தேவை, பொறியியல் கடிவாளம்!

பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகார விதிமுறைகளைத் தளர்த்தி, உத்தரவிட்டிருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவான ஏ.ஐ.சி.டி.இ. `நகர்ப்புறப் பகுதிகளில், ஒரு பொறியியல் கல்லூரிக்கான அடிப்படை நிலப்பரப்பு 2.5 ஏக்கர் இருக்க வேண்டும்’ என்ற முந்தைய விதிமுறை, ‘1.5 ஏக்கர் இருந்தாலே போதும்’ என மாற்றப்பட்டிருக்கிறது. ‘15 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்’ என்ற விகிதாச்சாரம் தளர்த்தப்பட்டு, ‘20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் போதும்’ என மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு இந்திய உயர் கல்வியின் எதிர்காலத்துக்கு எந்த வகையிலும் நன்மை தராது.

இந்தியாவில் அதிகப் பொறியியல் கல்லூரிகள்கொண்ட மாநிலங்களில் ஆந்திரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருந்தது. தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, 560 பொறியியல் கல்லூரிகளுடன் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ஆனால், அதிகக் கல்லூரிகள் எந்த வகையிலும் பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இல்லை. மாறாக, ஆண்டுதோறும் பின்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியாவின் 650 பொறியியல் கல்லூரிகளில் படித்த 1.5 லட்சம் பொறியாளர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவு ஒன்று கடந்த வாரம் வெளியானது. இதன்படி பொறியியல் படித்து வேலைவாய்ப்பு பெறும் மாநிலங்களில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா போன்றவை முன்வரிசையில் இருக்க... கடைசி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. கல்லூரிகள் எண்ணிக்கையில் முதல் இடம்; ஆனால், வேலைவாய்ப்பில் கடைசி இடம்.

இதற்குக் காரணம், கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதியும் கல்வித் தரமும் மிக மிக மோசமாக இருப்பதுதான். ஆய்வக வசதிகளோ, போதுமான ஆசிரியர்களோ இல்லாத பொறியியல் கல்லூரிகளின் ஒரே நோக்கம், பணம் பறிப்பது மட்டுமே. இந்த நிலையில் விதிமுறைகளைத் தளர்த்துவதும், ‘1.5 ஏக்கர் போதும்’ என சலுகை தருவதும் எந்த வகையில் சரி? கல்லூரி ஓர் இடம், விடுதி வேறு ஓர் இடம், ஆய்வகம் மற்றோர் இடம் என மாணவர்களை அலையவைக்கவும், விதிகளை மீறியோரை, விதிகளைப் பின்பற்றுவோராக சட்டப்படி மாற்றவுமே இந்தப் புதிய அறிவிப்பு உதவும்.

ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் படித்து வெளியில் வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள், வேலைவாய்ப்புச் சந்தையில் விலைபோகாத சரக்காக மாற்றப்பட்டுள்ளனர். கல்விக்கடன் கழுத்தை நெரிக்க, அதற்கான வட்டியைக் கட்டும் அளவுக்கான வேலைகூட அவர்களுக்குக் கிடைப்பது இல்லை. காரணம், அவர்களுக்குத் தரப்படும் கல்வியின் தரம் மிக மிக மோசமாக இருக்கிறது. `கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பொறியியல் பட்டதாரிகளில் 10 சதவிகிதம் பேருக்குத்தான் கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதத் தெரிந்திருக்கிறது’ என்ற சர்வே முடிவே இதற்குச் சான்று. பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, அறிவை மழுங்கடித்து, எதிர்காலத்தை சூனியத்துக்குள் தள்ளும் பொறியியல் கல்லூரிகளுக்குக் கடிவாளம் போடுவதற்குப் பதில், இப்படிப்பட்ட சலுகைகளை வாரி வழங்குவது இளைய தலைமுறைக்கு இழைக்கப்படும் அநீதி. அதை அரசே செய்வது, எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கும் மாபெரும் நம்பிக்கைத்துரோகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்