காவல் துறை மீது கவனம் செலுத்துங்கள்!

கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள் என நாள் தவறாமல் நடக்கின்றன குற்றங்கள். காவல் துறையின் கண்காணிப்பு எல்லைக்குள் வராத, தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழும் குற்றங்களை விட்டுவிடுவோம். ஆனால், கூலிப்படையினரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை, பட்டப்பகலில் நிகழும் வழிப்பறிகளை, கொள்ளைகளை, சங்கிலி அறுப்புகளைத் தடுக்கவோ, கட்டுக்குள் கொண்டுவரவோ காவல் துறையால் ஏன் முடியவில்லை?

இதுபோன்ற குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். முதல் சவால் நிரப்பப்படாமல், கூட்டப்படாமல் உள்ள காவல் பணியாளர் இடங்கள். மக்கள் பெருக்கம் கூடக்கூட, காவல் நிலையங்கள், காவலர்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட சென்னையின் சட்டம் - ஒழுங்கையே சுமார் 20 ஆயிரம் காவலர்கள்தான் நிர்வகிக்கிறார்கள் என்பதன் மூலம், காவலர்களின் பற்றாக்குறையை உணர முடியும். தமிழகத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், அதில் 19 ஆயிரத்து 200 பணியிடங்கள் இப்போதுமே காலியாக உள்ளன. கூடுதல் பணியிடங்களைத் தோற்றுவிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இருக்கும் காலி இடங்களையாவது உடனடியாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்.

அடுத்து, குற்றத்தடுப்பில் வேகமின்மை. ஒரு குற்றம் நடக்கிறது என்றால், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தில் காவல் துறையினர் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் குற்றவாளியின் அடையாளங்கள், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட முடியும். அந்த நேரத்தில், விசாரணை அதிகாரி வி.ஐ.பி பாதுகாப்பில் இருந்தால் எப்படி சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து விசாரணை நடத்த முடியும்? இதனால்தான் பல வழக்குகள் நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகின்றனர். இதற்குத் தீர்வாக விசாரணைக்கு எனத் தனிப் பிரிவும், ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், பிரமுகர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு எனத் தனிப் பிரிவும் ஏற்படுத்த வேண்டும் என்பது காவலர்களின் நீண்டகாலக் கோரிக்கை.

‘மாமூல்’ என்றாலே காவல் துறை நினைவுக்கு வரக் காரணம், மற்ற யாரையும்விட காவல் துறை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதன் குறியீடே. அதைக் காவல் துறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும். அடுத்து ஊக்கம், உற்சாகமின்மை. பெரும்பாலும் வழக்கின் முதல் `க்ளு'வைக் கண்டறிவது என்னவோ, கடைநிலைக் காவலர்கள்தான். ஆனால், புகழ் போய்ச் சேருவதோ அதிகாரிகளுக்கு. இதனால் சோர்வுறும் காவலர்களை எப்படி உற்சாகப்படுத்தப்போகிறீர்கள்?

அடுத்து எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற வரையறுக்கப்படாத வேலை. தொடர் வேலைகளால் எரிச்சலுறும் காவலர்களுக்கு எட்டு மணி நேர வேலையை எப்போது நிரந்தரமாக்கப்போகிறீர்கள்? வேலை பார்ப்பதற்கே காவலர்கள் இல்லாதபோது, `ஆர்டர்லி’ என்ற பெயரில் அதிகாரிகள் வீட்டு வேலைக்காரர்களாகத் திரியும் காவலர்களுக்கு எப்போது அதிகாரத்தைத் தரப்போகிறீர்கள்?

அரசியல் தலையீடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், லஞ்ச லாவண்யம் என காவல் துறையின் மீது வைக்கப்படும் இதுவும் இன்னபிறவுமான விமர்சனங்களை எப்போது துடைத்தெறியப்போகிறோம்?

தமிழகக் காவல் துறைக்கு எனத் தனி மரியாதை உண்டு எப்போதும்.

அது வேண்டும் இப்போதும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்