ஊழல் கொள்முதல்?

‘சீரான மின்வெட்டு, சீரற்ற மின் விநியோகம்’ இதுதான் நெடுங்காலமாக தமிழ்நாட்டு மின் நிலைமை. திடீர், திடீரெனத் துண்டிக்கப்படும் மின்சாரம், மக்களின் இயல்பு வாழ்க்கையை இன்னலுக்குள் தள்ளி, தொழிற்கூடங்களை நலிவடையவைத்து, மாநிலத்தின் பொருளாதார நரம்பையே சிதைக்கிறது. இந்த நிலைமையை மாற்ற மாநில அரசின் மின்சார வாரியம் எடுக்கும் நடவடிக்கைகள் அதைவிட கேலிக்கூத்தாக இருப்பதுதான் வேதனை.

சில பொதுத் துறை நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 4.27 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க மறுத்துவிட்ட தமிழ்நாடு மின்சார வாரியம், சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் 5.05 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது. தினமும் 2 கோடி யூனிட் அளவுக்கு மின்சாரம் வாங்கப்படும் நிலையில், நாள் ஒன்றுக்கு 78 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒரு மாதத்துக்கு 23.40 கோடி; ஓர் ஆண்டுக்கு 284.70 கோடி ரூபாய் இழப்பு. ஏற்கெனவே 1.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தள்ளாடும் நிலையில், தெரிந்தே நஷ்டத்தை சம்பாதிப்பது ஏன்?

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை மட்டும்தான் வாங்க வேண்டும். ஆனால், விதிகளைப் புறம்தள்ளிவிட்டு அதிகப் பணம் கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 33 சதவிகித மின்சாரத்தை, மின்சார வாரியம் நேரடியாக உற்பத்திசெய்கிறது. 30 சதவிகித மின்சாரம், பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. மீதம் உள்ள 37 சதவிகிதம் மட்டுமே தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. 2013-14ம் ஆண்டு கணக்கின்படி, பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய 30 சதவிகித மின்சாரத்துக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்ட மின்சார வாரியம், அதே அளவு மின்சாரத்தை தனியாரிடம் இருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. ஒரே பொருள், ஒரே தரம், விலை மட்டும் இரு மடங்குக்கும் அதிகம். இந்த நியாயமற்ற வணிகத்தை அரசு தெரிந்தே செய்கிறது என்றால், நடப்பது மின்சாரக் கொள்முதலா... ஊழல் கொள்முதலா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் தன் சொந்த மின் உற்பத்தித் திறனை ஒரு யூனிட் அளவுக்குக்கூட மேம்படுத்தாத மின்சார வாரியம், புதிய புதிய வகைகளில் ஊழல் செய்வதற்கு மட்டும் திட்டங்களை வகுக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழலின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான் மின்வெட்டு என்ற சிக்கலுக்குத் தீர்வு தேட இவர்கள் வகுக்கும் திட்டங்கள், சிக்கலை மேலும் அதிகரிக்கின்றன. 

மின்சாரம் என்பது உணவு, உடை, நீர் போன்ற அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில், மின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் உள்ள குறைகளை நிவர்த்திசெய்வதுதான், ஓர் அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஆனால், அதை வாட்ஸ்அப்பில் செய்ய முடியாது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்