்.டெக் படிச்சு முடிச்சுட்டேன். என்னைப்போல மாணவர்களும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தணும் என்பதற்காக, நாகர்கோவில் மாவட்ட நிர்வாகமே Masha Innovation Centre உருவாக்கிக்கொடுத்திருக்காங்க. பல மாணவர்களும் அவங்கவங்க ஐடியாக்களை இங்க கொண்டுவர்றாங்க. இப்ப எங்க சென்டர்ல இருந்து ஆறு பேர், அறிவியல் கண்டுபிடிப்பு களுக்காக தேசிய விருது வாங்கியிருக்காங்க. இப்படி, பல மாணவர்களை உருவாக்கணும். அதுதான் என் ஒரே ஆசை!’’

ரோல் மாடல்: அப்துல் கலாம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்