சொல்வனம்

மிட்டாய்  மரம்

வசந்த காலத்தின் தொடக்க நாட்கள்

பெருமழைக்குப் பின் மரக்கன்றுகளை வாங்கி வந்தேன்

அதன் பெயர்களைத் தெரிந்துகொண்ட குட்டிமா

`மாம்பழம், கொய்யாப்பழம் திம்போமா... ஹைய்யா ஜாலி’ என்றது.

`மிட்டாய் கொடு.’

`இல்லமா.’

`வாங்கி வரவேண்டியதுதானே?’

`காசு இல்லை.’

`பேசாம மிட்டாய் மரம் வாங்கி வந்தா

நான்பாட்டுக்கு பிடுங்கித் திம்பனுல?’

குட்டிமா சொல்ல

வெட்கித் தலைகுனிந்தன மரக்கன்றுகள்.

மிட்டாய் வெறும் இனிப்பாகத்தான் இருந்தது

குழந்தைகள் விரும்பிய பின்தான்

மிட்டாய் அரசியலானது.

தொலைக்காட்சி விளம்பரத்தில் பெயர்களைக்

கற்றுக்கொண்ட குட்டிமா

தினமொரு மிட்டாய் பெயர் சொல்கிறது.

ஒவ்வொரு நாளும் மிட்டாயாகவே புலர்கிறது

குட்டிமா உலகத்தில்!

- பூர்ணா              

சுபதினங்களுக்கு முன்னால்...

பண்டிகை நாளன்று

குடும்பத்தோடு வெளியே கிளம்பும் மனைவி

பிள்ளைகளுக்கு

பிஸ்கட் எடுத்துக்கொள்கிறாள்

மாமனாருக்கு

இன்ஹேலர் எடுத்துக்கொள்கிறாள்

மாமியாருக்கு

காய்ச்சிய தண்ணீர் எடுத்துக்கொள்கிறாள்

கணவனுக்கு

கண்ணாடி எடுத்துக்கொள்கிறாள்

அவளுக்காக...

மாதவிடாய் தள்ளிப்போக

முந்தின நாள் இரவே

மாத்திரை போட்டுக்கொண்டாள்.
   
- ராம் வசந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்