"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”

ஆர்.குமரேசன்

2012-ம் ஆண்டு, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம். இந்தியாவின் முன்னணி வீரர்களுக்கு நடுவில் நின்றிருந்தாள் அவள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒடிசாவைச் சேர்ந்த அந்த சின்னப் பெண் அவ்வளவு வேகமாக ஓடி சாதனை படைப்பாள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவளுடைய பெயர் டூட்டி சந்த். பந்தயத் தூரத்தை 11.8 விநாடிகளில் கடந்து, தேசிய அளவில் சாதனை படைத்தாள். பயிற்சியாளர்கள், டூட்டியை அள்ளிக்கொண்டனர். `இதோ இந்தியாவின் எதிர்காலம்' என தடகள வட்டாரங்களை அதிரவைத்தார் டூட்டி. ஆனால், இரண்டே ஆண்டுகளில் டூட்டி சந்தின் வாழ்க்கை திசைமாறியது.

2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நெருங்கிக்கொண்டிருந்த நேரம். பயிற்சிக்குப் பிறகு பயிற்சி... என மைதானத்திலேயே தவமாகக்கிடந்தார். அந்தச் சமயத்தில்தான் `டூட்டி சந்துக்குத் தடை!' என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது இந்தியத் தடகள சங்கம். `காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியாது' என்றும் அறிவித்தது. டூட்டி சந்த் உடைந்துபோனார்.

இந்தியத் தடகள உலகமே திகைத்துபோனது. `என்ன ஆச்சு இந்தப் பெண்ணுக்கு... ஏன் தடை?' என, கேள்வி மேல் கேள்விகள் எழுந்தன.

`டூட்டி, பெண் அல்ல. அவரது உடலில் ஆணுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருக்கின்றன. அது சர்வதேசத் தடகள சங்கத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் இருக்கிறது. எனவே அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாது' என்றது தடகள சங்கம். தன் எதிர்காலம் இனி ஓட்டம்தான் என வாழ்ந்துகொண்டிருந்த வீராங்கனையை, இந்த அறிவிப்பு உடைத்துப்போட்டது.

இருப்பினும், டூட்டி சளைக்கவில்லை. தடகளத்தின் மீது அவர்கொண்ட காதல், தடையை எதிர்த்துப் போராடவைத்தது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளை நாடினார். நீதிமன்றங்களைத் தேடி ஓடினார். டூட்டிக்கு ஆதரவாக எண்ணற்ற அமைப்புகள் திரண்டன. ஸ்விட்ஸர்லாந்தின் லாசானே நகரில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்கள் டூட்டிக்கு ரணமாகின. இருந்தும் போராடினார்.

``ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருந்ததால்தான் தடகள வீராங்கனைகள் களத்தில் வெற்றி பெறுகிறார்கள்' எனக் கூறுவதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் போதுமான அளவில் நிரூபிக்கப்படவில்லை' என நீதிமன்றம் சொல்ல, டூட்டிக்கு தடகளத்தில் இருந்த தடை நீங்கியது.

தடை நீங்கி வந்த டூட்டி, முன் எப்போதையும்விட பலம் வாய்ந்தவளாக, உறுதியானவளாக மாறியிருந்தார். முன்பைவிடவும் இன்னும் அதிக உத்வேகத்துடன் ஓட ஆரம்பித்தார். இப்போது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதி பெற்றுவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்