பிரிட்டனின் உள்ளே வெளியே!

மருதன்

லகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது.

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும்.

1. ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன?

இன்னோர் உலகப்போர் மூளாமல் இருக்கவேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.அதற்கு தேச எல்லைகளைக் கடந்து, ஒரு பெரிய குடையின் கீழ் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுதிரண்டு தங்களுக்குள் தடையற்ற அரசியல், பொருளாதார, வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்  என்ற லட்சியத்துடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்புதான் ஐரோப்பிய யூனியன். வெவ்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இயங்கிவந்த இந்த அமைப்பு, 1993-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனாக மலர்ந்தது.

பிரிட்டனின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. மக்கள்தொகை 50 கோடிக்கும் அதிகம். உலக மக்கள்தொகையில் இது ஏழு சதவிகிதம். 28 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் மேலான வாழ்க்கைத்தரம் கொண்டவை. ஐரோப்பிய யூனியனின் பொதுவான நாணயம், யூரோ. 2012-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் வென்றது. சர்வதேச அளவில் செல்வாக்கு உள்ள ஒரு சூப்பர் பவர் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியன்.

2. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஏன்?

1973-ம் ஆண்டு `ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகம்' என்னும் பெயருடன் ஐரோப்பிய யூனியன் இயங்கிவந்தபோது, பிரிட்டன் இந்த அமைப்பில் இணைந்துகொண்டது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே பிரிட்டனில் ஒரு பெரும் பிரிவினர் இந்த இணைப்பை ஏற்கவில்லை.  `மாபெரும் சாம்ராஜ்ஜியமாக இருந்த நாம், சிறிய நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து ஒரு பொட்டலத்தில் சுருங்கிவிடுவதா?' என அப்போதே முணுமுணுத்தனர்.

 யூரோ என்னும் பொது நாணயத்தை, தொடக்கத்தில் இருந்தே ஏற்காமல் தனது பவுண்டையே பிரிட்டன் பயன்படுத்தி வந்திருக்கிறது. மற்ற உறுப்பு நாடுகளைப்போல் இல்லாமல் தன் எல்லைகளை சுதந்திரமாகத் திறந்துவைக்காமல் வேலி போட்டுக்கொண்டு பாதுகாப்பாகவே இருந்தது.

இருந்தாலும், ஓர் அளவுக்கு மேல் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலன் கொடுக்க வில்லை. இதனால் ஐரோப்பிய யூனியனுக்காக தனது எல்லைகளைத் திறந்தது பிரிட்டன். இதனால் வளமான நாடான பிரிட்டனை நோக்கி பலவீனமான ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிழைப்புக்காகத் திரண்டுவரத் தொடங்கினர். இது பிரிட்டனின் வலதுசாரிகளுக்குப் பிடிக்கவில்லை.

`நாமே தடுமாறிக்கொண்டிருக்கும்போது அந்நியர்கள் பலர் உள்ளே நுழைவதையும் நம் வேலைகளைப் பறித்துக்கொள்வதையும் நம் வளங்களையும் வாய்ப்பு களையும் பங்குபோட்டுக்கொள்வதையும் அனுமதிக்கக் கூடாது' எனக் குரலெழுப்பத் தொடங்கினார்கள்.
 
2008-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, இந்த அதிருப்தியாளர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகள் செல்வாக்கு இழந்து, செல்வம் இழந்து தடுமாறத் தொடங்கியதைக் கண்டு, இவர்கள் மேலும் எரிச்சல் அடைந்தனர். ‘மற்ற யூனியன் நாடுகளைப்போல் நாமும் யூரோவை ஏற்றிருந்தால், இந்நேரம் இவர்களோடு சேர்ந்து மண்ணைக் கவ்வியிருப்போம். பவுண்ட் இருந்ததால்தான் தப்பித்தோம். ஐரோப்பிய யூனியன் என்பது புதைகுழி என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் விழித்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு நல்லது’ என்று அவர்கள் முழங்கியபோது மக்கள் அதை ஏற்கத் தொடங்கினர்.

`இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்திருக்க வேண்டுமா... வேண்டாமா என வாக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் எதிர்காலத்தை முடிவுசெய்வோம்' என 2012-ம் ஆண்டு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் அறிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்