சீர்திருத்தத்துக்கும் வேண்டும் சீர்திருத்தம்!

சென்னையில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இளம் குற்றவாளிகள் என அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 32 பேர் மொத்தமாகத் தப்பி ஓட முயன்ற சம்பவம், அதிர்ச்சி அலைகளைப் பரப்புகிறது.
 
தப்பியோடிய சிறுவர்களை போலீஸ் பிடித்தபோது, சில மாணவர்கள் தங்களை பிளேடால் அறுத்துக்கொண்டு விடுத்த மிரட்டல்களையும், போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதையும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். இந்தப் பிரச்னையை இரண்டு கோணங்களில் அணுக வேண்டும்.

சிறைக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கும் வித்தியாசங்கள் உண்டு. முதலாவதாக, சிறைக் கட்டமைப்பு குறித்த பிரச்னைகள். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அந்தச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, குறைந்த அளவு சிறுவர்களே தங்கும் அளவுக்கான பரப்பளவைக்கொண்டது. ஆனால், அங்கே அளவுக்கு அதிகமான சிறுவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சீர்திருத்தப் பள்ளி என்றால், அங்கு முறையாகக் கற்பித்தல் நடக்க வேண்டும்; போதுமான அளவில் வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இருக்க வேண்டும்; முழுமையான நூலகம் இருக்க வேண்டும்; விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. தமிழகம் முழுக்க இருக்கிற சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் இவை எதுவுமே முறையாக முழுமையாக இல்லை.

அரசுப் பள்ளிகளிலேயே போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதபோது, சீர்திருத்தப் பள்ளிகள் மீது அரசும் அதிகாரிகளும் கரிசனம்கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால், உண்மையில் ஒரு நல்ல கல்விச்சூழலை உருவாக்கவேண்டிய அடிப்படை வசதிகள், இந்தச் சீர்திருத்தப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியம். தவிர, சிறுவர்கள் இங்கு இருந்து தப்பிச் செல்வது என்பது முதல்முறை அல்ல. ஒருசில மாதங்களுக்கு முன்னர்கூட இங்கு இருந்து சிறுவர்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டியவை. ஒருபுறம் அடிப்படை வசதிகள் இல்லாத அவலம், இன்னொரு புறம் பாதுகாப்புக் குறைபாடுகள்.

இன்னொரு தேவை, நம் மனநிலையில் ஏற்படவேண்டிய மாற்றம். அதிலும் குறிப்பாக, இளம் குற்றவாளிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும். பெரும்பாலான இளம் குற்றவாளிகள் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கிய சூழலில் இருந்து வருபவர்கள். ஏதோ ஒரு சூழலில் குற்றம் இழைத்து, அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டாலும் அவர்கள் எதிர்காலத்தில் குற்றங்களின் நிழல் படியாமல் வளர வேண்டியது அவசியம். அவர்களுக்கு திறன்மிக்க எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய கடமை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கே இருக்கிறது. வெறுமனே பாடத்திட்டக் கல்வி மட்டும் அல்லாது, அறம் சார்ந்த மதிப்பீடுகளை வலியுறுத்தும் நீதிபோதனை வகுப்புகளும், தொடர்ச்சியான உளவியல் ஆலோசனைகளும், திறன் வளர்த்தல் திட்டங்களும் அவசியம். நமது சிறைக் காவலர்களுக்கும் இளம் குற்றவாளிகளை எப்படி நடத்துவது என்ற பயிற்சி அளிக்கவேண்டும்.

இளம் குற்றவாளிகள் தண்டனைக் காலத்துக்காக அனுப்பப்பட்டாலும், இவர்கள் தொழில் முறை குற்றவாளிகள் அல்ல. இப்படி உள்ளும் புறமுமான மாற்றங்கள் நடந்தால்தான், இப்போது குற்றவாளிகளாக இருக்கும் சிறுவர்களில் பலர், நாளை நமது சமூகத்தின் அறிவார்ந்த மனிதர்களாக உருவாவதற்கான ஆரோக்கியமான சூழல் உருவாகும்.

சீர்திருத்தப் பள்ளிகளுக்கும் சீர்திருத்தம் தேவை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்