10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

பேசாத பேச்சு!

``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா!

- கி.ரவிக்குமார்


ஞானம்


கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த  மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி  தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்!


- கீர்த்தி


நடிப்பு

`ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ணியிருக்கேன் இல்லப்பா!” என்றாள்!

- எஸ்.ரமணி


சின்ன மீன்...

பெரிய மீன்!

வீடு கட்ட வாசலில் கொட்டிவைத்திருந்த ஜல்லி, மணல் குவியலைப் பார்த்து சத்தம்போட்ட  கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் தந்து தள்ளிக்கொண்டு போனான்...

 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அவனை கவுன்சிலராக்கிய அப்பாவி !

- ஸ்ரீ ரங்கம்  ஏ.எஸ்.முரளி


சுதந்திரம்?!


சுதந்திர தின விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் சிறைக்குள் இருந்த கைதிகள்!


- சொக்கம்பட்டி தேவதாசன்


அனுபவம்... அறிவு!

“நல்லா படிக்கிறவங்ககூடச் சேர்ந்தாதான் படிப்பு வரும். இவங்ககூட ஏன்டா சேர்ற?”  “அப்பதாம்ப்பா,
அவங்க நல்லா படிப்பாங்க!”

- கி.ரவிக்குமார்


ஒன்று எங்கள்  சாதியே...


சாதிக் கலவரத்தால் ஊரே அடித்துக்கொண்டு ரத்த‌க்களமான பிறகு, ஒற்றுமையாக விலங்கு மாட்டிக்கொண்டு ஒரே வண்டியில் ஏறினர் கலவரத்துக்குக் காரணமானவர்கள்!

- கா.ரமேஷ்


ஆடுகளம்

10 வயதில் கோல்ஃப், கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே விளையாடுகிறான் பையன்...
வீடியோ கேம்ஸில்!

- பெ.பாண்டியன்


சந்தேகம்

``உன் ஆபீஸுக்கு போன் பண்ணினேன். நீ வரலைனு சொன்னாங்க. எங்கே போயிருந்த?” -

சந்தேகமாகக் கேட்டவனிடம், காட்டமாகச் சொன்னாள்...

“உங்க ஆபீஸுக்கு!”

- கி.ரவிக்குமார்


பாடம்!

நூறு முறை படித்தபோதும் புரியாத கூட்டு வட்டியும், தொடர் வட்டியும் புரியத் தொடங்கியது...
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்போது!

- நவநீ குரு


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick