ஒழியட்டும் விளம்பர மோகம்!

ரு கட்சித் தலைவர், தன் கட்சியின் தலைமைக் கழகத்துக்கு வருவது அன்றாட நடவடிக்கை. ஒரு மாநில முதலமைச்சர், தலைமைச் செயலகத்துக்கு வருவது சராசரி நிகழ்வு. மக்களின் தலைவர் ஒருவர், மக்களைச் சந்திப்பது வழக்கமான செயல்பாடு. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இவை அனைத்தும் அசாதாரண சாகசங்கள். அதனால்தான் அவர் ஒவ்வொரு சாகசத்தை நிகழ்த்தும்போதும் அவரது கட்சித் தொண்டர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஆனால் மக்களோ, திண்டாடி நிற்கிறார்கள்.

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டுக்கும், ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கும் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரம். கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஜெயலலிதா கட்சி அலுவலகம் வந்தபோது, அந்தப் பகுதியே முடக்கப்பட்டது. சாலைகள் எங்கும் பேனர்கள் கண்களை மறைத்தன. சாலையின் இரண்டு ஓரங்களிலும் நடுவிலும் சதுரம், செவ்வகம், வட்டம்... என விதவிதமான வடிவங்களில் பேனர்கள் வைத்து பொதுமக்களைப் பதறவைத்தனர். வாகன ஓட்டிகள் நிலைகுலைந்தனர்.

கட்அவுட்டுகள் வைத்து மக்களைத் துன்புறுத்துவது அ.தி.மு.க-வுக்கு ஒன்றும் புதிது அல்ல. 1991-96ம் ஆண்டு ஆட்சியின் நினைவுகூரத்தக்கப் `பெருமிதங்களில்’ ஒன்று கட்அவுட் கலாசாரம். சமீபத்திய மழை வெள்ளப் பாதிப்புகளால் பலரும் கொண்டாட்டங்களை ஒதுக்கி, ஆரவாரங்களைத் தவிர்த்த நிலையில், பொதுக்குழுவுக்காகக் கூடிய அ.தி.மு.க-வினர் சென்னையின் ஒரு பகுதியையே திருவிழாக்கோலமாக மாற்றினார்கள். சாலைகள், நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் நடுங்கவைத்தனர். பேனர்களை அகற்றிய பொதுநல ஆர்வலர்களைத் தாக்கி, பொய் வழக்குகள் பதிவுசெய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, பெரும்பாலான பேனர்களுக்கு விண்ணப்பித்த அதே நாளில் அனுமதி வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ‘அப்படியானால் மற்ற அம்சங்களிலும் அரசு இதே வேகத்தில் செயல்படுகிறதா?’ எனக் கேட்ட நீதிமன்றம், ‘2015-ம் ஆண்டில் எத்தனை பேனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது... விண்ணப்பித்த தேதிக்கும் அனுமதி வழங்கப்பட்ட தேதிக்கும் இடைப்பட்ட நாட்கள் எத்தனை?’ என்பதை அறிக்கையாகத் தாக்கல்செய்யுமாறு கேட்டது. ஆனாலும் கட்அவுட்டுகளும் பேனர்களும் மட்டும் இன்னும் ஓயவே இல்லை!

தங்களின் புகழ் பரப்புவதாக எண்ணிக்கொண்டு ஆளும் அதிகாரத்தில் உள்ளோர் மேற்கொள்ளும் இந்த பேனர் விளம்பர மோகம், மக்களிடம் அசௌகரியத்தையும், அச்சத்தையும் ஒருசேர விதைப்பதை உரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் விதைப்பதை நீங்களே அறுவடை செய்யவேண்டியிருக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்