வேண்டாம் கெயில்!

கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிப்புக்கு தமிழகத்தில் இருந்த தடையை விலக்கி, திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய ஏழு மாவட்ட நிலப்பகுதிகளை ஊடுருவிச் செல்லும் இந்தத் திட்டம், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைப் பாதிக்கக்கூடியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கடும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தற்போதைய நீதிமன்ற அனுமதி விவசாயிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 925 கி.மீ தூரத்துக்கு பூமிக்குக் கீழே குழாய்கள் பதித்து எரிவாயு எடுத்துச் செல்வதுதான் திட்டம். இதில் 310 கி.மீ தூரம் தமிழக எல்லைக்குள் வருகிறது. 2013-ம் ஆண்டு, இந்திய எரிவாயு நிறுவனமான கெயில், இதற்காக குழாய் பதிக்கும் பணிகளைத் தொடங்கியபோது கொங்கு மண்டலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதனால், திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தத் தடை விதித்தது தமிழக அரசு. இந்தத் தடைக்கு எதிராக கெயில் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குழாய் பதிப்புக்கான தடை விலக்கப்பட... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த முறையீட்டில்தான் இப்போது கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தங்கள் வெள்ளாமை நிலத்தை வேதனையோடு பார்க்கின்றனர் விவசாயிகள்.

நிலத்துக்குக் கீழே பதிக்கப்படுவது இரண்டு அடி விட்டம் உள்ள குழாய்தான். ஆனால், நிலத்தின் மேலே 66 அடி அகலம் உள்ள நிலப்பரப்பு கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வந்துவிடும். அந்த இடத்தில் மரம் வளர்க்கக் கூடாது; ஒன்றரை அடிக்கு மேல் வேர் விடக்கூடிய பயிர் செய்யக் கூடாது எனக் கடும் கட்டுப்பாடுகள். பூமிக்குக்  கீழே இருக்கும் குழாய்க்கு ஏதேனும் சேதாரம் வந்தால், அதற்கும் சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயிதான் பொறுப்பேற்க வேண்டுமாம். நிலத்தையும் பிடுங்கிக்கொண்டு, அதைக் காவல் காக்கவேண்டிய கங்காணிகளாகவும் விவசாயிகளை மாற்றும் இந்தக் கொடும் திட்டத்தை, தமிழக அரசு அனுமதித்ததே தவறு.

‘இந்த எரிவாயு குழாய்கள் முற்றிலும் பாதுகாப்பானது’ என்கிறார்கள். ஆனால், இதே கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்துதான், கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவில் 22 பேர் இறந்துபோனார்கள். அத்தகைய விபத்து இங்கு நடக்காது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. எனில், இத்தகைய பெரும் திட்டங்களைச் செயல்படுத்தவே கூடாதா என்றால், அப்படி அல்ல. மக்களைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். சாலை ஓரங்களில், விவசாய நிலங்களைப் பாதிக்காத வகையில் பதிக்கலாம். ஆனால், அப்படிச் செய்ய கெயில் நிறுவனம் மறுக்கிறது. அது, திட்டத்தின் செலவீனத்தை பன்மடங்கு அதிகரித்துவிடுமாம்.

நிறுவனத்தின் நலன் பெரியதா, உழவர்களின் நலன் பெரியதா என்றால் அரசு எப்போதும் நிறுவனங்களின் பக்கமே சாய்கிறது. ஆனால், வேறு எதையும்விட வேளாண்மைதான் இந்த நாட்டின் ஆகப்பெரிய தொழிற்துறை. அதில் ஈடுபடும் உழவர்களின் நலன் காப்பது அரசின் அடிப்படைக் கடமை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்