காஸ்மிக் திரை

சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

‘‘இந்தச் செய்திகளை எல்லாம் மக்கள் நம்புகிறார்களா?’’ ஹாசினி வெறுப்புடன் கேட்டுவிட்டு, இடதுகை மணிக்கட்டில் கட்டியிருந்த ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள்.

‘‘நம்புகிறார்களா எனத் தெரியாது, ஆனால் விரும்புகிறார்கள் ஹாசினி. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்.’’

அங்கு இருந்த ஆறு பேரும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.

‘‘ஹாசினி, சீக்கிரம் முடிவெடு. செய்திப் பிரிவு தயாராகிவிட்டது. மொத்தம் 20 நிமிடங்கள்தான். அதில் நான்கு க்ளிப்பிங்ஸ். நீ பேசப்போவது ஐந்து நிமிடங்கள்கூட இருக்காது.’’ ஹாசினி மீண்டும் ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள். உலக நேரம், பால்வீதி புள்ளியின் நான்காம் பரிமாணம், உடம்பின் டெம்பரேச்சர் வரை காட்டியது. ரிக்கார்டர், ஹாஸ்பிட்டல், ஆயுதம் எல்லாமே அதுதான்.

‘‘எதற்கு மீண்டும் மீண்டும் அதைப் பார்க்கிறாய்?’’

அப்படிப் பழகிவிட்டது. ஹாசினி தலைமுடியைக் கோதிக்கொண்டாள். வேண்டாத விருப்பத்துடன் சம்மதம் தெரிவிக்கும் ஒரு பாவனை அதில் தெரிந்தது. பெண் அடையாளங்களுக்கான இடங்களில் மட்டும் செப்பு உடை அணிந்திருந்தாள். ஆண்களுக்கு அந்த அவசியம் இருக்கவில்லை.

பிடிவாதமாக அவளுடைய செய்தி வாசிப்பைப் பயன்படுத்த நினைப்பதை அறவே வெறுத்தாள். பூமி மட்டத்தில் இருந்து 60 அடி ஆழம். எல்லா அறைகளும் ஒன்றுபோல அமைக்கப்பட்டு அதற்குள்தான் மக்கள் வசிக்கிறார்கள் என்கிறார்கள்.செய்தி வாசிப்பு அறையில் இருந்து புவியை தரிசிக்க ஒரு ஜன்னலும் இல்லை. புவி இப்போது எப்படி இருக்கும் என யாருக்குமே தெரியவில்லை. என்னதான் காஸ்மிக் புயல், நியூட்ரான் குண்டு என அச்சுறுத்தினாலும் புவியைப் பார்க்கும் ஆசை மட்டும் போகவே இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஓஸா விண்வெளித்தளம் வெளியிடும் புவிக்கோளத்தின் படங்கள்தான் மக்களுக்கு ஒரே புவி தரிசனம். கருகிய நெடிதுயர்ந்த கட்டடங்கள், ஆங்காங்கே புகை, மை பூசிவிட்டது போன்ற மலைகள், சகதிகள், ஒரே ஜீவராஜன்களாக கரப்பான்பூச்சிகளின் மொய்ப்பு... இவற்றை வெவ்வேறு வகைகளில் படம் எடுத்து கேலக்ஸி கேலரியில் வெளியிடுவார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகளாவது ஆனபிறகுதான் புவியை மனிதர்கள் நேரடியாகப் பார்க்க முடியும். அதுவரை கதிர்வீச்சு இருக்கும் என உறுதியாகக் கூறிவிட்டார்கள்.

கேலக்ஸி டூரிஸத்திலேயே தடைசெய்யப்பட்ட பகுதி என்ற பட்டியலில் இருந்தது பூமி. நியூக்ளியர் போருக்குப் பின்னர் அது வாழ உகந்ததாக இல்லை என்பது யுனிவர்ஸல் மேப்பிலேயே குறிக்கப்பட்டு விட்டது. டார்க் ஏரியா. மூடிய விண்கலத்தில்தான் பயணம். புவியைப் பார்ப்பதுகூட ஆபத்தானது. கதிர்வீச்சின் அபாயம் அப்படி. எல்லாம் ஆன்ட்ரமீடாகாரர்கள் வந்தபிறகுதான்.

ஹாசினியுடன் அவளுடைய காதலன் ஹாசன் வந்திருந்தான். கணவன்-மனைவி பெயர்கள் இப்படி விகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், சமீபத்தில் அப்படி பெயரை மாற்றியிருந்தனர். ராணி என்றால் ஆண்பால் விகுதி ராணன். ராஜா என வைக்கக் கூடாது. ராஜாவுக்கு ராஜி. கேலக்ஸி குடும்பத்தின் தலைவன், பெயர்களை நீக்குவதில் குறியாக இருந்தான். அவனுக்குப் பெயர் ஒன். அடுத்த லெவல்களில் டு, த்ரி... அவன் அன்ட்ரமீடா வாசி. அவன் என்பதுகூட பழக்கதோஷத்தில்தான். அது! அதுகளின் அத்துமீறலை ஒழிக்க வேண்டும் என்பதில் செய்திப்பிரிவில் தனியே ஒரு சதிப்பிரிவே செயல்பட்டுவருகிறது.

இப்போது ஹாச ஜோடியுடன் மற்றும் நால்வர் வந்திருந்தனர். புவிச் செய்தியாளர்கள்... சதியாளர்களும்கூட. பூமி மீட்புப் போராளிகள். அவர்களுடன் மிக எளிமையான டிரான்ஸ்மீட்டர் கருவி. பல்குச்சி அளவுக்கு. செய்தி பரப்புப் பணிக்காக.

‘‘சரி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்றாள்.

‘‘ஏற்கெனவே 100 முறை சொல்லிவிட்டோம். செய்தி வாசிக்க வேண்டும்’’ ராண் சொன்னான்.

‘‘இதற்கெல்லாம் விடிவே இல்லையா? எவ்வளவு நேரம்?’’

‘‘அதுவும் 10 முறை... சரி. 20 நிமிடங்கள்.’’

‘‘எத்தனை நாளைக்கு?’’

‘‘ஒரு வாரத்துக்கு.’’

ஹாசினி மனதுக்குள் பல்லைக்கடிப்பது வெளியே கேட்டது. செய்தி வாசிப்பது அவளுக்கு மிகவும் சாதாரணமான விஷயம்தான். ஆனால், வாழ வழியற்ற பூமியில், மனிதர்கள் எல்லாம் 60 அடி ஆழத்தில் அபயம் தேடிக் கிடக்கும் அவலத்தில் இருக்கும் மக்களுக்குச் செய்தி வாசிப்பது பெரும்துன்பம். அதுவும் செய்திகள் அனைத்தும் கற்பனை. மக்கள் செய்திகளுக்காக ஏங்கிப்போய் கிடக்கிறார்கள் என்பதற்காக இட்டுக்கட்டிச் சொல்லும் செய்திகள்.

ஹாசினி தன் விரிந்த கூந்தலை நெற்றிக்குப் பின்னே தள்ளிவிட்டு, அது மீண்டும் முகத்தின் மீது வந்து விழுவதற்குள் இன்றைய செய்திச் சுருக்கங்களை ஒருமுறை பார்வையிட்டாள். ஃப்ரிவ்யூ ரன்னரில் செய்திகள் திருப்தியாக இருந்தன.

‘`ரெடி?’’ - கட்டைவிரலை உயர்த்தினாள் ராக்‌ஷி.

தயார் என்பதை ஹாசினி எப்போதும் கண்களைச் சிமிட்டி தெரிவிப்பாள்; தெரிவித்தாள். கேமரா இயங்க ஆரம்பித்ததன் அடையாளமாக, பல்குச்சியின்  கொண்டையில் சிவப்புப் புள்ளி தெரிந்தது. செய்திகளை வாசிக்க ஆரம்பித்தாள் ஹாசினி.

`` `துள்ளுவார் துள்ளட்டும்' முப்பரிமாணத் திரைப்படத்தின் தொடக்க விழா, தமிழகத்தின் திரை நகரமான நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.

விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய பொழுதுபோக்குத் துறை அமைச்சர் ரெமோ, ‘`முப்பரிமாணங்களில் பழைய நடிகர்களை மீண்டும் உருவாக்க முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும், இன்னொரு புறம் அவர்களைக் கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'’ என்றார்.

எம்.ஜி.ஆர்., தனுஷ், புரூஸ் லீ இணைந்து நடிக்கும் அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். முதலில் இதற்கு புருஸ் லீ-யின் ஆறாம் தலைமுறை வாரிசு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனுஷின் கொள்ளுப்பேத்தி ஒருவரும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என வழக்கு தொடுத்தார். இப்போது அந்தப் பிரச்னைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டு, இன்று படப்பிடிப்பு ஆரம்பமானது.

அந்த விழாவில் அமைச்சர் மேலும் பேசியதாவது:

`தனுஷ், இருபதே நிமிடங்களில் ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல் புனையும் திறன் பெற்றவராக இருந்தார் என்பதுதான் உண்மை. அதை வைத்து அவர் சீன மொழியும் பல்கேரிய மொழியும் கலந்த பாடல்களைப் புனைந்ததாகச் சொல்லி இருப்பது சரியில்லை. அவருக்கு சீன, பல்கேரிய மொழிகள் தெரிந்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எம்.ஜி.ஆர்., அநீதிகளைத் தட்டிக்கேட்டார் என்ற தகவலையும், அவர் அண்ணாவின் சீடர் என்பதையும் மட்டும் பிடித்துக் கொண்டு அவரை அண்ணா ஹஜாரேவின் சீடரான கெஜ்ரிவால் என தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதுவும் தவறு' என்று அமைச்சர் ரெமோ கூறினார்.

`மகாத்மா காந்தியை ஸ்டன்ட் காட்சியிலும் புத்தரை நடனக் காட்சியிலும் காட்டுவது உங்கள் தொழில்நுட்பத்தின் சாதனையா?’ என சிலர் கேள்வி எழுப்ப, இயக்குநர் மனுஷ்காந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

`மகாத்மா காந்தி ஸ்டன்ட் காட்சியில் தோன்றினார். ஆனால், சண்டை வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத்தான் அந்தக் காட்சியைப் பயன்படுத்தினோம். புத்தர் நடனம் ஆடியது அவர் சித்தார்த்தனாக இருந்தபோதுதான் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.’ இருவரின் கருத்துக்களுக்கும் சராசரியாக ஒரு லட்சம் கைதட்டல்கள் விழுந்துள்ளன.

அடுத்த செய்திக்கான புதிய புன்னகையுடன் ஹாசினி மீண்டும் திரையில் தோன்றினாள். ‘‘புவி காக்கும் நாளை ஒட்டி இன்று இந்தியாவில் ஒரே நாளில் ஒரு பில்லியன் செயற்கை மரங்கள் நடப்பட்டன. கடந்த இருநூறு ஆண்டுகளாக நிலவிவந்த புவி வெப்பமயப் பிரச்னை, இதனால் முடிவுக்கு வந்தது. ‘உலகின் பல பகுதிகளிலும் இன்று செயற்கை மரங்கள் நட்டு இருப்பது குளோபல் வார்மிங் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்’ என தட்பவெப்பத் துறை அமைச்சர் மைக்கேல் இன்று மரம் நடும் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

`செயற்கை மரங்கள், நாட்டின் பிரதான சாலை ஓரம் முழுவதுமே நடப்பட்டன. உடனடியாக செயற்கை மரங்கள் ஆக்ஸிஜனை வெளியிட ஆரம்பித்தன. உலக ஆக்ஸிஜன் அளவு மூன்று புள்ளிகள் உயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாவரங்கள் இயற்கையான தாவரங்களைவிட வேகமாக ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடியவை. சூரிய சக்தியின் மூலம் சோலார் கன்வெர்ஷன் முறையில் கார்பன்டை ஆக்ஸைடை இவை ஆக்ஸிஜனாக மாற்றும். ஸ்டார்ச் முறையைவிட வேகமாக இது நடப்பதால் இன்னும் சில தினங்களில் உலக தட்பவெப்பம் சீராகும் எனத் தெரிகிறது’ என்று அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

‘காற்று வரி செலுத்த நாளையே கடைசி தினம்' என்று அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்தாதவர் களுக்கு நாளை முதல் சுத்திகரிக்கப்பட்ட காற்று நிறுத்தப்படும்’ எனவும் சுகாதாரத் துறை அதிகாரி ராகேஷ் தெரிவித்தார்.

`2147- ம் ஆண்டு இந்தத் திட்டத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்து இதை நாங்கள் கடுமையாக எதிர்த்துவருகிறோம். நாடு சுதந்திரம் அடைந்து 200 ஆண்டுகள் கழித்து நாம் கண்ட பலன் இதுதானா?’ என மக்கள் போராட்டம் நடத்தினர். இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளுக்கு வரி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காற்று வரித் துறை அதிகாரி லியாண்டர், `இந்தப் போராட்டமே வேடிக்கையாக இருக்கிறது. தண்ணீருக்கும் மின்சாரத்துக்கு நிலத்துக்கும் வரி செலுத்தும்போது ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அவையும் இயற்கையாகக் கிடைப்பதுதானே? நிலம் இயற்கையாக அமைந்ததுதான்... வரி செலுத்துகிறோமே. இயற்கையாக இருப்பவற்றுக்கு எதற்கு வரி என்பது சரியான வாதம் அல்ல. சொல்லப்போனால் இயற்கையாகக் கிடைப்பவைக்குத்தான் வரி செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்