மெஸ்ஸியின் கடைசி கிக்!

குமரேசன்

`என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டேன். சாம்பியன் ஆக முடியாதது என்னை வேதனைக்கு உள்ளாக்குகிறது. விடைபெறுகிறேன்' என்ற மெஸ்ஸியின் அறிவிப்பு, அர்ஜென்டினாவை மட்டும் அல்ல... உலகின் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் கண்ணீரில் நனைத்திருக்கிறது.

உலகுக்கே கால்பந்து வீரர்களை சப்ளை செய்யும் இரண்டு நாடுகளில் ஒன்று, அர்ஜென்டினா.  இரண்டு முறை உலகக்கோப்பை, 14 முறை கோபா அமெரிக்காவைக் கைப்பற்றிய கால்பந்து கடவுள்களின் தேசம். ஆனால், 1993-ம் ஆண்டு கோபா அமெரிக்காவில் சாம்பியன் ஆன பிறகு, எந்த ஒரு முக்கியத் தொடரிலும் அர்ஜென்டினா அணியால் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை.
23 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக்கூட வெல்ல முடியாமல் இன்று வரை தோல்வியுடன் தொடர்கிறது அர்ஜென்டினா அணி.

கடந்த உலகக்கோப்பையில், அர்ஜென்டினா அணி லியோனல் மெஸ்ஸி தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. `இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்' என அர்ஜென்டினாவே நம்பிக்கை வைத்திருந்தது. எதிர் அணியான ஜெர்மனியில் நட்சத்திர வீரர்கள் குவிந்து கிடந்தனர். அர்ஜென்டினாவின் ஒரே நம்பிக்கை மெஸ்ஸி மட்டுமே. போராட்டக் களத்தின் முடிவில், ஜெர்மனியின் மரியோ கோட்ஸே அடித்த ஒரே ஒரு கோல், மெஸ்ஸியின் இதயத்தைச் சுக்குநூறாக்கியது.

உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு, இப்போது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்துக்கு அர்ஜென்டினா முன்னேறியது. மீண்டும் ஒரு தேசத்தின் அதே எதிர்பார்ப்பு. ஆனால் இந்த முறையும் அர்ஜென்டினாவின் கோபா அமெரிக்கா கனவு இறுதிப்போட்டியில் தகர்ந்துபோனது. மெஸ்ஸியே அதற்கு முதல் காரணமாகிப்போனார் என்பதே, அவரை ஓய்வு முடிவுக்குக் கொண்டுசென்றிருக்க வேண்டும்.

கால்பந்து களத்தில் மெஸ்ஸி சாதித்தது அதிகம். ஆனால், அதற்காக அவர் சந்தித்த சவால்கள் இன்னும் பல மடங்கு அதிகம். அர்ஜென்டினாவின் ரோசாரியோ நகரத்தில் 1987-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்தவர் மெஸ்ஸி. தந்தைக்கு இரும்பு ஆலையில் பணி. இவருக்கு மூன்று சகோதரர்கள். வீட்டிலேயே குட்டிக் கால்பந்து அணி இருந்தது. மெஸ்ஸியின் கையில்... ஸாரி கால்களில் 24 மணி நேரமும் அந்தக் கால்பந்துதான் இருக்கும். உறங்குவது, சாப்பிடுவது எல்லாமே கால்பந்துடன்தான். ரோசாரியோ நகரில்தான் அர்ஜென்டினாவில் `நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ்' என்ற புகழ்பெற்ற கால்பந்து அணி விளையாடிக்கொண்டிருந்தது. ஆறாவது வயதிலேயே அந்த அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் மெஸ்ஸி.

குட்டி மெஸ்ஸியின் திறமை, அத்தனை பேரையும் ஈர்த்தது. கோல் போஸ்ட் நோக்கிய அவரின் லெஃப்ட் ஃபுட் உதை, எதிர் அணியினரை மிரளவைத்தது. இதனால் அந்த வயதிலேயே ரோசாரியோ நகரம் முழுக்க மெஸ்ஸி பாப்புலர். மெஸ்ஸி 10 வயதை எட்டியபோது உடல்ரீதியான தடையைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்கு ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. மெஸ்ஸிக்கு ஏற்பட்ட ஹார்மோன் குறைபாட்டைச் சரிசெய்ய, சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 1,000 டாலர் செலவு செய்யவேண்டிய கட்டாயம்.

குடும்பம், வறுமையில் தத்தளிக்கத் தொடங்கியது. முதலில் சிகிச்சைக்கு உதவுதாகச் சொன்ன நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் அணி, பிறகு கைவிரித்துவிட்டது. ஆனால், குட்டி மெஸ்ஸியின் கால்பந்து திறமையை, அர்ஜென்டினாவில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு தள்ளியிருந்த ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணி கண்காணித்துக்கொண்டிருந்தது. மெஸ்ஸிக்கு இப்படி ஒரு நிலை என்றதும், `ஸ்பெயினுக்கு வர விருப்பமா?' என்ற ஒரே கேள்வியுடன் 13 வயதிலேயே மெஸ்ஸியை ஸ்பெயினுக்குள் அழைத்துக்கொண்டது பார்சிலோனா அணி நிர்வாகம். மெஸ்ஸியின் மருத்துவச் செலவுகளை அந்த அணி நிர்வாகமே ஏற்றுக்கொண்டது. ஹார்மோன் குறைபாட்டினால்தான் மெஸ்ஸியிடம் ஒரு கால்பந்து வீரருக்கு உரிய வலுவான உடல் அமைப்போ, இறுக்கமான தொடைத் தசைகளோ இருக்காது.

பார்சிலோனா யூத் அணியில் சேர்க்கப்பட்டார் மெஸ்ஸி. புதிய நாடு, புதிய அணி என ஏற்கெனவே ரிசர்வ் டைப் ஆளான மெஸ்ஸி, அங்கே தடுமாறினார். தாய்நாட்டை விட்டுப் பிரிந்துவந்தது அவரை என்னவோ செய்தது. நாளடைவில் அதில் இருந்து மீண்டு, கால்பந்தில் கவனம்செலுத்தத் தொடங்கினார். பார்சிலோனா அணி, கொஞ்சம் கொஞ்சமாக மெஸ்ஸியைப் பட்டை தீட்டியது. 2002-ம் ஆண்டு ராயல் ஸ்பானீஷ் ஃபுட்பால் ஃபெடரேஷன், மெஸ்ஸிக்கு தொழில்முறை கால்பந்து வீரருக்கான அங்கீகாரத்தை வழங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்