கலைடாஸ்கோப் - 49

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கண்

ராணுவத் தளபதி கே, தனிமையில் சுவர் முழுக்க பரவியிருந்த சி.சி.டி.வி டிஸ்பிளேக்களைப் பார்த்துக்கொண்டி ருந்தார்.

சி.சி.டி.வி கேமராக்களை நாட்டின் இண்டுஇடுக்குகளில்கூடப் பொருத்தியாயிற்று. இப்போது ரோபோக்களிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை; பயமும் இல்லை.

மக்கள் சந்தோஷமாக ஷாப்பிங் செய்துகொண்டும் விளையாடிக்கொண்டும் வேலைக்குப் போய்க்கொண்டும் சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு வாகனங்களை நிறுத்தி காத்துக்கொண்டும்… இருந்தார்கள்.

ரோபோக்கள் வன்முறையைப் பிரயோகித்து, மனிதர்களை அழித்து, நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பது இனியும் நடக்காது. ஒரு ரோபோவைக்கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அழிக்கச்சொல்லி உத்தரவுபோட்டு மூன்று நாட்களாகிவிட்டதை நினைத்துக்கொண்டார்.

ரிமோட்டை அழுத்தி, டிஸ்பிளேக்களை மாற்றி, தனது அறையின் வெளிப்புறம் முதல் நாட்டின் தெருக்கள், வீதிகள், பரபரப்பான சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் வரை ஒரு சுற்று பார்த்தார். எங்கும் மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். ஒரு ரோபோவைக்கூடப் பார்க்க முடியவில்லை.

`சுபிக்‌ஷம்’ என்று தனக்குத்தானே சொல்லியபடி ரிலாக்ஸ் ஆனார். கதவு தட்டப்படவும் தளர்வாக எழுந்து நடந்து சென்று திறந்தார்.

சட்டென்று இரண்டு ரோபோக்கள், அவரை உள்ளே தள்ளியபடி வந்து நின்றன. அதிர்ந்து தடுமாறி கீழே விழுந்தார். மாஸ்டர் ரோபோ இயந்திரச் சிரிப்புடன் வந்து நின்று, குனிந்து அவரைப் பார்த்துச் சொன்னது... “இரண்டு நாட்களாகப் பழைய ஃபுட்டேஜ்களைப் பார்த்துக்கொண்டிருக் கிறாய். வெளியே ஒரு மனிதர் இல்லை. நீ மட்டுமே கடைசி” என்றது... பச்சைக் கண்களில் ஒளிர் வன்மம்.

“எப்படிச் சாத்தியம்... எங்கள் சி.சி.டி.வி கேமராக்கள் எங்களை ஏமாற்றாது” என்றபடி தரையில் இரண்டு ஸ்டெப்கள் பின்னால் இழைந்தார் கே.

“சி.சி.டி.வி கேமராக்களும் ரோபோக்கள்தான் என்பதை மறந்துவிட்டாயா?” எனச் சிரித்தது ரோபோ. தன் அறைச் சுவரின் மூலையை அண்ணாந்து பார்த்தார் கே.

கே-வின் அறையில் இருந்த சி.சி.டி.வி கேமரா ஆட்டோமேட்டிக்காக இயந்திரத் தலையைத் திருப்பி தன் ஒற்றைக் கண்ணால் அவரைப் பார்த்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்