கலைடாஸ்கோப் - 55

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

இமை

``இந்தப் பழங்குடிகளில் இவன்தான் கடைசி மனிதன்'' என மெர்க் சுட்டிக்காட்டிய திசையில் மேஜை மீது பிணமாகக் கிடந்த அவனைப் பார்த்தாள் சனோஃபி.

“இவர்களிடம் இருந்து திருடப்பட்ட மூலிகைகளை வைத்துதான் இதுவரை நமது கம்பெனி எல்லா மருந்துகளையும் தயாரித்தது உனக்குத் தெரியும்தானே?” என்றார் மெர்க். தலையசைத்தாள் சனோஃபி.
``நான் சொல்வதை உன்னால் நம்ப முடியாது. `அகபந்தஸ் அகராடம்’ என்னும் தாவரவியல் பெயர்கொண்ட மூலிகையைக் கடைசியாக அறிந்துகொண்டேன். ஒருவகையில் சஞ்சீவினி” என்றார் மெர்க்.

 சனோஃபி, புரியாமல் பார்த்தாள்.

“உயிர்ப்பிக்கும் மருந்து. மிக ரகசியமாக வைத்திருந்தார்களாம். ஆனால், அதை எவ்வாறு புராசஸ் பண்ணுவது என எனக்குத் தெரியவில்லை. கட்டிவைத்து அடித்தும் கடைசி வரை இவன் சொல்லவே இல்லை. நேற்று இரவு கோபத்தில் சுட்டுக் கொன்றேவிட்டேன்.”

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்றாள் சனோஃபி.

``இந்த ரகசியக் குறிப்புகளை நீதான் படித்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மொழி உனக்குத் தெரியும் அல்லவா?” என்ற மார்க் பதப்படுத்தப்பட்ட இலைகளால் செய்த புத்தகத்தை சனோஃபியின் முன்னால் வைத்தார். தாவர மை காய்ந்து, எழுத்துக்கள் அழிந்து கலைந்து இருந்தன.

``இதோ இந்தப் பக்கம்தான்” என்று அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை விரித்துக் காட்டினார்.

“ஜனனமும் மரணமும் படைப்புச் செயலில் தவிர்க்க முடியாதவை என்பது மூத்தோர் சொல்.

காரணகாரியம் இன்றி இந்த மூலிகையைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், நமது சந்ததியை நீட்டித்துக்கொள்ள நம் இனக்குழுவை அழிவில் இருந்து காக்க, கடைசி ஆயுதமாக இதைப் பயன்படுத்தலாம்” என்று திக்கித் திணறி வாசித்தாள் சனோஃபி.

“மேலே படி!” என்றார் மெர்க்.

`நகநுனி அளவுக்கு இந்த மூலிகையை இமைக்கு அடியில் பதுக்கிக்கொண்டால், மரணித்த மறுநாள் நூறு மடங்கு ஆற்றலுடன் உயிர் மீளும்' என்று படித்தாள் சனோஃபி. மெர்க் அவசரமாக தலையைத் திருப்பி அவன் பிணத்தைப் பார்த்தார்.

இமைகள் லேசாகத் துடிக்கத் தொடங்கியிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்