திரைத்தொண்டர் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

சிக்மகளூரில் ‘கவிக்குயில்’ ஷூட்டிங் முடித்துவிட்டு, சென்னை திரும்பினோம். சென்னையில் நான்கைந்து நாட்கள் பேட்ச் வொர்க் மீதி இருந்தது. அதை முடித்துவிட்டால் போஸ்ட் புரொடக்‌ஷன் முடித்து, படத்தை ரிலீஸ் செய்துவிடலாம். ஆனால், ஏன் எனத் தெரியவில்லை, அந்த பேட்ச் வொர்க் வேலைகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தன. விசாரித்தால், ‘தேவராஜுக்கும் உங்கள்  தம்பி சுப்புவுக்கும் ஏதோ மனவருத்தம். அதனால் தேவராஜ் சொந்தப் படம் எடுப்பதற்காகப் போய்விட்டார்’ என்றார்கள். எனக்கு அதிர்ச்சி. அதை இருவருமே என்னிடம் சொல்லவில்லை.

பிறகு, தேவராஜை அழைத்து, ‘நீங்க என் ஃப்ரெண்ட். பிரச்னைன்னா என்கிட்ட சொல்லவேண்டியதுதானே’ என்றேன். ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லண்ணே, முடிச்சிடுறேன்’ என்றவர் அதேபோல முடித்தும் கொடுத்தார். அவர் மாதவனின் உதவி இயக்குநராக இருக்கும்போதே எனக்கு அறிமுகம். நானும் `ஃபிலிமாலயா' ராமச்சந்திரனும் இணைந்து தயாரித்த ‘உறவு சொல்ல ஒருவன்’ படத்தை இயக்கினார். அதுதான் நான் தயாரித்த முதல் படம். தொடர்ந்து ‘அன்னக்கிளி’, ‘கவிக்குயில்’ படங்களை இயக்கினார். பிறகு, சொந்தப் படம் எடுக்கலாம் என முடிவெடுத்து ‘பூந்தளிர்’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ உள்பட சில படங்களைத் தயாரித்து இயக்கினார். அதில் `ரோசாப்பூ ரவிக்கைக்காரி' பெரிய வெற்றியடைந்தது. (இவர் 15 படங்கள் இயக்கியிருப்பார் என்றால், அதில் 10-க்கும் அதிகமான படங்களில் சிவகுமார் சார்தான் ஹீரோ.)

‘கவிக்குயில்’ பட வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், என் தம்பிகளின் மீது வருத்தத்தில் இருந்தேன். அவர்களைத் தயாரிப்பாளர்களாக்கி, நடிகர்கள், டெக்னீஷியன்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு புராடக்ட்டை உருவாக்கிய எனக்கு ‘அண்ணன்’ என்பதைத் தாண்டி பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. இனி சொந்தமாக நம் பெயரிலேயே படங்கள் பண்ணுவோம் என முடிவுசெய்திருந்தேன். அப்போது தயாரிப்பாளர் பாஸ்கர், `நீங்க ஏன் தனியா கஷ்டப்படணும். நானும் சேர்ந்துக்கிறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தயாரிப்போம்' என்றார். ‘விஜய மீனா ஃபிலிம்ஸ்’ என்ற கம்பெனியைத் தொடங்கினோம். (அவரின் மனைவி பெயர் விஜயா, என் மனைவி பெயர் மீனா) அதில்தான் ‘காயத்ரி’ படத்தைத் தயாரித்தோம்.

‘காயத்ரி’, எழுத்தாளர் சுஜாதா சாரின் கதை. அந்தக் கதை அப்போது தினமணி கதிரில் வந்திருந்தது. குறுநாவல், சிறுகதை இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வந்திருந்த கதை. அந்தக் கதையைப் படித்ததும் ‘வித்தியாசமா இருக்கே’ எனத் தோன்றியது. வெவ்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அந்தப் பெண்களுக்கே தெரியாமல் அவர்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பும் ஒரு கும்பல். அந்தக் கும்பலில் ஒரு பெண் மாட்டிக்கொள்கிறார். கடும் துயரத்தில் இருக்கும் அவள், தன் சூழலை ஒரு நோட்டில் எழுதி, அதை பழைய பேப்பருடன் சேர்த்து அனுப்புகிறாள். துப்பறியும் நிபுணர்களான கணேஷ்-வசந்த் இருவருக்கும் அது தெரியவருகிறது. அவர்களின் உதவியோடு அவள் அங்கு இருந்து எப்படித் தப்புகிறாள் என்பதுதான் கதை.

இதுபோன்ற கதைகளை ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழில் படிக்கும்போது அது எனக்கு வித்தியாசமாகவும் புதிதாகவும் தெரிந்தது. ஏனெனில், அப்போது இங்கே வீடியோ கேசட்கூட பெரிய அளவில் வராத காலம். அதேபோல ‘எம்.ஏ படித்ததாகச் சொல்லி நான்கு திருமணங்கள் செய்த வாலிபர் கைது’, ‘தொழிலதிபர் என ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது’ என்ற செய்திகளைப் படிக்கும்போது, ‘இவனுங்களுக்கு எல்லாம் எப்படி பொண்ணு கொடுக்குறாங்க?, இவனுங்க எப்படி ஏமாத்தியிருப்பாங்க?’ என விநோதமாகவும் பரிதாபமாகவும் இருக்கும். கல்யாணம் என்ற சென்டிமென்ட்டும் ‘வீடியோ’ என்ற டெக்னாலஜியும் அந்தக் கதையில் இணைந்து இருந்ததால் ‘இதைப் படமாக எடுத்தால் புதிதாக இருக்கும்’ எனத் தோன்றியது.

சுஜாதா சாரிடம் பேசினேன். ‘சாவி சார் ஏதோ கேட்டார்னு அவசரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். அப்பவே, ‘நீங்கள் எல்லாம் இப்படி எழுதலாமா?’னு எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள். எழுதினத்துக்கே இவ்வளவு கண்டனங்கள்னா, இதை எப்படி சார் நீங்க படமா எடுப்பீங்க?’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்