களவாணி மழை

சிறுகதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது.

“அட, பொறுத்தா... அழகுப்புள்ள. ஒரு மூணு நாத்தேன். எச்சுமி வந்துருவாள்ல” என்றபடி அதன் அருகில் வந்தான்.

மனுசனுக்கிருக்கும் அத்தனை ஆயாசமும் களைப்பும் தெரியும் சிங்கியின் முகத்தை, வயித்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். நிறைமாசக் கர்ப்பத்தின் சுமையை ஒரு பெருமூச்சில் வெளியேற்றிய சிங்கியின் வாலைத் தூக்கிப் பின்மடியைப் பார்த்தான். இசைவாக அசைந்து கொடுத்த சிங்கி, இன்னொரு நீண்ட மூச்சுவிட்டது.

“சரித்தா, சரித்தா... செத்த பொறுத்துக்கோ” என்றபடி இடுப்பில் கட்டி எடுத்துவந்த நான்கைந்து நாட்டுப்பழங்களை எடுத்து அதுக்குக் கொடுத்தான்.

“கிறுக்கு மனுசா, ஒன் கும்பி காயுதேனு கட்டினவ பதர்றதப் பார்க்காம இங்கன வந்து செல்லங் கொஞ்சுற சீரப் பாரு”னு வந்த பாண்டியம்மா தந்த ஒரு சொம்பு நீச்சத்தண்ணியையும் ஒரே மொடாவில் குடித்தான்.

மேவாயைத் துடைக்கும் புருஷனின் ஒட்டிய வயிற்றைப் பார்த்த பாண்டியம்மா, “ந்தா... இன்னும் சோம்பித்தான் கிடக்கு வவுறு. சொஞ்சம் உண்டன இன்னிக்குச் சோத்த சாப்பிடு. உப்புக்கண்டம் ரெண்டு துண்டு பொரிக் கட்டா... சோறு கூட இறங்கும்ல?” என்றபடி தொழுவை ஒட்டியபடி இருந்த அறைக்குள் போனாள். ஓர் ஓரத்தில் அடுப்படி, நடுவுல கட்டில், மறு ஓரத்தில் துணிமணி தொங்கும் கொடி என எல்லாமுமாயிருந்த அந்த அறை, இன்னமும் ஈரப் பிசுபிசுப்போடு நசநசத்துக்கிடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்